சென்னை: கால்பந்து திடல்களைத் தனியாருக்கு வழங்க தீர்மானம்; திரும்பப்பெற்ற மேயர் பிரியா; காரணம் என்ன?

மாநகராட்சிக்குச் சொந்தமான கால்பந்து விளையாட்டுத் திடல்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் சென்னை மாநகராட்சியின் முடிவுக்குக் கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையில், தீர்மானத்தைத் திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி.

நேற்று (அக்டோபர் 29) சென்னை மாநகராட்சி சார்பில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற மாதாந்திர மாமன்ற கூட்டத்தில் 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்றாகச் சென்னையில் அமைந்துள்ள 9 கால்பந்து திடல்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அந்த திடல்களில் பயிற்சி பெற்றுவந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசியல் ரீதியாகவும் எதிர்ப்புகளைச் சந்தித்தது சென்னை மாநகராட்சி.

சென்னை மாநகராட்சி

தீர்மானத்தின்படி, வியாசர்பாடி, நேவல் மருத்துவமனை சாலை, தி.ரு.வி.க. நகர், ரங்கசாமி விளையாட்டு மைதானம், கே.பி பார்க் விளையாட்டு மைதானம், மேயர் சத்தியமூர்த்தி சாலை (டாக்டர் அம்பேத்கர் விளையாட்டு மைதானம்), அம்மா மாளிகை, கோடம்பாக்கம் மெயின் ரோடு, காமகோட்டி நகர், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் உள்ள மைதானங்களைத் தனியாருக்கு வழங்குவதாக இருந்தது.

தனியாருக்கு ஒப்படைத்து அதில் விளையாட ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்துக்கு 120 ரூபாய் பெறலாம் எனத் தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. இதனால் அந்த திடல்களில் பயிற்சி பெறும் ஏழை மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் நிலை கேள்விக்குள்ளாகும் என்று எதிர்ப்புகள் எழுந்தன.

இந்நிலையில், தீர்மானத்தைத் திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக அறிவித்த சென்னை மேயர் பிரியா, “மாணவ – மாணவியர்களின் கோரிக்கையினையேற்று, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தவும், ஊக்கப்படுத்தும் வகையிலும், 9 கால்பந்து செயற்கை புல் விளையாட்டுத் திடல்களைக் கட்டணம் ஏதுமின்றி தொடர்ந்து பயன்பாட்டிற்கு அனுமதிக்க பெருநகர சென்னை மாநகராட்சி தீர்மானித்துள்ளது.

இவ்விளையாட்டுத் திடல்களின் பராமரிப்பு செலவினங்களை மாநகராட்சியே ஏற்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs