ஒரு காலத்தில் சேமிப்புக்குப் பெயர் பெற்று விளங்கிய நம் நாட்டின் நிலைமை, இன்று தலைகீழாக மாறிவிட்டது. கடன் என்றாலே பயந்து ஒதுங்கியவர்கள், இன்று போட்டி போட்டு கடன்களை வாங்கிக் குவிக்கிறார்கள்.
ஒருபக்கம், வங்கிகள், நிதி நிறுவனங்கள் பல்வேறு கடன்களை மக்களிடம் விற்பனை செய்கின்றன. இன்னொரு பக்கம், ‘எந்த ஆவணங்களும் வேண்டாம், ஒரே க்ளிக்கில் உடனே கடன்’ எனக் கடன்களை வாரி வழங்குகின்றன ஃபின்டெக் கம்பெனிகள். எளிதாகவும் விரைவாகவும் கிடைப்பதால், இவற்றைப் பலரும் வரப்பிரசாதமாக நினைக்கிறார்கள். உண்மையில் இவற்றில் இருக்கும் பிரச்னைகள் யார் கண்ணுக்கும் புலப்படுவதில்லை.
‘செயலிகள் மூலமாகக் கடன் தரும் ஃபின்டெக் நிறுவனங்கள், ரூ.1 கோடி முதலீடு செய்து, ரூ.5 கோடி லாபம் ஈட்டியிருக்கின்றன’ என்கிற அதிர்ச்சிகர தகவலை அமலாக்கத் துறை வெளியிட்டுள்ளது. ஆம், கடன் தொகையில் 30% முதல் 40% வரை புராசஸிங் கட்டணமாக இந்த நிறுவனங்கள் பிடித்துக் கொள்கின்றன (ரூ.5,000 கடனுக்கு, புராசஸிங் கட்டணம் மட்டுமே ரூ.1,500). அநியாயமாக, 36% வரை வட்டியும் வசூலிக்கின்றன. இந்தப் பகல் கொள்ளையோடு, நம் மொபைலில் உள்ள தகவல்களையும் திருடிவிடுகின்றன இந்த நிறுவனங்கள்.
கடனைத் திருப்பி வாங்குவதற்கு, கஸ்டமர் கேர் மூலம் தொடர்ந்து தொல்லை கொடுப்பது, திருட்டுப் பட்டம் கட்டுவது, குடும்பத்தினரை, நண்பர்களை போன் மூலம் அழைத்து ஆபாச மிரட்டல்கள் விடுப்பது போன்ற பல்வேறு முறைகேடான வழிகளையும் இவை பின்பற்றுகின்றன.
இதுபோன்ற கடன் செயலிகளுக்கு இந்தியர்கள் உரிமையாளர்களாக இருந்தாலும், இவற்றுக்குப் பின்னால் சீன நிறுவனங்கள் இருப்பதாக அமலாக்கத் துறை தெரிவிக்கிறது. சமீபத்தில் கேஷ்பீன் (Cashbean) என்ற கடன் செயலி நிறுவனம், சீனாவில் இருப்பவர்களுக்கு ரூ.429 கோடியை முறைகேடாக அனுப்பியுள்ளது FEMA சட்டத்தின் கீழ் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தக் கடன் செயலிகள் ஏதேனும் ஒரு என்.பி.எஃப்.சி-யுடன் (NBFC-Non-Banking Financial Company) இணைந்துதான் செயல்பட முடியும். அப்படியிருக்கையில், ரிசர்வ் வங்கிக்குக் கீழ் வரும் என்.பி.எஃப்.சி-கள் யாருடன் இணைந்து கடன் வழங்குகின்றன. அந்த நிறுவனங்களுக்குப் பின்னால் இருப்பது உண்மையில் யார் என்பதைக் கண்காணிக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் இதுபோன்ற கடன் செயலிகளை முளையிலேயே கிள்ளி எறிய முடியும்.
இந்தக் கடன் செயலிகள் பெரும்பாலும், வேலை தேடும் இளைஞர்கள், பண நெருக்கடியில் இருப்பவர்கள், பணத் தேவையில் இருப்பவர்களைக் குறிவைத்து வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலமே வலைவீசுகின்றன. எனவே, உஷாராக இருக்க வேண்டிய முதல் பொறுப்பு நம்முடையதே!
கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. அதிலும், இதுபோன்ற கடன் செயலிகள் மூலம் வாங்குவதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது!
– ஆசிரியர்