டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவருமான ஜி.என். சாய்பாபாவுக்கு, பித்தப்பைத் தொற்று காரணமாக இரண்டு வாரங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில்,ஹைதராபாத் நிஜாமின் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய சிக்கல்கள் காரணமாகக் கடந்த சனிக்கிழமை (12.10.2014) உயிரிழந்தார்.
1967 ஆம் ஆண்டில் ஆந்திரா பிரதேச மாநிலத்திலுள்ள அமலாபுரம் எனும் குக்கிராமத்தில் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் பேராசிரியர் சாய்பாபா. தன்னுடைய 5 வயதிலேயே போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர், தன்னுடைய அம்மா மற்றும் மற்றவர்களின் உதவியோடுதான் இயங்கி வந்தார்.
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும்போது இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக, மண்டல் குழுவை ஆதரித்து தீவிரமாகப் போராட்டங்களில் ஈடுபட்டார். 1993 இல் கைதிகளின் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்களில் ஈடுபட்டார். ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகளை ஆதரிக்கும் பல இயக்கங்களில் சாய்பாபா முக்கிய பங்கு வகித்தார். அல்சால் குரு போன்ற அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்திய பலரில் இவரும் ஒருவர்.

2003 ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக் கழகத்தோடு இணைக்கப்பட்ட ராம்லால் ஆனந்த் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். இவர் பேராசிரியராகப் பணியில் சேர்ந்த பிறகே, சக்கர நாற்காலியைப் பயன்படுத்தத் தொடங்கினார். இதிலிருந்தே சாய்பாபா அவர்களின் குடும்ப நிலை என்னவாக இருந்திருக்கும் என்பதை அறிந்துகொள்ளலாம்.
‘பழங்குடிகளின் வளங்களை ஆளும் அரசுகள் சுரண்ட விரும்புகின்றன’ என்ற தனது குரலுக்கான ஆதாரங்களைச் சேகரிக்கத் தொடங்கினார்.
மத்திய இந்தியாவின் பழங்குடி பகுதிகளில் ‘பசுமை வேட்டை’ (Operation Green hunt) என்ற பெயரில் துணை ராணுவப் படையினரின் நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயல்பட்ட அகில இந்திய மக்கள் எதிர்ப்பு மன்றத்திற்கு (All India people’s Resistance Forum) சாய்பாபா தலைமை தாங்கினார். அதனால், வழக்குகளையும் சந்தித்தார்.
“10 கோடி பழங்குடியினரின் உரிமைகளுக்காகவும், சுரங்க தொழிலுக்கு எதிராக நிற்கும் பழங்குடிகளின் பாதுகாப்பிற்காகவும், பழங்குடியினரின் இனப் படுகொலைக்கு எதிராகவும் தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து குரல் எழுப்பி வருகிறோம். ஆபரேஷன் கிரீன் ஹண்ட் (operation Green hunt)க்கு எதிராகவும் நாங்கள் குரல் எழுப்பினோம். எங்கள் குரலை ஒடுக்குவதற்காக என் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவதாக அறிந்தேன். ஒரு போலி வழக்கில் 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டேன்” என்று பிசிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் பேராசிரியர் சாய்பாபா கூறியுள்ளார்.

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஹேம் மிஸ்ரா, ஐஐடி வாரணாசியின் முன்னாள் மாணவர் பிரசாந்த் ராஹி ஆகியோர் 2013 இல் கைது செய்யப்பட்டனர். பேராசிரியர் சாய் பாபா உதவியுடன் மாவோயிஸ்ட் தலைவர்களை, அவர்கள் இருவரும் சந்திக்க இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
2013 இல் அவருடைய வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கூறி 2014 இல் பேராசிரியர் சாய்பாபா டெல்லி பல்கலைக்கழகத்தில் இருந்து வரும் வழியில் கைது செய்யப்பட்டார்.
“நான் கைது செய்யப்பட்டபோது மகாராஷ்டிரா காவல்துறை, என்னைச் சக்கர நாற்காலியிலிருந்து வெளியே இழுத்தது. அதன் விளைவாக எனது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனால் நரம்பு மண்டலமும் பாதிக்கப்பட்டது. தன்னுடைய சக்கர நாற்காலியும் உடைந்தது என ஆகஸ்ட் 23, 2024-இல் பத்திரிகையாளர் சந்திப்பில் சாய்பாபா கூறியுள்ளார்.
2015 இல் மருத்துவ காரணங்களுக்காக மும்பை உயர் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது, அதே ஆண்டு மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார். 2016 இல் உச்ச நீதிமன்றம் சாய்பாபாவுக்கு பிணை வழங்கியது. 2017 இல் ஆண்டு உபா சட்டம் உட்படப் பல பிரிவுகளின் படி, சாய்பாபாவுக்கு மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதி மன்றத்தின் நாக்பூர் அமர்வில் சாய்பாபா மேல்முறையீடு செய்தார். அதன்படி, 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவர் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், 24 மணி நேரத்திற்குள் அந்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. 2024 மார்ச் மாதம் மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் அமர்வு அவரை மீண்டும் விடுதலை செய்தது.

90 சதவீத மாற்றுத்திறனாளியான சாய் பாபாவுக்கு, தன்னுடைய அனைத்து செயல்களுக்கும் மற்றவர்களின் உதவி தேவைப்படும். ஆனால், அவர் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்ட சிறை, சிறைக் காவலர்களால் அவர் நடத்தப்பட்டவிதம், அவர் அனுபவித்த கொடுமைகள்தான் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் கைது செய்யப்பட்டு நாக்பூரில் மத்திய சிறைச்சாலையில் பயங்கரவாதிகளை அடைத்து வைப்பதற்கான முட்டை வடிவிலான ‘அண்டா’ அறையில் அடைக்கப்பட்டார். பிரிட்டீஷ் காலத்தில் உருவாக்கப்பட்ட சிறை. அங்கு பெரும்பாலும் அவர்களுக்கு உணவாக வாழைப்பழம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான பொது இடங்களில் இன்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கான சாய்வு தளம் உட்படப் பல வசதிகள் இல்லாத நிலையில், 90 சதவீதம் மாற்றுத்திறனாளி ஒருவர் 10 வருட காலம் என்ன மாதிரியான கொடுமைகளைச் சவால்களை எல்லாம் எதிர்கொண்டிருப்பார் என்பதுதான் பெரும்பாலானவர்களின் கேள்வியாக உள்ளது.
“என் உடலின் இடது பக்கம் செயலிழந்த போதிலும், சிறை நிர்வாகம் என்னை 9 மாதங்களாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. வெறும் வலி நிவாரணிகள் மட்டுமே கொடுக்கப்பட்டன” என்கிறார் சாய்பாபா.
மேலும் அண்டா அறையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்ததாகவும், நாக்பூர் அண்டா அறையில் எட்டரை ஆண்டுகளாக நான் மட்டுமே இருந்ததாகவும் கூறியுள்ளார். இந்த அறையில் தொடர்ந்து இருந்தால் மனநிலை பாதிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. சாய்பாபா சிறையிலிருந்தபோது அவரின் மனைவி வசந்தா மற்றும் சகோதரர் மகாராஷ்டிரா உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், “சிறை அதிகாரிகள் அவரது அண்டா அறையின் முன்புறம் வைட் ஆங்கிள் சிசிடிவி கேமராவை பொருத்தியுள்ளனர். இதன் மூலம் அவரின் கழிவறை இருக்கை, குளியலறை உட்பட அந்த சிறிய அறையில் உள்ள அனைத்தையும் வீடியோ எடுக்க முடியும். 24X7 முழுவதும் வீடியோ பதிவு செய்வதால் சாய் பாபாவினால் கழிவறையைப் பயன்படுத்தவோ, குளிக்கவோ முடியாது. இந்த சூழ்நிலையில் அவரால் எப்படி வாழ முடியும்? கேமராவை அகற்றும்வரை உண்ணாவிரதத்தில் சாய்பாபா ஈடுபடத் திட்டமிட்டுள்ளார். தனியுரிமையைப் பறிக்கும் வகையில் உள்ள சிசிடிவி கேமராவை அகற்றி, அவரின் உடல்நிலைக்குத் தேவையான சிகிச்சையை வழங்க வேண்டும். அவருக்கு முறையான மருந்து மற்றும் மருத்துவம் கிடைக்காததால் அவருக்கு பரோல் வழங்க வேண்டும்” என்று அக்கடிதத்தில் கோரியுள்ளார்.
மேலும், “பாதுகாப்புக்காக என்று காவல்துறை கூறினாலும், அண்டா அறை ஏற்கனவே பல அடுக்கு பாதுகாப்பைக் கொண்டுள்ளது. இதுபோன்ற சிசிடிவி பதிவு கேள்விக்குரியது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சாய்பாபாவின் வழக்கறிஞர் சாய்பாபா பயன்படுத்துவதற்குக் கொண்டு சென்ற தண்ணீர் பாட்டிலைக் கூட தருவதற்குச் சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அவரின் மனைவி கூறுகையில், “அவ்வளவு உயர்ந்துவரும் வெப்பநிலைக்கு மத்தியில், அவர் தண்ணீர் குடிக்கச் சிறிய அளவிலான பாட்டிலை கொடுக்காமல், அவரால் தூக்க முடியாத கடினமான பாத்திரங்களைத் தூக்க வேண்டியிருந்தது.” என்றார்.
கடுமையான நோய்வாய்ப்பட்ட பேராசிரியர் சாய்பாபாவை ஹைதராபாத் சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் அவரின் குடும்பத்தினர் பலமுறை வைத்தனர். அவர் சிறையிலிருந்தபோது இரண்டு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டார். மேலும், ஒரு முறைப் பன்றிக் காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டார்.

சிறையில் அவர் அனுபவித்த கொடுமைகள் பற்றி விடுதலையான பிறகு அவர் கூறியதாவது, “நான் மூடிய சுவர்களை மட்டுமே பார்த்தேன். சக்கர நாற்காலியால் கழிப்பறைக்குச் செல்ல முடியவில்லை. அதற்கான பிரத்யேக கழிப்பறை இல்லை. ஒரு துளை மட்டுமே இருந்ததால் சக்கர நாற்காலியால் கழிப்பறைக்குள் செல்ல முடியவில்லை. நான் சிறைக்குச் சென்றபோது எனது சிறுவயது போலியோவை தவிர வேறு எந்த நோயும் இல்லை. இன்று நான் உங்கள் முன்னிலையில் இருக்கிறேன். உயிரோடு இருந்தாலும் ஒவ்வொரு உறுப்பும் தோல்வியடைந்து கொண்டிருக்கிறது. இப்போது என் இதயம் 55 சதவீதம்தான் பயன்பாட்டில் உள்ளது.
கல்லீரல், பித்தப்பை, கணையம் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளன. நான் சுதந்திரமாக இருக்கிறேன் என்பதை என்னால் இன்னும் பதிவு செய்ய முடியவில்லை. நான் இன்றும் மோசமான சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக உணர்கிறேன்” என்றார்.
“இது எனக்கு ஒரு அக்னிப் பரீட்சை போல் இருந்தது. எனக்கு ஆதரவாக இருந்ததால் எனது மற்றொரு வழக்கறிஞர் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு விசாரணையின் போது சில காவல்துறை அதிகாரிகள் எனது வழக்கறிஞர்களை மிரட்டினர்” என்று பேராசிரியர் சாய்பாபா குற்றம் சாட்டினார்.
“என்னுடைய தாய் தன்னுடைய கைகளில் என்னைத் தூக்கிக் கொண்டு பள்ளியில் விடுவார். அவரின் ஒரே குறிக்கோள் தன்னுடைய மகன் கல்வி பெற வேண்டும் என்பதே, பெரும்பாலான விளிம்புநிலை பெண்களின் ஒரே ஆசை தன்னுடைய குழந்தைகளுக்குக் கல்வி கிடைக்க வேண்டும் என்பதே. நான் டெல்லி பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகள் பேராசிரியராகக் கற்பித்தது தன்னுடைய அம்மாவின் கனவை.
ஆனால், என்னுடைய தாய் உடல்நிலை பாதிக்கப்பட்ட போதும், அவரைச் சந்திப்பதற்கு எனக்கு பரோல் வழங்கப்படவில்லை. அவர் இறந்த பிறகும் அவரின் உடலைக் காண்பதற்குச் சிறைத் துறை, அரசு மற்றும் நீதிமன்றத்தால் பரோல் மறுக்கப்பட்டது” எனக் கண்ணீரோடு தெரிவித்தார்.

தன்னுடைய குடும்பத்தின் நம்பிக்கையில் மட்டுமே உயிர்பிழைத்ததாகவும் சாய்பாபா தெரிவித்தார்.
‘நான் ஒரு ஆசிரியர்; எப்போதும் கற்பிக்கவே விரும்புகிறேன் ‘ என்ற பேராசிரியர் சாய்பாபாவை, 2021ல் டெல்லி பல்கலைக்கழகம் பணியை விட்டு நிறுத்தியது. அவர் விடுதலை செய்யப்பட்ட பிறகும் அவர் பணியில் சேர்க்கப்படவில்லை. அவரின் உடலானது ஹைதராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனைக்குத் தானமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவரின் மகள், “அது அவரின் விருப்பம். நாங்கள் ஏற்கனவே அவரின் கண்களைத் தானம் செய்துள்ளோம்” என்றார்.
மறைந்தும் சாய்பாபா இந்த சமூகத்திற்குப் பயன்பட்டுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY