தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்தது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் பெய்த மழையால் வயல்களில் தேங்கிய மழை நீரால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள், நடவு செய்யப்பட்ட பயிர் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் பாதிப்பை சந்தித்துள்ளனர். ஒரத்தநாடு அருகே உள்ளது திருமங்கலக்கோட்டை கிராமம். இப்பகுதியை சுற்றியுள்ள விவசாயிகள் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்திருந்தனர்.
அந்த பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன. இந்தநிலையில், தொடர் மழை பெய்தது. இதில் வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது. வடிகால்கள் முறையாக தூர் வாரவில்லை. இதுவே தண்ணீர் தேங்கி நிற்பதற்கு காரணமானது. தேங்கிய நீரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் வயலில் சாய்ந்தன. இதில் நீரில் மூழ்கிய பயிர் முளைக்கத் தொடங்கி விட்டன. மேலும் பயிர்கள் அழுகின. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்திக்க கூடிய நிலைக்கு ஆளாகியிருப்பதாக விவசாயிகள் தரப்பில் வேதனையுடன் கூறி வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “கடந்த ஒரு வாரமாக வயல்களில் தேங்கிய மழை நீர் வடியவில்லை. இதில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் முற்றிலும் சேதமடைந்து விட்டன. தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் எங்களுக்கு இது போன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு ஏக்கருக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்த எங்களுக்கு மழை பாதிப்பை ஏற்படுத்தியதால் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது பயிர் மாதிரி எங்க வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு தான் உரிய நிவாரணம் வழங்கி எங்களை காக்க வேண்டும். பாதிப்பு குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள், மனசாட்சியுடன் நடந்து கொள்ளாமல் அதிகாரிகள் போல் நடந்து கொள்கின்றனர்.” என்று வேதனையுடன் தெரிவித்தனர்.