India – Canada : மோசமடையும் இந்தியா – கனடா உறவு… இந்த விவகாரத்தில் லாரன்ஸ் பெயர் அடிபடுவது ஏன்?

லாரன்ஸ் பிஷ்னோய் என்றால் இன்றைக்கு பாலிவுட்டில் ஒரு அச்சம் ஏற்படும் அளவுக்கு நிலைமை உருவாகி இருக்கிறது. பஞ்சாப்பில் பாடகர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகளால் அச்சத்தில் வாழ்கின்றனர். இப்போது அதே நிலையை பாலிவுட்டில் உருவாக்க லாரன்ஸ் பிஷ்னோய் முயன்று வருகின்றார். குஜராத்தில் உள்ள சபர்மதி சிறையில் இருந்து கொண்டு இந்தியா, கனடா, அமெரிக்காவில் உள்ள தனது கூட்டத்தினரை வழி நடத்தி வரும் லாரன்ஸ் பிஷ்னோய் யார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழும்.

பஞ்சாப்பில் பாடகர் சித்து மூஸ்வாலா படுகொலை செய்யப்படும் முன்பு வரை லாரன்ஸ் பிஷ்னோய் குறித்து வெளியுலகம் பெரிய அளவில் அறிந்திருக்கவில்லை. சித்து மூஸ்வாலா படுகொலைக்கு பிறகுதான் லாரன்ஸ் பிஷ்னோய் குறித்தும், அவரது கிரிமினல் நடவடிக்கைகள் குறித்தும் அனைவருக்கும் தெரியவந்தது. தற்போது மும்பையில் பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் மிகவும் பிரபலமான முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை இதே லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் சுட்டுக்கொலை செய்துள்ளனர்.

நிஜ்ஜார்

லாரன்ஸ் பிஷ்னோய் இந்தியா மட்டுமல்லாது கனடாவிலும் தனது கிரிமினல் செயல்களை அரங்கேற்றி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்ட லாரன்ஸ் பிஷ்னோய் இப்போது குஜராத் சிறையில் நிரந்தரமாக இருக்கிறார். அவரை வேறு எந்த சிறைக்கும் மாற்றக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகமே உத்தரவிட்டு இருக்கிறது. கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினரை மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக கனடா குற்றம்சாட்டி இருக்கிறது. கடந்த 2023ம் ஆண்டு கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்டார். இதே போன்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மற்றொரு காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் சுக்தூல் சிங்கும் கனடாவில் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் பொறுப்பு ஏற்றுள்ளனர்.

இப்படுகொலைகள் கனடா மண்ணில் நடந்து இருப்பதால் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவிற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி இருக்கிறார். இந்திய உளவுத்துறை கனடாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு எதிரானவர்கள் பற்றிய தகவல்களை சேகரிப்பதாகவும், அதனை பயன்படுத்தி லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் போன்றவர்களை பயன்படுத்தி கனடா பிரஜைகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டி இருக்கிறார்.

இந்திய உளவு அமைப்பான ‘ரா’ வேலைகளை லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் செய்வதாக கனடா போலீஸாரும் குற்றம்சாட்டி இருக்கின்றனர். இந்திய தூதரக அதிகாரிகளே இது போன்ற காரியத்தில் நேரடியாக ஈடுபடுவதாக கனடா குற்றம்சாட்டி இருக்கிறது. ஆனால் அதற்கான ஆதாரங்களை கொடுக்கும்படி இந்திய அரசு கேட்ட பிறகு கனடா ஆதாரங்களை கொடுக்கவில்லை. இதனால் இரு நாடுகளும் தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் அளவுக்கு உறவு மோசம் அடைந்திருக்கிறது. இந்த பிரச்னையால் இந்தியா மற்றும் கனடா இடையிலான உறவு ஒரு ஆண்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகவும் மோசம் அடைந்திருக்கிறது.

ஜஸ்டின்

இது குறித்து அமெரிக்க அரசியல் ஆய்வாளர் மிக்கேல் கூறுகையில், “இந்தியா மற்றும் கனடா உறவு மிகவும் மோசமான நிலைக்கு சென்று இருக்கிறது. இந்தியாவிற்கு கனடா புதிய பாகிஸ்தானாக மாறியிருக்கிறது. தீவிரவாதம் விவகாரத்தில் இந்தியா கனடாவை மற்றொரு பாகிஸ்தானாகத்தான் பார்க்கிறது. இதனால் இந்தியா பாகிஸ்தான் உறவை விட இந்தியா-கனடா உறவு மோசமாக பாதித்து இருக்கிறது” என்று தெரிவித்தார்.

இந்த அளவுக்கு பேசப்படும் நபராக மாறி இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயிக்கு கனடாவில் கணிசமான ஆட்கள் இருக்கின்றனர். அவரின் நெருங்கிய கூட்டாளி கோல்டி பிரர் கனடா மற்றும் அமெரிக்காவில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்த அளவுக்கு இந்தியா மற்றும் கனடா இடையிலான உறவு மோசமடைவதற்கு காரணமாக இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

லாரன்ஸ் பிஷ்னோய் பஞ்சாப்பில் பாகிஸ்தான் எல்லையையொட்டிய கிராமத்தில் 1993-ம் ஆண்டு பிறந்தார். அவர் பிறந்தபோது குழந்தை ஐரோப்பாவை சேர்ந்தவர்கள் போன்ற கலரில் இருந்ததால், லாரன்ஸ் என்று பெயர் வைத்ததாக அவரின் தாயார் சுனிதா தெரிவித்துள்ளார். லாரன்ஸ் சொந்த ஊரான தத்தரன்வாலி கிராமத்தில் அவரது குடும்பத்திற்கு 100 ஏக்கர் நிலம் இருந்தது. பள்ளிப்படிப்பை சொந்த கிராமத்தில் முடித்துக்கொண்டு கல்லூரி படிப்புக்காக சண்டிகர் சென்ற போதுதான் லாரன்ஸ் வாழ்க்கை அடியோடு மாறியது.

கல்லூரியில் படித்த போது மாணவரணித் தலைவராக தனது வாழ்க்கையை தொடங்கிய லாரன்ஸ், சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். அதோடு கொலை முயற்சியிலும் ஈடுபட்டார். லாரன்ஸ் பிஷ்னோய் கல்லூரியில் படித்த போது சிறு சிறு குற்றங்கள் செய்துவிட்டு சிறைக்கு சென்ற போது அங்கு அடைக்கப்பட்டிருந்த கிரிமினல்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அத்தொடர்பு லாரன்ஸ் செயல்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது. அதன் மூலம் தனது குற்றச்செயல்களை விரிவாக்கிக்கொண்டதோடு, தனது கூட்டத்தையும் விரிவாக்கம் செய்தார். கல்லூரியில் ஒருமுறை லாரன்ஸ் காதலித்த பெண்ணை அவரின் எதிரிகள் உயிரோடு எரித்துக்கொலை செய்துவிட்டனர்.

அச்சம்பவத்திற்கு பிறகு லாரன்ஸ் அடியோடு கேங்க் தலைவனாகவே மாறிவிட்டார். தற்போது உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, அமெரிக்கா, கனடாவில் அவரின் ஆட்கள் விரிந்து காணப்படுகின்றனர். இது குறித்து ‘யார் சித்து மூஸ்வாலாவை கொன்றது’ என்ற புத்தகத்தை எழுதிய ஜுபிந்தர்ஜித் சிங் கூறுகையில், “பஞ்சாப்பில் பெரிய மற்றும் பணக்கார குடும்பத்தில் இருந்து கேங்க்ஸ்டர் வருவது ஒன்றும் புதிதல்ல. நான் எதாவது ஒன்றை செய்யவேண்டும் என்று கூறி வாழ்பவர்கள். லாரன்ஸ் பிஷ்னோய் கூட எப்போதும் நான் ஏதாவது பெரிய காரியத்தைச் செய்ய வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருப்பார். தனது பிராண்ட் மதிப்பை அதிகரித்துக் கொள்வதற்காகத்தான் சித்து மூஸ்வாலா, பாபா சித்திக் படுகொலைகள் நடந்துள்ளது. இதன் மூலம் மிரட்டி பறிக்கப்படும் பணத்தின் அளவை பல மடங்கு அதிகரித்துக்கொள்ள முடியும். பிஷ்னோய் கேங்க் தங்களது பெயரை நிலைநிறுத்திவிட்டனர். துப்பாக்கியுடன் வாழும் லாரன்ஸ் போன்றவர்கள் துப்பாக்கியால்தான் சாவார்கள்” என்றார்.