Madurai Rain: “நிறைய இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது; திமுக திரும்பிக்கூடப் பார்க்கவில்லை” – சசிகலா

“தி.மு.க., அரசு கட்சி நிகழ்வுகளை ஒழுங்காக நடத்துகிறார்கள். அதற்கு உண்டான வேலைகளை மட்டுமே பார்க்கிறார்கள். இதற்காகத் தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை…” என்று வி.கே. சசிகலா குற்றம் சாட்டியுள்ளார்.

பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள மதுரை வந்த வி.கே.சசிகலா, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மதுரையில் கடந்த ஐந்தாறு நாட்களாக அதிக மழை பெய்துள்ளது. நிறைய இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. யாரும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. பந்தல்குடி கால்வாயில் மழைநீர் வடிய வேண்டும். வடியவில்லை தி.மு.க அரசாங்கம் வந்ததிலிருந்து, எங்குமே தூர் வாரவில்லை.

சசிகலா

மதுரையில் முல்லை நகர், குறிஞ்சி நகர் பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. யாரும் சென்று பார்க்கவில்லை. அரசாங்கத்திலிருந்து உதவியும் செய்யவில்லை. நிறைய மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்துள்ளது. பண்டிகை காலத்தில் இந்த அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது. மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள மாசி வீதிகளில் இந்த தீபாவளிக்கு மழையால் சிறிய, பெரிய வியாபாரிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாக உள்ளது.

தி.மு.க அரசு கட்சி நிகழ்வுகளை ஒழுங்காக நடத்துகிறார்கள். அதற்கு உண்டான வேலைகளை மட்டுமே பார்க்கிறார்கள். இதற்காகத் தமிழக மக்கள் வாக்களிக்கவில்லை.

மொத்தத்தில் தமிழக மக்கள் தி.மு.க அரசாங்கத்தின் பிடியில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். நான் செல்லும் இடமெல்லாம் அதைத்தான் மக்கள் சொல்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு விடிவு வரும். 2026-ல் நிச்சயமாக அம்மாவுடைய ஆட்சி வந்தால்தான் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிராமத்திற்குத் தண்ணீர் வழங்கும் தொட்டி இருந்த அரசு இடத்தை ஒரு தி.மு.க நிர்வாகி தனக்குச் சொந்தமாகப் பட்டா போட்டுள்ளார். இதை எப்படி அந்த மாவட்ட நிர்வாகம் வேடிக்கை பார்க்கிறது என்பது ஆச்சரியமாக உள்ளது.

சசிகலா

தமிழக முழுவதும் தி.மு.கவினர் அரசாங்கத்தை நடக்க விடாமல் செய்கிறார்கள். அரசு இடத்தைப் பட்டா போட்டு எடுத்துக் கொள்கிறார்கள். அதிகாரிகள் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறார்கள். இதுதான் இன்றைய நிலைமை.

மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய ஊர்களில் சாலையே தெரியாத அளவிற்குக் குளம் போல் உள்ளது. இதற்கு விரைந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அரசு ஒவ்வொரு இடத்திலும் விழா நடத்தி வருகிறார்கள்.

தி.மு.க அரசுக்கு இன்னும் ஒரு வருஷம்தான் உள்ளது. அனைத்து மாநகராட்சியிலும் அவர்கள்தான் இருக்கிறார்கள். வேலையே நடைபெறவில்லை. எங்குப் பார்த்தாலும் குப்பை கூளமாக உள்ளது. திராவிட மாடல் ஆட்சி என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த ஆண்டு மாணவர்களுக்கு இலவசமாகக் கொடுக்க வேண்டிய பாடப்புத்தகம் கொடுக்கவில்லை. காலாண்டு தேர்வு முடிந்துவிட்டது. எப்போது கொடுக்கப் போகிறீர்கள்?

யார் வேண்டுமென்றாலும் கட்சி தொடங்கலாம். அதை யாரும் தடுக்க முடியாது. எம்.ஜி.ஆர் தி.மு.கவிலிருந்த போது 6000 கூட்டத்திற்கு மேல் பேசி உள்ளார். அம்மா முதல்வராவதற்கு முன்பு கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் வேலை செய்துள்ளார்.

சசிகலா

சமூக நீதியைத் திராவிட தலைவர்கள் நடைமுறைக்குக் கொண்டு வந்தார்கள். அதனால்தான் பட்டி தொட்டியில் உள்ள குழந்தைகள் கூட படிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார்கள். நாம் யாரையும் தட்டிக் கேட்க நமக்குக் கற்றுக் கொடுத்தது பெரியார், அண்ணாதான். ஜாதி, மதம் அவர்கள் பார்த்ததே இல்லை. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் 69 சதவிகித இட ஒதுக்கீடு கொண்டு வந்தார்கள். ஒன்பதாவது அட்டவணையிலேயே சேர்த்து விட்டோம். எந்த மாநிலத்திலும் அதுபோல் நடைமுறையில் இல்லை. தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. இதெல்லாம்தான் சமூக நீதி.” என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs