அமெரிக்க மண்ணில் குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் விகாஸ் யாதவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருக்கிறது அமெரிக்க புலன் விசாரணை அமைப்பான FBI.
அமெரிக்க நீதித்துறை முன்னாள் இந்திய அரசு அதிகாரியான விகாஸ் யாதவ் (39) குற்றவாளி என கடந்த செவ்வாய் அன்று அறிவித்தது. விகாஸ் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தால் பணியமர்த்தப்பட்ட முன்னாள் RAW அதிகாரியாவார்.
வியாழக்கிழமை புது தில்லியில், இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், இந்த வழக்கு தொடர்பாக அமெரிக்க நீதித்துறை (DoJ) குற்றப்பத்திரிகையில் புகைப்படத்துடன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளா விகாஸ் குறித்து “அவர் இப்போது இந்திய அரசின் ஊழியர் அல்ல” எனக் கூறினார்.
தீவிர காலிஸ்தானி அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன் மீது கொலை முயற்சி நடத்தப்பட்டது. குர்பத்வந்த் சிங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் இந்த வழக்கில் விகாஸ் யாதவ் மீது கூலிக்கு கொலை செய்தல், பணமோசடி உள்ளிட்ட குற்றங்களைப் பதிந்திருக்கிறது அமெரிக்க நீதித்துறை.
விகாஸ் யாதவ் முன்னதாக இந்தியாவின் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றியுள்ளார். ‘போர் கலை’ மற்றும் ‘ஆயுதங்களைக் கையாளுதல்’ ஆகியவற்றில் அதிகாரிக்கான பயிற்சிகளைப் பெற்றுள்ளார்.
இந்த வழக்கில் விகாஸ் யாதவ் முதன்மை குற்றவாளி அல்ல. “CC-1” (co-conspirator) அதாவது இணைச் சதிகாரர் எனக் கருதப்படுகிறார். “இந்திய அரசு அதிகாரியான இவர், மற்றொரு குற்றவாளியுடன் இணைந்து அமெரிக்க குடிமகனை கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார்.” என்றார் FBI இயக்குனர் கிறிஸ்டோபர் ரே (Christopher Wray).
இந்த வழக்கின் முதன்மைக் குற்றவாளி நிகில் குப்தா கடந்த ஆண்டு செக் குடியரசு நாட்டில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
முன்னாள் RAW அதிகாரி விகாஸ் யாதவின் மூன்று புகைப்படங்களுடன் ‘wanted’ போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் விகாஸ் யாதவ் என்ற நபர் விகாஸ் என்றும் அமனத் அன்றும் அறியப்படுகிறார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க வழக்குரைஞர்கள் கூறுவதன்படி, குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய விகாஸ் யாதவ் மற்றும் நிகில் குப்தா சார்பில் கொலையாளி ஒருவருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வசித்துவரும் விகாஸ் யாதவ் இந்த வழக்கில் இங்கிருந்தே துணை புரிந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த கொலை முயற்சியில் இந்திய அரசுக்கு எவ்வித பங்கும் இல்லை என மறுத்துள்ளது அரசு. அமெரிக்கர் மீதான கொலை முயற்சியை விசாரிக்க விசாரணை ஆணையமும் அமைத்துள்ளது இந்திய அரசு.
இந்த வழக்கில் இந்திய அரசின் ஒத்துழைப்பு திருப்தி அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் கூடுதல் ஒத்துழைப்பு தேவை என்றும் கேட்டுக்கொண்டனர்.
இந்திய விசாரணைக் குழுவின் தகவல்களை அமெரிக்க விசாரணைக் குழுவுக்கும் அவர்களது குழுவின் தகவல்களை இந்தியாவுக்கும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றுக் கேட்டுக்கொண்டுள்ளார் அமெரிக்க செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர்.