தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்ட இரண்டே நாள்களில் மீண்டும் புதிய வரலாற்றை படைத்துள்ளது.
‘இப்போவா…அப்போவா’ என்று இந்த மாதம் தொடக்கம் முதலே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது…நேற்று முன்தினம் நடந்தது. ஆம்…தங்கம் விலை கடந்த புதன்கிழமை கிராம் ஒன்றுக்கு ரூ.7,140-க்கும், பவுன் ஒன்றுக்கு ரூ.57,120-க்கும் விற்பனை ஆகி, முதன்முதலாக தங்கம் விலை ரூ.57,000-த்தை தாண்டியிருந்தது.
அப்போதே, “உலக நாடுகளுக்கு இடையே நடக்கும் போர், அமெரிக்காவில் நடக்க உள்ள போர், உலக நாடுகளின் பொருளாதார நிலை போன்ற காரணங்களால் தற்போதைக்கு தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை” என்று பொருளாதார நிபுணர்கள் கூறியிருந்தனர்.
அதற்கேற்ற மாதிரி இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,160-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.57,280-க்கும் விற்பனை ஆனது. இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.7,240 ஆகவும், பவுனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.57,920 ஆகவும் விற்பனை ஆகி வருகிறது. இன்னும் ரூ.80 உயர்ந்தால், தங்கம் விலை பவுனுக்கு ரூ.58,000-த்தை தொட்டுவிடும்.
அடுத்தடுத்து பண்டிகைகள், முகூர்த்த நாட்கள் வரவிருக்கும் நிலையில், தங்கம் விலை இப்படி தாறுமாறாக உயர்வது மக்களிடையே அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.