தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் அதன் பொன்விழா ஆண்டு இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியோடு, இந்தி மாத நிறைவுக் கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டது. ஆளுநர் ஆர்.என். ரவி இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும்போது, `தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி வரும்போது சிறு குழப்பம் ஏற்பட்டு, அந்த வரி படப்படாமல் அடுத்த வரியிலிருந்து பாடல் தொடர்ந்தது.
அதைத்தொடர்ந்து, விழாவில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “கடந்த 3 ஆண்டுகளில் மாநிலத்தின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் சென்றிருக்கிறேன். பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் மாணவர்களுடன் கலந்துரையாடியிருக்கிறேன். அங்கெல்லாம், தமிழக மக்களிடம் இந்தி கற்கும் ஆர்வம் அதிகரித்து வருவதைக் கண்டேன். தமிழக மக்களிடையே இந்திக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது. இந்தி என்பது திணிப்பு மொழி அல்ல. இந்தி திணிக்கப்படவில்லை. பாரதத்தின் ஒவ்வொரு மொழியும் கொண்டாடப்படுகிறது. ஒன்றைவிட ஒன்று பெரியது என்ற பேச்சுக்கே இடமில்லை.
தமிழ் மிகவும் பழமையான மொழி என்பதில் பெருமைகொள்கிறோம். எதிர்பாராத விதமாக, தமிழ்நாட்டு அரசியலில் கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டைத் தனிமைப்படுத்தும் முயற்சி தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக மக்களின் எண்ணத்தில் நச்சு நிரப்பப்பட்டிருக்கிறது. அவர்கள் இனிமேல் இங்கு வெற்றிபெறுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. இந்த நாட்டில் 28 மாநிலங்கள் இருக்கிறது. ஆனால், தமிழ்நாடு மட்டும்தான் மலையாளம், கன்னடம், தெலுங்கு என எந்தவொரு பிற இந்திய மொழியையும் அனுமதிப்பதில்லை.
இவர்கள், தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பைத் துண்டிக்க விரும்புகிறார்கள். இங்கிருக்கும் இளைஞர்கள் கன்னடம், மலையாளம் தெரியாததால் கர்நாடகா, கேரளா செல்வதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். மொழிவாரியாக மக்கள் தனிமைப்படுத்தும்போது, மற்றைவைகளிருந்தும் அவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளாக இதுதான் இங்கு நடந்துகொண்டிருக்கிறது” என்று பேசினார்.