நாளை (அக்டோபர் 27) வி.சாலையில் நடக்கும் மாநாட்டில் விஜய் ஏறப்போகும் மேடைதான் அவரின் முதல் அரசியல் மேடை. ஆனால், அரசியல் என்ட்ரிக்கு முன்பே அவரின் திரைப்பட நிகழ்ச்சிகளின் மேடைகளைக் கிட்டத்தட்ட அரசியல் மேடையாகவேதான் விஜய் பயன்படுத்தியிருக்கிறார்.
மறைமுகமாக ரசிகர்களுக்கு மெசேஜ் சொல்வது, குட்டிக் கதைகள் மூலம் அரசியல்வாதிகளைச் சீண்டுவது என மறுநாள் தொலைக்காட்சிகளின் விவாத நிகழ்ச்சிகளுக்கான கண்டெண்ட்டை தெரிந்தே கொடுப்பார் விஜய். எப்படி தன்னுடைய அரசியல் அபிலாஷைகளைப் படங்களின் வழியே வெளிக்காட்டினாரோ அப்படியேதான் அந்தப் படங்களின் நிகழ்ச்சி மேடைகளையும் தன்னுடைய அரசியல் மைலேஜூக்காக பயன்படுத்திக் கொண்டார்.
ஒரு கட்டம் வரைக்குமே விஜய்யின் சினிமா மேடைப் பேச்சுகள் அந்தந்த சினிமா சார்ந்ததாக மட்டுமே இருந்திருக்கிறது. ‘தலைவா’ படத்தின் ரிலீஸில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்குப் பிறகுதான் சினிமா நிகழ்ச்சிகளிலும் விஜய் பன்ச்களை பறக்கவிட ஆரம்பித்திருந்தார். ‘தலைவா’ மாதிரியே கத்தி படமும் எக்கச்சக்க பிரச்னைகளைச் சந்தித்துத்தான் ரிலீஸ் ஆகியிருந்தது.
பல தமிழ் அமைப்புகளும் படத்தின் ரிலீஸூக்கு எதிராகக் கொடி பிடித்துக் கொண்டிருந்த சமயத்தில் நடந்த அந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், “தமிழ்நாடு… தமிழன்… நான் தியாகியும் இல்ல. அதேநேரத்தில் துரோகியும் இல்ல!” எனப் பேசியிருந்தார். தான் ஒரு தமிழன், தமிழ்ப்பற்றாளன் என்பதைத் தொடர்ச்சியாக விஜய் தன்னுடைய படங்களின் வழி அழுந்த கூறிக்கொண்டிருந்ததன் தொடர்ச்சி இது.
மேலும், இலங்கையின் ‘லைகா’ நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்திருந்ததால் விஜய்யை ‘தமிழின விரோதி’ என ஒரு தரப்பு முத்திரை குத்திக் கொண்டிருந்தது. அதற்கான பதிலடியாகவும்தான் அந்த பேச்சு அமைந்திருந்தது. படம் வெளியாகி பெரிய ஹிட் ஆனவுடன் திருநெல்வேலி, கோயம்புத்தூர் என ஊர் ஊராகச் சென்று பொதுவெளியில் ரசிகர்களைச் சந்தித்தும் அந்த வெற்றியைக் கொண்டாடினார் விஜய். அப்படி திருநெல்வேலியில் பேசுகையில், “நாம என்ன ஆயுதத்தை எடுக்கணும்னு எதிரிதான் தீர்மானிக்கிறான். அன்பா பேசுனா அன்பா பேசலாம். வேற மாதிரி பேசுனா வேற மாதிரிதான் பேசணும்.” என உள்குத்தோடு பேசியிருந்தார்.
“விளையாட்ட சீரியஸா எடுத்துக்குறோம். ஆனால், சீரியஸா எடுத்துக்க வேண்டிய விஷயத்தை விளையாட்டா கூட எடுத்துக்க மாட்றோம்” என ‘புலி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட்டை இழுத்து ‘பல்லாண்டு வாழ்க’ எம்.ஜீ.ஆர் ரெபரன்ஸோடு ஒரு குட்டிக் கதையை வீசியிருந்தார். “ஒரு ஆணோட வெற்றிக்குப் பின்னாடி பெண் இருப்பாங்கன்னு சொல்லுவாங்க. ஆனா, என்னோட வெற்றிக்குப் பின்னாடி அவமானங்கள் மட்டும்தான் இருந்திருக்கு” என்றும் அதே நிகழ்ச்சியில் பேசியிருந்தார். தன்னுடைய தொடக்கக்கால கரியரைப் பற்றிப் பேசுகிறேன் என்றுதான் கோடு கிழித்திருந்தார். ஆனால், கொஞ்சம் விஷயம் அறிந்தவர்களுக்கு விஜய் அந்த வசனத்தைப் பேசுகையில் ‘தலைவா’ பிரச்னை கண்முன் வந்து செல்வதைத் தவிர்க்க முடியாது.
‘இந்த உலகத்துல நம்மல அவ்ளோ ஈசியால்லாம் வாழ விடமாட்டாங்க. நாலா பக்கமும் இருந்து பிரஷர் போடத்தான் செய்வாங்க. அதையெல்லாம் தாண்டிதான் வந்தாகணும்”. இது மெர்சல் ஆடியோ விழாவில் அடித்த பன்ச். இந்த சமயத்தில்தான் மக்கள் இயக்கத்தைப் பலப்படுத்தும் விதமாக பூத் கமிட்டிகளை அமைக்குமாறு நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டிருந்தார்.
படம் வெளியானவுடன் நிஜமாகவே நாலா பக்கமிருந்தும் விஜய் மீது தாக்குதலைத் தொடுத்தது பா.ஜ.க. விஜய்யை ஜோசப் விஜய் என அடையாளப்படுத்தினார்கள். விஷயம் இந்திய அளவில் பேசுபொருளானது. ராகுல் காந்தி விஜய்க்கு ஆதரவாக ட்வீட் செய்தார். பிரச்னைகளெல்லாம் ஓய்ந்த பிறகுத் தனக்கு ஆதரவாக நின்றவர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த லெட்டர் பேடில் ‘ஜோசப் விஜய்’ என்றே குறிப்பிட்டு மறைமுகமாகத் தன் மீதான மதரீதியான தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுத்தார். ‘ஆளப்போறான் தமிழன்’ என்கிற பாடலுமே விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கான முன்னறிவிப்பாகத்தான் பார்க்கப்பட்டது.
சர்கார் ஆடியோ விழாவில்தான் விஜய் தன்னுடைய அரசியல் ஆசைகளை அப்பட்டமாக வெளிப்படுத்தினார்.
‘தேர்தல் போட்டிப் போட்டு ஜெயிச்சு சர்கார் அமைப்பாங்க. ஆனா, நாங்க சர்கார் அமைச்சிட்டு தேர்தல்ல நிக்கப்போறோம்!’, ‘முதலமைச்சர் ஆனா நடிக்கமாட்டேன்’, ‘புழுக்கம் ஏற்பட்டா மழை வர்றா மாதிரி… நெருக்கடி ஏற்பட்டா தகுதியானவங்க வந்தே தீருங்க. அவங்க அமைப்பாங்க பாருங்க ஒரு சர்கார்!’, ‘தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி!’ என விஜய் சர்கார் மேடையில் பற்ற வைத்தது அத்தனையும் அரசியல் வெடிதான். சீக்கிரமே கரை வேட்டிக் கட்ட வேண்டியிருக்கும் தயாராக இருங்கள் என்கிற மெசேஜை ரசிகர்களுக்கு வலுவாகக் கடத்தி விட்டிருந்தார்.
சர்கார் வெளியான பிறகுப் படம் ஓடிய திரையரங்கங்களில் விஜய்யின் பேனர்களை அ.தி.மு.க.,வினர் கிழித்தெறிந்து ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டனர். ‘என் பேனர கிழிங்க… போஸ்டர் கிழிங்க… ஆனா என் ரசிகன் மேல கை வைக்காதீங்க!’ என பிகில் ஆடியோ விழாவில் ரத்தத்தின் ரத்தங்களுக்குப் பதிலடி கொடுத்திருந்தார். அதே விழாவில், அ.தி.மு.க.,வின் பேனர் விழுந்து இறந்துபோன சுபஸ்ரீ என்கிற பெண்ணுக்கும் இரங்கல் தெரிவித்திருப்பார். கூடவே, ‘பட்டாசு கடைல வேலை பார்க்குறவன பூக்கடைல கொண்டு போய் உட்கார வைக்க முடியாது. யார் யார எங்கெங்க வைக்கணுமோ அங்கதான் வைக்கணும்.’ எனக் குட்டிக் கதை மூலம் ஊமைக்குத்தாகக் குத்தியிருப்பார்.
வருமான வரித்துறை ரெய்டு நடந்த சமயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில், ‘உண்மையா இருக்கணும்னா கொஞ்சம் ஊமையா இருக்கணுங்க!’ எனத் தன் மீதான அழுத்தங்களை மறைமுகமாகச் சொல்லிச் சென்றார்.
இதுவரை கூறிய அத்தனைக்கும் முத்தாய்ப்பாக அமைந்தது லியோ படத்துக்கான வெற்றிவிழாதான். அதில் வெளிப்படையாக ‘2026 இல் கப்பு முக்கியம் பிகிலு!’ என அரசியலுக்கு வருகிறேன் என்பதை வேறு வார்த்தைகளில் கூறியிருந்தார். அடுத்த நான்கே மாதங்களில் கட்சியையும் தொடங்கிவிட்டார்.
மாநாட்டு மேடையில் விஜய் ஏறுவதற்கான வழித்தடமாக அமைந்தது அவரின் பட விழா பேச்சுகள்தான். அதன்வழியேதான் தன்னைச் சுற்றி அரசியல் சர்ச்சைகளும் விவாதங்களும் எப்போதும் சுழன்றுகொண்டே இருப்பதை விஜய் உறுதி செய்தார்.
கிட்டத்தட்ட வானிலை முன்னறிவிப்பைக் கூறி மக்களைப் பெருமழைக்குத் தயார்ப்படுத்துவதைப் போலத்தான் படவிழாக்கள் மூலம் தன்னுடைய ரசிகர்களை அரசியலுக்குத் தயார்ப்படுத்தினார் விஜய். அவர் முன் இப்போது இருப்பது இமாலயச் சவால். கால்ஷீட் ஒதுக்கி அரசியல் செய்ய முடியாது. அரசியல் என்பது அன்றாட செயல்பாடு. என்ன செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY