மழைக்காலங்களில் பச்சிளம் குழந்தைகள் முதல் பத்து வயதுக்குள் இருக்கிற குழந்தைகள் வரை அவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது, அம்மாக்களுக்கு மிகவும் கடினமான ஒன்று. அவர்களுக்கு டிப்ஸ் தருகிறார் பொது மருத்துவர் ஹேமமாலினி.

பச்சிளம் குழந்தைகளுக்கு…
”மழைக்கால மாதங்களில் பிறந்த பச்சிளங்குழந்தைகளை எப்போதும் வெதுவெதுப்பாக வைத்திருக்க வேண்டும்.
குழந்தையின் அம்மாவைத்தவிர, குடும்பத்தில் யாருக்கேனும் சளி, காய்ச்சல் போன்ற பிரச்னைகள் இருந்தால் அவர்கள் குழந்தையை தொடவும் கூடாது. பச்சிளம் குழந்தையை விட்டுத் தள்ளியும் இருக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு கையுறை, காலுறை கட்டாயம் அணிவிக்க வேண்டும். குழந்தையின் நெஞ்சுப்பகுதி முழுமையாக மூடியிருக்கும்படியான ஆடைகளை அணிவிக்க வேண்டும். கம்பளி ஆடை அணிவிக்கிறீர்கள் என்றால், அதனுள்ளே கட்டாயம் முழுக்கையுடன் ஒரு காட்டன் ஆடை அணிவிக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் மிகவும் குளுமையாக இருந்தால், அம்மா குழந்தையை நெஞ்சோடு அணைத்துக்கொள்ளலாம்.
குழந்தைகளின் துணிகளை வெந்நீரில் துவைத்து, பேன் காற்றிலாவது நன்கு காயவைத்தே பயன்படுத்த வேண்டும்.
குழந்தைகளின் நாப்கின்களை ஈரமானவுடன் உடனுக்குடன் மாற்ற வேண்டும்.
மழை நேரத்தில் குழந்தைகளுக்கு வெந்நீர் டவல் பாத் கொடுத்தால் போதும். வெயில் வரும் நேரத்தில், மிதமான சூட்டில் குளிக்க வைக்கலாம். ஆனால், எண்ணெய்க்குளியல் கூடவே கூடாது.

ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு…
மழை மாதங்களில் பொதுவாக தாகம் எடுக்காது. அதனால், குழந்தைகள் அவர்களை அறியாமலே தண்ணீர் அருந்துவதைத் தவிர்ப்பார்கள். அவ்வப்போது, அவர்களுக்கு வெந்நீர் அருந்தக் கொடுக்க வேண்டும்.
தொண்டைப் பகுதியைக் கிருமிகள் தாக்காமல் இருக்க அவ்வப்போது சீரகத் தண்ணீரை கொடுக்கலாம்.
உங்களைப்பார்த்து அவர்களும் சூடாக காபி, டீ குடிக்க விரும்புவார்கள். காபியில் இருக்கிற கஃபைனுக்கு மழைக்காலம், வெயில்காலம் என்ற பேதமெல்லாம் தெரியாது. அதனால், இஞ்சி, சுக்கு, ஏலக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் மசாலா டீ, துளசி மற்றும் கற்பூரவள்ளியில் தயாரிக்கப்படும் ஹெர்பல் டீ போன்றவற்றை கொடுக்கலாம்.
பீட்சா, பர்கர், பானி பூரி, பேல் பூரி போன்றவற்றைக் கேட்பார்கள். அதற்கு பதில், வடை, பஜ்ஜி என வீட்டிலேயே சுகாதாரமாக செய்து கொடுத்து விடுங்கள்.
பழங்களின் மீது ஈ, கொசு மொய்த்து இருக்கலாம் என்பதால், அவற்றை உப்பு கலந்த நீரில் சுத்தம் செய்து கொடுங்கள்.

சமைத்த உணவுகளைச் சூடாகச் சாப்பிட கொடுங்கள்.
மழைக்காலத்தில் குளித்தால் சளி, ஜலதோஷம் பிடிக்கும் என்று நினைக்க வேண்டாம். குழந்தைகளை வெந்நீரில் குளிக்க வைக்கலாம். ஆனால், எண்ணெய்க் குளியலைத் தவிர்ப்பது நல்லது.
குழந்தைகளுக்கு முழுக்கை சட்டை, முழுக்கால் பேன்ட் என்று உடலை மூடும் வண்ணம் ஆடையை அணிவிக்க வேண்டும். இதனால் கொசுக் கடி மற்றும் பூச்சிக்கடியிலிருந்து அவர்களைக் காக்க முடியும்.
அதிக குளிர் இருப்பின் தூங்கும்போது கம்பளி போன்றவற்றைப் பயன்படுத்தலாம். அதேபோல இரவில் கொசுவலையைப் பயன்படுத்தித் தூங்குவது மிகவும் பாதுகாப்பானது. அடர் நீல ஆடை அணிந்தால் கொசு அந்த வண்ணத்தை நோக்கி ஈர்க்கப்படுகிறது என்றும், லைட் கலர் ஆடைகள் கொசுக்களை ஈர்ப்பதில்லை என்றும் ஆய்வு ஒன்று கூறுகிறது. எனவே, தூங்கும்போது லைட் கலர் ஆடைகளை அணிந்து தூங்கலாம்.
சில குழந்தைகளுக்கு பழங்களால் அலர்ஜி உண்டாகலாம். குறிப்பாக ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யா போன்ற சிட்ரஸ் பழங்களைச் சாப்பிட்டால் சில குழந்தைகள் தும்முவார்கள். எனவே, அலர்ஜி பிரச்னை உள்ள குழந்தைகளுக்கு மழைக்காலங்களில் மேற்சொன்ன பழங்களைக் கொடுப்பதைத் தவிர்க்கலாம்.

பாலில் மிளகு, மஞ்சள்தூள் சேர்த்துச் சூடாகப் பருகக் கொடுக்கலாம். இதனைப் பருகுவதால் தொண்டைக்கு இதம் கிடைப்பதோடு உடலுக்கான கால்சியம் தேவையும் பூர்த்தியாகும்.
மிளகு, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்துத் தயாரிக்கப்படும் ரசத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டிஃபங்கல் தன்மைகள் இருக்கின்றன. அதனால் தினமும் ஃபிரெஷ்ஷாக ரசம் தயாரித்து சூடாகப் பருகினாலே மழைக்கால நோய்களிலிருந்து நம்மையும் நம் குழந்தைகளையும் காத்துக்கொள்ளலாம்.”