‘தேர்தல் வந்துட்டாப் போதும்… சின்ராசை கையில புடிக்க முடியாது’ என்பதுபோல நம்மூர் வேட்பாளர்கள் வாக்குகளை அள்ளப் பல வித்தியாசமான பிரசார யுத்திகளில் இறங்குவார்கள். அதில் ஒன்றுதான் சமையல். அதாவது, அவரவர் தொகுதியில் எது பிரபலமோ அதற்கேற்ற மாதிரி பரோட்டோ போடுவார்கள்… வடை, தோசை சுடுவார்கள்… டீ ஆற்றுவார்கள் – இது இங்கு மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் பிரபலம் போல.
அடுத்த மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பாக முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் களம் காண்கிறார். தேர்தல் பிரசாரத்திற்காக, பென்சில்வேனியா சென்ற டிரம்ப் மக்களின் வாக்குகளை ஈர்ப்பதற்காக பிரென்ச் ஃபிரைஸ் செய்து, அதைப் பக்காவாக பேக் செய்துள்ளார்.
இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள காணொளியில், மெக் டொனால்ட் நிர்வாகியிடம், “எனக்கு வேலை வேண்டும். எனக்கு மெக் டொனால்ட் கடையில் வேலை செய்ய வேண்டும் என்பது ஆசை” என்று டிரம்ப் கேட்கிறார். பின்னர் பிரன்ச் ஃபிரைஸ் தயாரித்து, வாடிக்கையாளருக்கு விநியோகம் வழங்குகிறார்.