மகாராஷ்டிரா: இன்று கடைசி நாள்… வேட்பாளர்களை அறிவிப்பதில் கடைசிநாள் வரை இழுத்தடிக்கும் கட்சிகள்!

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கலுக்கு இன்று கடைசி நாளாகும். அரசியல் கட்சிகள் இத்தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு தொடங்கிய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் முடிந்தபாடில்லை. அதுவும் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடியில் இப்பேச்சுவார்த்தை எப்போதும் இல்லாத அளவுக்கு இழுத்தடித்துக்கொண்டே செல்கிறது. இதனால் கடைசி வரை சில தொகுதிகளில் சஸ்பென்ஸ் நீடித்துக்கொண்டிருக்கிறது. அப்படி இருந்தும் இன்னும் 14 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை மகாவிகாஷ் அகாடி அறிவிக்கவில்லை. கூட்டணியில் இடம் பெற்றுள்ள சமாஜ்வாடி கட்சிக்கு இன்னும் தொகுதிகள் அறிவிக்கப்படவில்லை. இதனால் சமாஜ்வாடி கட்சி காத்துக்கொண்டிருக்கிறது.

மகாவிகாஷ் அகாடியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி இதுவரை 103 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறது. உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 85 தொகுதிகளுக்கும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 76 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. மொத்தம் 274 தொகுதிகளுக்கு எதிர்க்கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. சோலாப்பூர் தெற்கு, மீரஜ் உட்பட சில தொகுதிகளுக்கும் காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அந்த வேட்பாளர்களை திரும்ப பெறவில்லையெனில் நாங்களும் அது போன்ற தவறை செய்வோம் என்று சிவசேனா(உத்தவ்) எம்.பி.சஞ்சய் ராவுத் எச்சரித்துள்ளார்.

ஆனால் சோலாப்பூர் தெற்கு தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைமை முடிவு செய்துவிட்டதாக மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டேல் தெரிவித்துள்ளார். மும்பையில் உத்தவ் தாக்கரே தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்து வருகிறார். காங்கிரஸ் கேட்கும் தொகுதிகள் அனைத்திற்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். இது வரை காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் மட்டுமே மும்பையில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் மிகவும் அதிருப்தியில் இருக்கிறது. ஒதுக்கப்பட்ட 10 தொகுதியும் மிகவும் பலவீனமானது என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தி – காங்கிரஸ்

விதர்பா பகுதியில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனாவை காங்கிரஸ் புறக்கணித்து பெரும்பாலான தொகுதிகளை எடுத்துக்கொண்டது. எனவே மும்பையில் உத்தவ் தாக்கரே காங்கிரஸ் கட்சியை புறக்கணித்துவிட்டு தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்துக்கொண்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கவலையுடன் தெரிவித்தனர். மும்பை காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட் சிவசேனாவிற்கு போதிய நெருக்கடி கொடுக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர்கள் குறைபட்டுக்கொண்டனர். ஆளும் மஹாயுதி கூட்டணியில் இதுவரை 275 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பா.ஜ.க 146 தொகுதிக்கும், சிவசேனா(ஷிண்டே) 80 தொகுதிக்கும், அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 49 தொகுதிக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இன்னும் 13 தொகுதிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. பா.ஜ.க தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் இருந்து 4 தொகுதியை சிறிய கட்சிகளுக்கு கொடுத்துவிட்டன. இன்று வேட்பு மனுத்தாக்கல் முடியவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இன்னும் தொகுதி பங்கீடு குறித்து பேசிக்கொண்டிருப்பதால் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நேற்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உட்பட ஏராளமானோர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். தொகுதி கிடைக்காத தலைவர்கள் அதிகமான இடங்களில் சுயேச்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அஜித்பவார், ஏக்நாத் ஷிண்டே, பட்னாவிஸ்

போரிவலி தொகுதியில் முன்னாள் பா.ஜ.க எம்.பி.கோபால் ஷெட்டி சுயேச்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்திருக்கிறார். இது போன்று மாநிலம் முழுவதும் கட்சி தலைமையை மீறி தலைவர்கள் சுயேச்சையாக வேட்பு மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர். இரண்டு நாட்களில் அவர்களிடம் பேசி வேட்பு மனுவை வாபஸ் பெற வைக்கவேண்டிய நிலையில் அரசியல் கட்சிகள் இருக்கின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY