மத்தியக் கிழக்கில் போர் நிறுத்த முயற்சிகள் ‘நிஜம்’தானா? – அமெரிக்காவின் ‘டபுள்’ ஆக்‌ஷன்

சரியாக கடந்த ஓராண்டுக்கு முன்பாக, அக்.7-ஆம் தேதி ஹமாஸ் இயக்கத்தினரால் தெற்கு இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டு, 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதில் ஏழு அமெரிக்கர்களும் அடக்கம். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸாவில் சுமார் 42,000 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்களை காணவில்லை.

ஹமாஸால் கடத்தப்பட்ட பிணைக் கைதிகளை விடுவிக்கும் நோக்கில் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனால், அதற்கு மாறாக இந்த யுத்தம் தற்போது மேற்குக் கரை மற்றும் லெபனான் வரை பரவிவிட்டது என்பதே நிதர்சனம்.

கடந்த செப்டம்பரில் இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இரு தரப்பையும் கட்டுப்படுத்துவதற்கான உலகத் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் ஜோ பைடன் தலைமையில் நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்றது. இது நடந்த 90 நிமிடங்களிலேயே அமெரிக்காவால் வழங்கப்பட்ட பதுங்குக் குழிகளை வேட்டையாடும் வல்லமை கொண்ட இஸ்ரேலின் விசேஷ குண்டுகள் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா பதுங்கியிருந்த இடங்களை தகர்த்தன. ஹிஸ்புல்லாவின் மரணத்துக்கு பழிவாங்கும் நோக்கில் இஸ்ரேலை நோக்கி 180 ஏவுகணைகளை அனுப்பியது ஈரான். ஆக, இந்த பிரச்னை இன்னும் ஆழமாகவும், தீவிரமாகவும் மாறிப் போயுள்ளது.

ஆனால், அமெரிக்காவின் தலையீடு காரணமாகவே காஸாவின் ரஃபா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதாகவும், இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும் என்பது அமெரிக்காவின் வாதம். ரஃபா தாக்குதலுக்கு முன்னதாக, இஸ்ரேலுக்கு அனுப்பவேண்டிய வெடிகுண்டுகளை ஜோ பைடன் தடுத்தார். இதன் காரணமாக குடியரசு கட்சியினரிடமிருந்தும், இன்னொருபுறம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடமிருந்து கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

முன்னாள் அமெரிக்க அதிகாரிகள் உட்பட விமர்சகர்கள் பலரும் முன்வைக்கும் குற்றச்சாட்டு, ஒருபுறம் போர் நிறுத்த முயற்சிகளை மேற்கொள்வதாக சொல்லிக் கொண்டே இன்னொருபுறம் கடந்த ஆண்டு அக்.7 முதல் இஸ்ரேலுக்கு சுமார் 3.8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை அமெரிக்கா சப்ளை செய்துள்ளது என்பதுதான்.

இந்தப் போர் விரிவடைந்தது அமெரிக்காவின் தோல்வி என்பதைக் காட்டிலும், அதன் முன்னெடுப்பாகவே தோன்றுவதாக அவர்கள் விமர்சிக்கின்றனர்.

உண்மையில், அமெரிக்கா போர் நிறுத்தம் தொடர்பாக வெறும் கூட்டங்களை மட்டுமே நடத்தியிருக்கிறதே தவிர, இஸ்ரேலை கட்டுப்படுத்துவதற்கான தீவிர முயற்சிகள் எதையும் மேற்கொள்ளவில்லை.

அமெரிக்காவின் போர் நிறுத்த முயற்சிகளின் தோல்விக்கு, நெதன்யாகுவின் தொடர் எதிர்ப்பு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. காரணம், நெதன்யாகுவின் அமைச்சரவையில் காஸா மற்றும் லெபனான் மீதான தாக்குதலை இன்னும் தீவிரப்படுத்தும்படியான அழுத்தம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒருவேளை இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், அரசுக்கு வழங்கி வரும் தங்களுடைய ஆதரவை வாபஸ் பெற நேரிடும் என்று அண்மையில் இரண்டு அமைச்சர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

போர் நிறுத்தம் என்பது நெதன்யாகு ஆட்சியின் முடிவாக இருக்கும் என்பதால் அவர் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனாலேயே ஹமாஸ் வசம் இருக்கும் இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்கும் முயற்சிகளிலும் எந்த முன்னேற்றமும் இல்லை.

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா ஈரானுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அண்மையில் இஸ்ரேல் குற்றம்சாட்டியிருந்தது. ஆனால், இந்த தகவலில் துளியும் உண்மை இல்லை என்றும், ஈரான் உட்பட அமெரிக்காவுடன் எந்தவொரு அரபு நாடும் அத்தகைய பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்றும் அமெரிக்கா மறுத்துள்ளது.

ஆனால், சிக்கல் என்னவாக இருந்தாலும் பைடன் – நெதன்யாகு இடையிலான நட்பில் எந்த விரிசலும் ஏற்படவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். காரணம், நெதன்யாகுவுடன் அறிமுகமாவதற்கு முன்பாகவே தீவிர இஸ்ரேல் ஆதரவாளராக இருந்து வருபவர் பைடன். 70-களில் இளம் செனட்டராக தான் இஸ்ரேலுக்கு சென்றதை பலமுறை அவர் சிலாகித்ததுண்டு. இஸ்ரேலை பைடன் தடுக்க தவறியதே காஸாவில் நிகழ்ந்த மாபெரும் பேரழிவுக்கு முக்கியக் காரணம் என்பது பைடனை விமர்சிப்பவர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

இதனிடையே, இஸ்ரேலுக்கு ஆதரவான இன்னொரு நடவடிக்கையாக ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது அமெரிக்கா. குறிப்பாக, ஈரானில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் பத்து நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளதும் இங்கே கவனிக்கத்தக்கது.

ஈரான் மீது நேரடி தாக்குதலை தொடங்காவிட்டாலும், அந்நாட்டின் பல்வேறு அரசு துறைகளைக் குறிவைத்து சைபர் தாக்குதலை ஈடுபட்டு வருகிறது இஸ்ரேல். மிகக் குறிப்பாக ஈரானின் அணுசக்தி தளங்கள், எரிசக்தி கட்டமைப்பின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் வகையில் இந்த சைபர் தாக்குதல்கள் அமைந்துள்ளன. வங்கி சேவைகளை முடக்கும் நடவடிக்கைகளும் நடந்துள்ளது. இந்த சைபர் தாக்குதலுக்கான பதிலடி குறித்து ஈரான் ஆலோசித்து வருகிறது.

இந்தப் பின்னணியில்தான் ஈரானுக்கு ரஷ்யாவும் சீனாவும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை அளித்து வருகின்றன. ஈரானின் அணுசக்தி தளங்களைப் பாதுகாப்பதற்காக ஆன்டிவைரஸ் மென்பொருட்கள் சீனா வழங்கியுள்ளதாம்.

இதனிடையே, இஸ்ரேலுக்கு உதவி செய்யும் நாடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமது வான்பரப்பை இஸ்ரேல் ராணுவம் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளதும் போர்ச் சூழலில் பதற்றத்தைக் கூட்டியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள், குறிப்பாக ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள், சாலைகளில் நின்று ‘இனப் படுகொலையாளர் ஜோ’ என்ற பதாகைகளை ஏந்தி போராடியதை அண்மையில் செய்திகளின் வாயிலாக பார்த்திருப்போம்.

காஸா மற்றும் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக் கோரி கடந்த அக்.7-ம் தேதி உலகமெங்கும் உள்ள பல்வேறு முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். நியூஸிலாந்தி ஆக்லேண்ட், ஆஸ்திரேலியாவின் சிட்னி, இந்தியாவில் ஹைதராபாத், ஏன் நம் பக்கத்து நாடான பாகிஸ்தானில் கூட ஏராளமான மக்கள் போர் நிறுத்தத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

பைடனுக்கு அடுத்தபடியாக ஜனநாயகக் கட்சி வேட்பாளராக களமிறங்கி இருக்கும் கமலா ஹாரிஸாவது ஒருவேளை தேர்தலில் ஜெயித்தால் இந்தப் போர் நிறுத்த மத்தியஸ்த பேச்சுவார்த்தைகளில் வெற்றிபெறுவாரா என்பதே நடுநிலையாளர்களின் நம்பிக்கை. பைடனோ, கமலாவோ அல்லது ட்ரம்ப்போ யாராக இருந்தாலும் இஸ்ரேல் விஷயத்தில் அமெரிக்காவின் போக்கில் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை என்று உலக அரசியல் நோக்கர்கள் ஆரூடம் கூறுகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb