Bomb Threat: `4 நாட்களில் 34 விமான வெடிகுண்டு மிரட்டல்கள்!’ – என்ன செய்யப்போகிறது மத்திய அரசு?!

‘இந்த’ பிளைட்டில் ‘இங்கே’ வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில், இந்த மிரட்டல் மெசேஜ் அல்லது இமெயில் மூலம் கிட்டத்தட்ட 34 விமானங்களுக்கு வந்துள்ளது. நேற்று மட்டும் 15 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இதற்கு முன்பு, ‘விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டலே வந்ததில்லையா?’ என்று கேட்டால், ‘வந்திருக்கிறது… ஆனால், இந்த மாதிரி தொடர்ச்சியாக மிரட்டல்கள் வந்ததில்லை’.

இப்படியொரு மிரட்டல் மெசேஜை பார்த்ததும் விமானத்துக்கும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் அலர்ட் கொடுத்து ‘பரபர’ என விமானத்தை முழுவதும் சோதனை செய்து பார்த்தால், ‘அது வெறும் மிரட்டல்’ மட்டும்தான் என்று தெரியவருகிறது. அப்போது தான் விமானிகள், விமான நிலைய அதிகாரிகள், பயணிகள் சற்று நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.

விமானம்

17 வயது சிறுவன்…

கடந்த திங்கட்கிழமை மும்பையில் இருந்து கிளம்பும் மூன்று விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டது. உடனே, அந்த மூன்று விமானங்களை முழுவதுமாக சோதித்தபோது, அந்த மிரட்டல் பொய்யானது என்பது தெரியவந்தது. ‘இதற்கு பின்னால் யார் இருக்கிறார்?’ என்ற விசாரணையில், ‘அந்த மூன்று மிரட்டல்களையும் விடுத்தது சண்டிகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன்’ என்ற அதிர்ச்சி போலீஸாருக்குக் காத்திருந்தது.

பாதுகாப்பே முக்கியம்!

சமீபத்தில் வந்த வெடிகுண்டு மிரட்டல்கள் பெரும்பாலும் எக்ஸ் தளத்தில் தான் வந்துள்ளது. வந்த 34 மிரட்டல்களில் இப்போதைக்கு வெறும் மூன்று மிரட்டலுக்கு பின் உள்ளவர் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

“தொடர் வெடிகுண்டு மிரட்டல்களுக்கு கடும் கண்டனங்கள். இந்த மிரட்டல்கள் குறித்து விசாரிக்க உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

பயணிகள், பங்குதாரர்கள் மற்றும் தொழில் பார்டனர்கள் அனைவரின் பாதுகாப்பும் உறுதி செய்வதற்கான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்தப்படும்.

பயணிகளின் பாதுகாப்பே எங்களுக்கு மிக முக்கியம்” என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

0.01 சதவிகிதம் தான் ரிஸ்க்!

“விமானம் கிளம்புவதற்கு முன்பு, மிரட்டல் வந்தால் பயணிகளை உடனடியாக வெளியேற்றி முழு சோதனை மேற்கொள்ளப்படும். ஒருவேளை விமானம் கிளம்பியதும் மிரட்டல் வந்தால், அருகில் இருக்கும் விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படும்.

விமானத்திற்கு வரும் 99.99 சதவிகித வெடிகுண்டு மிரட்டல்கள் பொய்யானது என்று எங்களுக்கு நன்கு தெரியும். ஆனாலும், 0.01 சதவிகிதத்தில் ரிஸ்க் எடுக்க எங்களுக்கு உடன்பாடில்லை.

அதனால் தான், விமானத்திற்குள் செல்லும் முன்பு அத்தனை சோதனைகள் செய்திருந்தாலும், மிரட்டல் வந்ததும் மீண்டும் சோதனை செய்யப்படுகிறது” என்று சீனியர் விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

மிரட்டல்களின் விளைவு…

‘உலக அளவில் இந்தியாவின் பெயரை கெடுக்கும் விதமாக, இந்த பொய் மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன’ என்று இந்தியா இந்த மிரட்டல்கள் குறித்து கருத்து கூறியுள்ளது.

இந்த தொடர் மிரட்டல்களால், விமானத்தில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு தேவையில்லாத பயம், பதற்றம் ஏற்படுகின்றன. இனி விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கும் இந்த தாக்கங்கள் இருக்கும். மேலும் வெளிநாட்டு பயணிகளுக்கு இந்திய விமானங்கள் மீது நம்பிக்கையின்மை ஏற்படும். முக்கியமாக, விமான நிலையங்களின் பங்குதாரர்கள் வேறு பாதகமான முடிவுகளை கூட எடுக்கலாம்.

மிரட்டல்களின் விளைவு…

ஏர் மார்ஷல்கள்…

இதையும் தாண்டி, 1999-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஏர் இந்தியா விமானம் கடத்தப்பட்ட பிறகு, தேசிய பாதுகாப்பு படையில் பாதுகாப்பு பெற்ற ஏர் மார்ஷல்கள் பயணிகள் விமானத்தில் பணி அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அபாய பகுதிக்கு அல்லது பகுதியில் செல்லும் விமானங்களில் சாதாரண உடையில் மக்களோடு மக்களாக இவர்கள் பயணம் மேற்கொள்வார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறை பெரும்பாலான விமானங்களில் இருந்து விலக்கப்பட்டது.

தற்போது…

தற்போது தொடர் வெடிகுண்டு மிரட்டல்களால், மத்திய விமான போக்குவரத்து துறை இரண்டு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

ஒன்று, இந்திய விமானங்களில் ஏர் மார்ஷல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது.

இன்னொன்று, இனி விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பவர்களுக்கு 5 ஆண்டுகால சிறைத் தண்டனை கொடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்வது.

ஆக, வெடிகுண்டு மிரட்டல் சம்மந்தமான தீவிரமான விசாரணையிலும், முன்னெச்சரிக்கையிலும் இறங்கியுள்ளது மத்திய அரசு.