டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக்கோரி தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை பஸ் நிலையம் முன்பு கடந்த 2018-ல் தாளாண்மை உழவர் இயக்க தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து அம்மாப்பேட்டை போலீஸார் 247 பேர் மீது வழக்கு பதிவு செய்ததுடன் 21 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை தஞ்சாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண்-1ல் நடந்து வருகிறது. இந்த வழக்கில் நேரில் ஆஜராவதற்காக தஞ்சாவூர் வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஓ.என்.ஜி.சி புதிய எண்ணெய் கிணறுகள் தோண்ட கூடாது என்பதை வலியுறுத்தி அம்மாபேட்டையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினோம். இதற்கு அப்போதைய அ.தி.மு.க அரசு எங்கள் மீது வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் தடை வாங்கப்பட்டது.
ஆனால் எனக்கு சம்மன் அனுப்பப்பட்டதால் நான் ஆஜர் ஆனேன். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னர் பெய்த கனமழையில் 5 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரண தொகையை முதலமைச்சர் அறிவித்துள்ளார். கள்ளச்சாராய மரணத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டது. மனித உயிர் விலை மதிக்க முடியாதது. நிவாரணம் என்பது ஒரே மாதிரியாக வகுக்க வேண்டும். குறைந்தது ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். டெல்டா மாவட்டங்களான பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயம், நீர்வளத்தை பாதிக்கும் எந்த தொழிற்சாலையும் கொண்டு வரக் கூடாது. இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசால் தமிழ் ஈழ மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை” என்றார்.