திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் வசித்து வருபவர் ஆனந்தராஜ். இவர் மனைவி வள்ளித்தாய். இவருக்கு ஐந்து மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். ஆனந்தராஜ் கடந்த முப்பது வருடங்களாக கணபதிபாளையத்தில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 22-ம் தேதி பல்லடம் காவல்துறையினர் ஆனந்தராஜின் கடை மற்றும் வீடுகளில் குட்கா பொருட்கள் உள்ளதா என சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அதில், ஆனந்தராஜின் மகன் பாக்யராஜ் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்த நிலையில், அவரைக் கைது செய்த போலீஸார் அடுத்த நாள் ஆனந்தராஜின் வீட்டில் குட்கா பொருட்கள் உள்ளதா? என மீண்டும் சோதனை மேற்கொள்ள வேண்டும் என வள்ளித்தாயை அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர். போலீஸார் சோதனை முடிந்த பிறகு வள்ளித்தாயை காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். மீண்டும் இரவு, வள்ளித்தாய் வீட்டிற்கு வந்த பிறகு வீட்டில் வைத்திருந்த 20 சவரன் நகை காணாமல் போனது தெரியவந்தது.
இதுகுறித்து வள்ளியம்மாள் கூறுகையில், “போலீஸார் சோதனை செய்துவிட்டு சென்ற அன்றைய தினம் இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகையைக் காணவில்லை. அந்த நகையை மீட்டுக் கொடுக்குமாறு புகார் அளித்து ஒரு மாதம் காலம் ஆகியும் போலீஸார் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதுகுறித்து பல்லடம் காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.” என்றார்.
இது குறித்து பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷிடம் கேட்டபோது, “வள்ளித்தாய் அளித்துள்ள புகார் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. குட்கா பொருட்கள் உள்ளதா? என சோதனை மேற்கொண்டபோது வீடியோ காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது… வீடியோ காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.