இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21-ன் படி மக்களுக்குக் கௌரவமாக வாழ்வதற்கான அடிப்படை உரிமை இருக்கிறது.
அவர்களுக்கு உறைவிடம் அளிக்க வேண்டியது அரசின் கடமை.
பெரிய காம்பவுண்ட் சுவரை ஒட்டி மற்ற மூன்று பக்கமும் தார்ப்பாயோ, ஓலையோ, மரப்பலகையோ, தகரத்தையோ வைத்து அடைத்த ஒரு சிறு பகுதிதான் இன்றும் பல மக்களுக்குத் தங்குமிடமாக சென்னையில் உள்ளன.
அதுவும் கூட இல்லாதவர்களும் இருக்கின்றனர். நடைபாதையில்,
சாலையோரங்களில், பாலங்களுக்கு கீழே, கொசுக்கடியில், குடும்பத்தோடு வாழ்ந்து வருகின்றனர். நாம் தினசரி கடந்து செல்லும் சாலைகளின் ஓரத்க்திலேயே சமைத்துக்கொண்டும், துணி துவைத்துக் கொண்டும் வாழ்கின்றனர்.
சென்னையின் மிக முக்கிய பகுதிகளிலேயே இத்தகைய அவல காட்சிகளைக் காணமுடிகிறதென்றால், பெரும்பாலான மக்களின் பார்வைக்கேப்படாத இடங்களில் வீடற்று வசிக்கிற மக்களின் நிலை எப்போது மாறும்?

ஆங்காங்கே இருக்கிற மாநகராட்சி பொதுக் கழிப்பறைகளை நம்பி தான் இவர்களின் அன்றாட வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.
சென்னை மாநகரத்தின் அனைத்து மண்டலங்களிலும் வீடற்றவர்களாக எத்தனை பேர் இருக்கிறார்கள், அவர்களின் சமூகப் பொருளாதார நிலை எவ்வாறு இருக்கிறது என சென்னை சமூகப் பணிக் கல்லூரியின், நகர்ப்புற ஏழைகளுக்கான மையத்தின் சார்பில் 2022ல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
‘சென்னை மாநகரத்தில் வீடற்றவர்களின் நிலை ‘ என்கிற அந்த ஆய்வில், சென்னையில் 10,672 பேர் வீடற்றவர்களாக இருக்கிறார்கள் எனக் கணக்கிடப்பட்டது.
அவர்களில் ஆண்கள் 4,137, பெண்கள் 2,420, குழந்தைகள் 1,142,
முதியோர் 2,637, மாற்றுப்பாலினத்தவர் 60, மாற்றுத்திறனாளிகள் 178, மன நல பாதிப்புள்ளவர்கள் 98 பேர்.
5,909 பேர் தனியாகவும், மீதம் இருப்பவர்கள் குடும்பமாகவும் (1,298 குடும்பங்கள்) வசித்து வருகின்றனர்.

சென்னையில் வீடற்றவர்களில் பெரும்பாலானோர் பட்டியல் வகுப்பைச் சார்ந்தவர்களாகவும், பெரும்பாலான குடும்பங்கள் மூன்று தலைமுறைகளாக வீடற்ற நிலையில் வாழ்ந்து வருவதாகவும், சுமார் 30% பெண்கள் கணவரை இழந்தவர்கள் எனவும் ஆய்வு முடிவுகள் தெரிவித்திருக்கின்றன.
IRCDUC ( information and Resource Centre for the Deprived urban communities) வெளியிட்டுள்ள ஆய்வில், சென்னையில் 8,331 வீடற்றவர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 3200 பேர் சுவரில்லாத பிளாட்பாரங்களிலும், 903 பேர் மேம்பாலங்களுக்கு அடியிலும் வசிக்கின்றனர்.
சென்னையின் வால் டேக்ஸ் சாலை, பாரீஸ், சென்ட்ரலை சுற்றியுள்ள மெமோரியல் ஹால் போன்ற பகுதிகளுக்கு நாம் நேரில் சென்றபோது, கணிசமான நபர்கள் குடும்பத்தோடு சாலையோரங்களிலும் அல்லது தார்ப்பாய், தகரம்,
மரப்பலகையால் சுற்றப்பட்ட ஒரு சிறிய இடத்தில் வசித்து வருவதை காண முடிந்தது.
இவர்கள் தங்கியிருக்கும் இடத்தின் அருகில் உள்ள கடையின் முகவரியை வைத்து குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

சென்ட்ரல் அருகே உள்ள வால்டேக்ஸ் சாலையில் பெற்றோரை இழந்த மூன்று பள்ளி சிறுமிகள் உள்பட 4 பெண்கள் மற்றும்
ஒரு பள்ளி சிறுவன் ஆகியோர் தங்களுடைய பாட்டி மற்றும் சித்தப்பாவோடு சாலையோரத்தில் வசித்து வருகிறார்கள்.
இந்த குழந்தைகளின் படிக்கிற இடமாகவும் இந்த சாலைதான் இருக்கிறது. அந்த வயதான பாட்டியிடம் பேசியபோது, “நாங்க 30 வருசத்துக்கு மேல இதே இடத்தில தான் இருக்கோம். இங்கையே தான் சமைக்கிறது, 4 பெண் பிள்ளைகளோட தூங்குறதுனு எல்லாமே இதே இடத்தில தான். என்னோட பேத்திக்கும் ஒரு கைக்குழைந்தை இருக்கு அதோட தான் கொசுக் கடியில கிடக்கோம்.
பக்கத்துல இருக்கிற கடை நம்பரை வச்சுதான் ரேசன் கார்டு வாங்கிருக்கோம். ஆதார் கார்டுனு எல்லாத்துலயும் அந்த அட்ரஸ் தான் இருக்கு.
மழை வந்துச்சுனா எதிருல இருக்கிற ஹோட்டலுக்கு முன்னாடி படுத்துப்போம். மழைக் காலத்துல யாராச்சும் சாப்பாடு,
போர்வை தந்து உதவி பண்ணுவாங்க. அதை வச்சு சமாளிசிப்போம்.
என்னோட மகன் கூலி வேலைக்கு போய்ட்டு கொண்டுவர காசை வச்சு தான், நான் என்னோட பேரப் பிள்ளைகள் 5 பேரும் வாழ்ந்துட்டு இருக்கிறோம். வாடகை குடுத்து வாழ வழியில்லப்பா…
நாங்களும் வீடு வேணும்னு கவர்ன்மென்ட் கிட்ட மனு எல்லாம் கொடுத்துப் பார்த்துட்டோம் ஆனா, ஒன்னும் நடக்கல. நான் தான் ரோட்லயே வாழ்ந்துட்டேன்,என்னோட பேரப்புள்ளைகலாவது ஒரு வீட்டுல வாழணும்” என்றார்.
“தங்களுக்கும் ஒரு வீடு கிடைக்க வேண்டும்” என்பதே அந்த பள்ளிக் குழந்தைகளின் ஏக்கமாக உள்ளது.

சென்னையின் மிக முக்கிய பேருந்து நிலையமான, பிராட்வே பேருந்து நிலையத்தை ஒட்டியே சுமார் 20 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தார்ப்பாய் சுற்றப்பட்ட சிறிய குடிசைகளில் வசித்து வருகின்றனர்.
அவர்கள் தலைமுறை தலைமுறையாக இதே இடத்தில் தான் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர். பூ கட்டி விற்பது, லோடு சைக்கிள் தள்ளுவது, காய்கறி வியாபாரம் செய்வது போன்ற தொழில்களைச் செய்கின்றனர்.
இதுபோன்ற வீடற்றவர்களுக்கு அரசு சார்பில் வீடு வழங்கப்பட வேண்டும். அதே வேளையில், சென்னைக்கு வெளியே கண்ணகி நகர், எழில் நகர், செம்மஞ்சேரி, அதைவிட தொலைவிலுள்ள பெரும்பாக்கம் போன்ற பகுதிகளில் குடியிருப்புகளை ஒதுக்கி, உள்ளூரிலிருந்து வெளியூருக்கு கடத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் செயல்களில் ஈடுபட கூடாது. தங்கள் இடத்திலேயே தங்களது வாழ்க்கை மேம்பட அரசு வழிவகைச் செய்ய வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb