தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்குக் கோபம் வரும் என்பதற்காகவே நடிகர் அஜித் குமாருக்கு, தமிழ்நாடு துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாரா எனத் தமக்குத் தெரியவில்லை எனத் தமிழ்நாடு பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தேகம் எழுப்பி இருக்கிறார்.
முன்னதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (அக்டோபர் 29) இரவு, “உலக அளவில் சிறப்புக்குரிய 24H Dubai 2025 & The European 24H Series Championship – Porsche 992 GT3 Cup Class கார் பந்தயத்தில் பங்கேற்கவுள்ள நடிகரும், நண்பருமான அஜித்குமார் சார் அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நம்முடைய SportsTN_ (SDAT) Logo-வை அஜித்குமார் ரேசிங்’ யூனிட்டின், கார், ஹெல்மெட் மற்றும் பந்தயம் தொடர்பான உபகரணங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம்.

இதன்மூலம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையை உலக அரங்கில் பெருமைப்படுத்தி, ஊக்குவித்துள்ள அஜித் சாருக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழிசை சவுந்தரராஜனிடம் இதுதொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த அவர், “துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அஜித்துக்கு வாழ்த்து சொல்கிறார்.. அஜித்துக்கு வாழ்த்துச் சொன்னால் விஜய்க்குக் கோபம் வரும் என்பதற்காகச் சொன்னாரா என எனக்குத் தெரியவில்லை.
ஆனால் உலக அரங்கில் விளையாட்டை முன்னிறுத்துவதற்காக அஜித்துக்கு வாழ்த்து சொல்லிவிட்டு இங்கே சாமானிய மக்கள் விளையாடும் மாநகராட்சி விளையாட்டுத் திடல்களில் 10 பேர் பயிற்சி பெற்றால், ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,200 கட்ட வேண்டும் என மிகக் கொடுமையான தீர்மானத்தை மாநகராட்சி நிறைவேற்றி இருக்கிறது.

இது சாமானிய மக்கள் பயன்பெறும் விளையாட்டுத் திடல்கள். இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன். மாநகராட்சித் திடலுக்குக் கட்டணம் வசூலிக்கும் உத்தரவை மாநகராட்சி உடனே திரும்பப் பெற வேண்டும். போதையிலிருந்து குழந்தைகளை வெளியே கொண்டு வருவதற்கு விளையாட்டு தேவை” என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருக்கிறார்.
இந்நிலையில், தீர்மானத்தைத் திரும்பப்பெற முடிவு செய்துள்ளதாக அறிவித்த சென்னை மேயர் பிரியா, “மாணவ – மாணவியர்களின் கோரிக்கையினையேற்று, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தவும், ஊக்கப்படுத்தும் வகையிலும், 9 கால்பந்து செயற்கை புல் விளையாட்டுத் திடல்களைக் கட்டணம் ஏதுமின்றி தொடர்ந்து பயன்பாட்டிற்கு அனுமதிக்கப் பெருநகர சென்னை மாநகராட்சி தீர்மானித்துள்ளது. இவ்விளையாட்டுத் திடல்களின் பராமரிப்பு செலவினங்களை மாநகராட்சியே ஏற்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs