‘தென்மாவட்ட மீசைக்கார மாண்புமிகு ஒருவர், தனக்கு ஒதுக்கப்பட்ட துறையில் பெரிய அளவில் வருமானம் இல்லை என, தற்போது கல்குவாரி வேலைகளில் தீவிரம் காட்டிவருகிறார்’ என்கிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள். இதற்காக, தன்னுடைய நெருங்கிய உறவினருக்குக்கீழ் ஒரு பெரிய டீமையே உருவாக்கியிருப்பவர், அவர்கள் மூலம் அந்தப் பகுதியில் இருக்கும் கல்குவாரிகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறாராம். மேலும், கல்குவாரிகளிலிருந்து வரும் வருமானத்தை உடனுக்குடன் தனக்கு நெருக்கமானவர்களின் பெயர்களில், அசையாச் சொத்துகளாக முதலீடு செய்துவருகிறாராம். இந்தத் தகவல்களையெல்லாம் திரட்டியிருக்கும் எதிர்க்கோஷ்டியினர், ஆட்சி மேலிடத்துக்கு ரிப்போர்ட்டாகக் கொடுத்திருக்கிறார்களாம். ‘விரைவில் இது குறித்து மாண்புமிகுவிடம் விளக்கம் கேட்கப்படும்’ என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.
இலைக் கட்சியின் குயின் மாவட்டச் செயலாளர்மீது ஏகப்பட்ட புகார்கள் வரிசைகட்டுகின்றன. நிர்வாகிகள் நியமனம் தொடங்கி உள்ளூர் ஆளுங்கட்சி சீனியர்களுடன் இணைந்துகொண்டு பிசினஸ் செய்வதுவரை அவர்மீது ஏகத்துக்கும் புகார் வாசிக்கிறார்கள், இலைக் கட்சியினர். ஆனால், இது குறித்துக் கட்சித் தலைமை அவரை அழைத்து விசாரிக்கக்கூட இல்லையாம். ‘அந்த நிர்வாகிமீது மட்டும் ஏன் இந்தக் கரிசனம்?’ என விசாரித்தால், “மேலிடத்துக்குப் பெரிய அளவில் ஸ்வீட் பாக்ஸுகளை வாரி இறைத்துத்தான் அவர் மா.செ ஆனார். தடாலடியாக அவரை நீக்கினால், தேவையில்லாத பிரச்னை உருவெடுக்கும் என்பதாலேயே மௌனமாக இருக்கிறது கட்சித் தலைமை” என்கிறார்கள் சீனியர்கள்.
‘நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஏப்ரல் 6-ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பிடிபட்டு ஏழு மாதங்களாகப்போகிறது. இன்னமும் அந்த ஏழரையிலிருந்து தப்பிக்க முடியவில்லையே?’ என்று மனப்புழுக்கத்தில் இருக்கிறாராம் நயினார் நாகேந்திரன். இது தொடர்பான சி.பி.சி.ஐ.டி விசாரணையில், ‘புதுச்சேரி பா.ஜ.க எம்.பி. செல்வகணபதி சொன்னதன்பேரில், தரகர்கள் மூலம் 20 கிலோ தங்கக்கட்டிகளை விற்றே இந்தத் தொகை ஏற்பாடு செய்யப்பட்டது’ என்று ஹவாலா இடைத்தரகர் சூரஜ் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

இதனடிப்படையில் செல்வகணபதிக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸார் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், செல்வகணபதியோ விசாரணைக்கு ஆஜராகாமல், மூன்று மாதங்கள் அவகாசம் கேட்டு சி.பி.சி.ஐ.டி-க்குக் கடிதம் எழுதியிருக்கிறாராம். “இந்த விவகாரத்தில், எவ்வளவோ முயன்றும் டெல்லி மேலிடத்தைச் சந்திக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார் நயினார். மாநிலப் பொறுப்பிலிருக்கும் முக்கிய நிர்வாகிகளும் கைவிரித்துவிட்ட நிலையில் வேறு வழியின்றி, தமிழக ஆட்சி மேலிடத்திடமும் உதவி கேட்டுத் தூது அனுப்பியவர், அங்கிருந்தாவது தனக்கு ஆதரவான வார்த்தைகள் வந்துவிடாதா… என ஆவலோடு காத்திருக்கிறார்” என்கிறார்கள் நயினாருக்கு நெருக்கமானவர்கள்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் சொல்ல, அது குறித்துக் காவல்துறை மேலிடத்திடம் ரிப்போர்ட் கேட்டிருக்கிறது ஆளும் தரப்பு. இதையடுத்து போதைப்பொருள் நடமாட்டம் குறித்து விசாரிக்க, டீம் ஒன்றைக் களத்தில் இறக்கியிருக்கிறது காவல்துறை.
முதற்கட்ட நடவடிக்கையில் சிக்கிய பலரும், தங்களுக்கு ஏதோ ஒரு வகையில் ஆளுங்கட்சியோடு இருக்கும் தொடர்பைக் காட்ட, என்ன செய்வது எனத் தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறதாம் காவல்துறை மேலிடம். எனவே, தற்காலிகமாக அந்த டீமின் செயல்பாட்டைக் கிடப்பில் போடச் சொல்லியிருப்பவர்கள், இது குறித்து ஆட்சி மேலிடத்துக்கு ரிப்போர்ட்டும் அனுப்பியிருக்கிறார்களாம். ‘அங்கிருந்து என்ன பதில் வருகிறதோ, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கலாம் எனக் காத்திருக்கிறார்கள் உயரதிகாரிகள்’ என்கிறது காவல்துறை வட்டாரம்.