நெல்லை மாவட்டம் பாபநாசம் அணையிலிருந்து சாகுபடிக்காக இன்று (அக்டோபர் 28) தண்ணீர் திறக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவு அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர். ”பாபநாசம் அணையில் இன்று திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சுமார் 86,107 ஏக்கர் பரப்பளவு விளை நிலம் பயனடையும். அத்துடன் குடிநீர்த் தேவைக்கும் பயன்பெறும். அதனால் விவசாயிகள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
விஜய் கட்சி
மேலும், “நடிகர் விஜய் கட்சி தொடங்கியுள்ளார் அவருக்குத் துணை முதல்வர் உதயநிதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துடன் எனது வாழ்த்தையும் சேர்த்துக் கொள்கிறேன். ஏற்கனவே தமிழகத்தின் நடிகர்கள் பலர் கட்சி ஆரம்பித்துள்ளனர் அந்த வரிசையில் தற்போது நடிகர் விஜய்யும் ஆரம்பித்துள்ளார். ஆனந்த் பற்றி நிறைய விஷயங்கள் வருகின்றன.
ஆனந்த புதுச்சேரியைச் சேர்ந்தவர். அங்குள்ள பா.ஜ.க அமைச்சர் நமச்சிவாயத்துக்கு நெருக்கமானவர் என்றும் பா.ஜ.க-வின் மூத்த தலைவர்கள் அமித் ஷா உள்பட மேலும் பல முன்னணி தலைவர்களுடன் நெருக்கமான உறவு உண்டு என்றும் கூறுகிறார்கள். அவரை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளராக எப்படி நியமித்தார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. அதோடு, ’நாங்கள் ஏ டீம், பீ டீம் இல்லை’ என விஜய் சொல்வதுதான் சந்தேகத்தைக் கிளப்புகிறது.
ஒரு கட்சி ஆரம்பிக்கும்போது சில வார்த்தைகளை அவர் தவிர்த்திருக்கலாம் என்பதுதான் என்னுடைய கருத்து. நீங்கள் கேட்டதால் சொல்கிறேன்.
பொதுச்செயலாளர் ஆனந்த்
ஆனந்த் பற்றி விஜய்யின் அப்பா சந்திரசேகர் சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப பிரச்னையின்போது சில கருத்து தெரிவித்திருந்தார். அதாவது, ‘விஜய்யைச் சுற்றிலும் சில குற்றவாளிகள் இருக்கிறார்கள்’ என ஆனந்த்தைக் குறிப்பிட்டிருந்தார். அதனால் விஜய்யின் அப்பா சொன்ன குற்றவாளியை எப்படி அக்கட்சியின் பொதுச்செயலாளராக விஜய் நியமித்தார் என்று தெரியவில்லை ஒருவேளை குற்றவாளி இப்போது நல்ல ஆளாக மாறிவிட்டாரா என்னவோ தெரியவில்லை.
தி.மு.க-வைச் சம்பாதிக்கிறார்கள்.. ஊழல் செய்கிறார்கள் என்று அவர் பேசியதாக என்னிடம் கேட்கிறீர்கள். சில வருடங்களுக்கு முன்பு விஜய் படசூட்டிங்கில் நெய்வேலியிலிருந்தபோது வருமான வரித்துறையினர் அவரைக் கைது செய்ததுபோல வண்டியில் கூட்டி வந்தார்கள். அப்போது அவருக்கு அந்த அளவுக்கு நெருக்கடி கொடுத்திருக்கக் கூடாது என்று தி.மு.க சொன்னோம். குறைந்தபட்சம் அவரது சொந்த வாகனத்தில் வரவாவது அனுமதித்து இருக்க வேண்டும் என்றோம். அப்படியானால் வருமான வரித்துறையில் அவர் ஏதோ குற்றம் செய்த காரணத்துக்காகவே அழைத்து வந்திருக்கிறார்கள். அதனால் அடுத்தவரைக் குற்றம் சொல்லும்போது தான் உண்மையாக இருப்பதுதான் நல்லது.
ரஜினிக்குப் பதிலாக விஜய்
ஏற்கனவே பா.ஜ.க-வில் இருந்து ரஜினியை அரசியலுக்குக் கொண்டுவர முயன்றார்கள் அவர் வரவில்லை அவருக்குப் பதிலாக விஜய்யை ஏற்பாடு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். அது உண்மையா எனத் தெரியாது. பத்திரிகையாளர்கள் நீங்கள்தான் முடிவு எடுத்துக் கொள்ள வேண்டும். நான் அரசியல் பேசவில்லை. நீங்கள் சொல்வதையே நான் பேசுகிறேன். இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் ஒரு கோடியே பதினாறு லட்சம் பேருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 12ஆம் வகுப்பு படித்த மாணவ மாணவியருக்கு உயர் கல்விக்காக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுப் படிக்க வைக்கிறார்கள். படித்து முடித்ததும் கடந்த மூன்று ஆண்டுகளில் 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 75,000 இடங்கள் டி.என்.பி.சி., மூலம் நிரப்பப்பட இருக்கின்றன. எனவே இந்த அரசு எத்தனை விமர்சனங்கள் செய்தாலும் தாங்கக் கூடிய அரசாக, மக்கள் நலனுக்காகத் தொடர்ந்து செயல்படும்.” என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb