தஞ்சாவூர் பெரிய கோயில் தமிழர்களின் வரலாற்றுப் பொக்கிஷங்களில் முக்கியமானது. எவ்வித நவீன தொழில் நுட்பமும் இல்லாத காலகட்டத்தில் ராஜராஜ சோழன் இப்படி ஒரு பிரமாண்ட கோயிலை எழுப்பியது கட்டிடக்கலையின் உச்சம் என உலக கட்டிடக்கலை வல்லுநர்கள் வியந்து குறிப்பிட்டுள்ளனர். உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகத் திகழும் பெரியகோயில் தஞ்சாவூருக்கு மட்டுமல்ல தமிழகத்தின் பெருமையாகப் பார்க்கப்படுகிறது.

சிமெண்ட் தளம்
தற்போது பெரியகோயில் கருவறையில் உள்ள பெருவுடையார் என அழைக்கப்படும் சிவலிங்கத்திற்கும், விமான கோபுரத்திற்கும் இடையே சிமெண்ட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. ராஜராஜ சோழன் இதை அமைக்கவில்லை. அதன் பின்னர் அமைக்கப்பட்ட இந்த தளத்தை அகற்ற வேண்டும் எனப் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மருத்துவர் சக்திபாபு உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கை வழக்கறிஞர் மணிமாறன் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இதை விசாரித்த நீதிபதிகள் ஆர். சுப்ரமணியன், எல். விக்டோரியா கவுரி அமர்வானது அறநிலையத்துறை ஆணையர், கோயில் செயல் அலுவலர், மத்திய தொல்லியல்துறை மூத்த பாதுகாப்பு அலுவலர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆகம விதிகளுக்கு முரணானது
இது குறித்து மருத்துவர் சக்திபாபு கூறுகையில், “தஞ்சாவூர் பெரிய கோயில் வானுயர்ந்து அமைக்கப்பட்ட பிரமாண்ட விமான கோபுரத்துடன் வரலாற்றுப் பொக்கிஷமாகத் திகழ்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி ஒரு அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறார் ராஜராஜ சோழன். ராஜராஜேஸ்வரம் எனும் பெயரில் எழுப்பிய இக்கோயிலில் பெருவுடையார் என அழைக்கப்படும் பிரமாண்ட சிவலிங்கமும், வானுயர்ந்த விமான கோபுரமும் மெய்சிலிர்க்க வைக்கக் கூடியவை.
பரவெளி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கோயிலை அமைத்துள்ளார் ராஜராஜ சோழன். அப்போது சிவலிங்கத்திற்கும் விமான கோபுரத்திற்கும் இடையே தளம் இல்லாமல் பரவெளியாக இருந்துள்ளது. இதற்கான சான்றுகள் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்ட கோயிலில் காலப்போக்கில் சிவலிங்கத்திற்கும், விமான கோபுரத்திற்கும் இடையே சிமெண்ட் தளம் அமைத்துள்ளனர். இது ஆகம விதிகளுக்கு முரணானது. விமான கோபுரத்தின் உள்பகுதியை உள் கூடாக அமைத்து பரவெளி, ஆடவல்லான் தத்துவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் அதிகாரிகளுக்கு நோட்டீஸ்
கோபுரத்தின் முதல் தளத்தைச் சுற்றிலும் உள்ள சிவதாண்டவ சிற்பங்கள் இதையே உணர்த்துகின்றன. ஆனால் இந்த தத்துவத்திற்கு முற்றிலும் முரண்பட்டதாக அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் தளத்தை அகற்ற வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளேன். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தளம் அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து விளக்கம் கேட்டு நீதிமன்றம் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதன் மூலம் நல்லது நடக்கும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.