Rain Alert: சென்னைக்கு ஏன் மீண்டும் ரெட் அலர்ட்… வானிலை ஆய்வு மையம் கூறும் விளக்கம் என்ன?

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு கடந்த இரண்டு நாள்களாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த சூழலில், நேற்றிரவு முதலே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படிப்படியாக மழை குறைந்தது. அதேசமயம், தெற்கு ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் மழை வெளுத்துவாங்கியது.

சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இப்படியிருக்க, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்தது. இந்த நிலையில், எதற்காக ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து செய்தியாளர்களிடம் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கமளித்திருக்கிறார்

அதில் பாலச்சந்திரன், “கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்திருக்கிறது. வடகிழக்குப் பருவமழை தீவிரமாக இருக்கிறது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு நிலை, மேற்கு வடமேற்கு திசையில் நாளை அதிகாலை புதுவைக்கு நெல்லூருக்கும் இடையே, சென்னைக்கு அருகே கரையைக் கடக்கக் கூடும். இதன் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழை பெய்யக்கூடும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

பாலசந்திரன்

17-ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. காற்றழுத்தத் தாழ்வு நிலை இன்னும் வலுவிழக்கவில்லை, கரையை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. நாளை காலை கரைக்கு அருகில் வருகின்றபோது மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கின்ற காரணத்தினால் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் கொடுத்திருக்கிறோம். மேலும், இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போதைக்கு புயலாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை” என்று கூறியிருக்கிறார்.