முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தர்ராஜன் மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக மதுரை வந்திருந்தார். இதைத்தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தல் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது,
ஹரியானா வெற்றி..
பாஜக பயங்கரவாத கட்சி என்ற மல்லிகார்ஜூன கார்கே கூறியது குறித்த கேள்விக்கு,
“ஆமாம், நாங்கள் பயங்கரமாக வேலை செய்கிற கட்சி தொண்டர்களை வைத்துள்ள கட்சி, மக்களுக்கு பயங்கரமாக சேவை செய்கிற கட்சி, காங்கிரசை இப்போது நாங்கள் மிரட்டிக் கொண்டிருக்கிறோம் அதனால் அவர்கள் எங்களை பயங்கரவாதி என்றுதான் சொல்வார்கள். இன்று யாருடைய ஆட்சியில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது? நாங்கள் மக்கள் பணியில் அதி தீவிரவாதிகள். தோல்வியை மறைக்க என்ன சொல்ல வேண்டும் என்று அவருக்கு தெரியவில்லை.
ஹரியானாவில் காங்கிரஸ் வெற்றி பெறப்போகிறது பெரிய பலூனை ஊதினார்கள். ஹரியானா மக்கள் சரியாக திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள்” என்றவர்,
மழை பாதிப்பு
சபரிமலை கோயிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு எது வசதியோ அதை செய்து தர வேண்டும். அதுகுறித்து அங்குள்ள பாஜகவினருடைய கருத்துதான் என்னுடையதும்.
திருச்சி, மதுரை, சென்னை எங்கும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை சரியாக இல்லை. உதயநிதி வார் ரூமில் அமர்ந்து பார்த்தால் மட்டும் போதாது, களத்தில் இறங்க வேண்டும்.
மதுரையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளுக்கும் தண்ணீர் போகிறது. மின் கம்பிகளினால் மிதிபட்டு பல உயிர்கள் போயிருக்கிறது. இதனால் எந்த முன்னேற்பாடும் இல்லை விடியல் அரசு இன்று விளம்பர அரசாக மாறி கொண்டிருக்கிறது. மழை பாதிப்பிலிருந்து மீனாட்சியம்மன் நம்மை காப்பாற்றுவார். ஆனால், இந்த திமுக அரசு காப்பாற்றுமா என்பதுதான் கவலையாக உள்ளது.
ரயில் விபத்து
ரயில் விபத்து மத்திய அரசின் சதி என்று கூறிய ராகுல் காந்தியை கண்டிக்கிறேன். உயிரிழப்பை தடுப்பதற்காக ரயில்வேயில் டெக்னாலஜியை பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் ஊக்குவித்து கொண்டுவருகிறார். அந்த டெக்னாலஜியினால்தான் உயிரிழப்புகள் குறைக்கப்படுகிறது. இன்னும் விபத்தே இல்லாத சூழ்நிலை வரும். ஆனால், காங்கிரசிற்கும், திமுகவுக்கு இதைப்பற்றி சொல்வதற்கு உரிமையே இல்லை, திமுக-வால் வான் சாகசத்திற்கு வந்த மக்களை கூட காப்பாற்ற முடியவில்லை. வந்தே பாரத் ரயில்களை பல நாடுகளுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறோம். ரயில் விபத்தில் மக்கள் பாதுகாக்கப்பட்டது மகிழ்ச்சி.
திமுக கூட்டணி..
பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை நடந்துகொண்டிருக்கிறது. 2026ல் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவருவோம். திமுகவின் கூட்டணி கட்சிகள் இன்றைக்கு அவர்களுடன் கூட்டணியில் இல்லை. விசிக மாநாடு என நடத்தியது, கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் மாற்றுக்கருத்து இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் பங்கு வேண்டும் என கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால் திமுக கூட்டணி கலகலத்து போயிருக்கிறது.
2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து எங்கள் கட்சியின் தேசியத் தலைமை முடிவெடுப்பார்கள்.
விஜய் மாநாட்டை நடத்துவதற்கு தமிழக அரசு தடைகளை ஏற்படுத்திக்கொண்டே வருகிறது. இதிலிருந்து புதிய கட்சிகளை பார்த்து திமுக அரசு பயப்படுகிறது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.
தற்போதைய சூழலில் இந்து மதம் சார்ந்த கருத்துகளை யார் எதிர்த்தாலும் அவர்களை மக்கள் எதிர்ப்பார்கள். அதை விஜய் உணர்ந்துவிட்டார். அவரிடமிருந்து தீபாவளி வாழ்த்தையும் எதிர்பார்க்கிறோம். அவர் மட்டுமல்ல, தமிழக முதலமைச்சரும் தீபாவளி வாழ்த்து தெரிவிக்க வேண்டும்” என்றார்.