ரயிலில் ஏசி பெட்டிகளின் பயணம் செல்லும்போது, அங்கு வழங்கப்படுக்கிற வெள்ளை நிற போர்வைகளையும் கம்பளிப் போர்வையையும் பெரும்பாலானோர் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், அந்தப் போர்வைகள் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா என்கிற பலருடைய சந்தேகத்துக்கு சில தினங்களுக்கு முன்னால்தான் விடை கிடைத்தது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் தளம் தகவல் அறியும் உரிமை சட்டம் வழியாக, ‘ரயிலில் ஏசி பெட்டிகளில் வழங்கப்படுகிற போர்வைகளை எத்தனை நாள்களுக்கு ஒருமுறை துவைப்பீர்கள்’ என்று கேள்வி எழுப்ப, ‘வெள்ளை நிற போர்வைகள் ஒவ்வொரு பயன்பாட்டுக்குப் பிறகும் துவைக்கப்படும்; கம்பளிப்போர்வை மாதத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை துவைக்கப்படும் என்கிற பதில் கிடைத்திருக்கிறது.
பராமரிப்பு ஊழியர்களோ, “ஒவ்வொரு பயணத்துக்குப் பிறகும் தலையணை உறைகள், படுக்கை விரிப்புகள் சலவைக்கு எடுத்துச் செல்லப்படும். ஆனால், போர்வை தூய்மையாக இருக்கிறதா என்பது குறித்து முறையான கண்காணிப்பு இல்லை. போர்வைகள் பொதுவாக துர்நாற்றம் வீசினால் அல்லது அழுக்கடைந்தால் மட்டுமே சலவைக்கு அனுப்பப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.
நாட்கணக்கில் துவைக்கப்படாத போர்வைகளால், அவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறதா என, சரும நல மருத்துவர் வானதி அவர்களிடம் கேட்டோம்.
”ஏசி பெட்டிகளில் வெள்ளை நிறப் போர்வையும் இருக்கும். அதை நம் மேலே போர்த்திக்கொண்டு அதன்மேலே தான் கம்பளிப் போர்வையை போர்த்த வேண்டும். ஏனென்றால், சிலருக்கு கம்பளித்துணியே ஒத்துக்கொள்ளாது. சருமத்தில் அலர்ஜி ஏற்படும், அது சுத்தமாகவே இருந்தாலும்… அவர்கள் வீட்டில் இருந்தே போர்வை கொண்டு செல்வதுதான் பாதுகாப்பு.
கம்பளிப் போர்வைகளைப் பிரிக்கையில், அதன் இயல்புபடி தூசிப் பறக்கும். கூடவே, அதை சரியாகவும் பராமரிக்கவில்லையென்றால் தூசி இன்னமும் அதிகமாக பறக்கும். இது அலர்ஜியை ஏற்படுத்தும். ஏற்கெனவே அலர்ஜி, ஆஸ்துமா, சைனஸ் போன்ற பிரச்னை இருப்பவர்களுக்கு அவற்றை அதிகமாக்கும். இதைவிட இன்னொரு முக்கியமான விஷயம், முறையாக பராமரிக்கப்படாத போர்வை மற்றும் தலையணை உறைகளில் ‘Mold and mildew’ என்கிற பூஞ்சைத்தொற்று ஏற்படும். அதிலும் இந்த ‘Mold’ மூச்சுப்பாதையில் அலர்ஜி ஏற்படுத்தும் என்பதால், ஆஸ்துமா நோயாளிகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கம்பளிப் போர்வையை ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் நீரில் சுத்தப்படுத்த இயலவில்லை என்றால், ட்ரை க்ளீன் செய்தால், பயணிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து.

தவிர, சில நேரம் கம்பளிப் போர்வைகளில் சிறுநீர் துர்நாற்றம் வீசும். குழந்தைகளோ அல்லது வயதானவர்களோ அவற்றைப் பயன்படுத்தியிருக்கலாம். இதையும் மனதில் வைத்து கம்பளிப் போர்வைகளின் சுத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது, ஏசி பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு வழிமுறை” என்கிறார், சரும மருத்துவர் வானதி.