Rain Alert: ஆரஞ்சு, ரெட் அலர்ட்களும் அதன் அர்த்தங்களும்! -எந்தெந்த மாவட்டங்களுக்கு என்னென்ன அலர்ட்?

தமிழகத்தில் இன்று முதல் வரும் அக்டோபர் 17ஆம் தேதி வரை கனமழை முதல் மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக மலைக்காலங்களில் இதுபோன்ற பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, ரெட் அலர்ட் கொடுப்பது வழக்கம்தான். ஆனால் நம்மில் பெரும்பாலானோருக்கு இதற்கான முழுமையான அர்த்தம் தெரியாது. இந்நிலையில் இந்த அலர்ட்களுக்கான அர்த்தங்களையும், தற்போது எந்தெந்த மாவட்டங்களுக்கு என்னென்ன அலர்ட்கள் விடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் பார்ப்போம்.

இந்திய வானிலை ஆய்வு மையம்

இந்திய வானிலை ஆய்வு மையம்

* இந்தியாவில் புவி அறிவியல் அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department), வானிலையியல் கணிப்புகள், வானிலை முன்னறிவிப்புகள், நிலநடுக்கம் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. சென்னை, கவுகாத்தி, கொல்கத்தா, மும்பை, நாக்பூர், டெல்லி உள்ளிட்ட 6 நகரங்களில் மண்டல வானிலை மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இம்மையங்கள் அமைந்திருக்கும் இடங்களில், முன்னறிவிப்பு அலுவலகங்கள், வேளாண் வானிலை ஆய்வுப் பரிந்துரை சேவை மையங்கள், வெள்ள எச்சரிக்கை அலுவலகங்கள், சூறாவளி எச்சரிக்கை மையங்கள் போன்றவைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இம்மையங்களிலிருந்து பல்வேறு வானிலை முன்னறிவிப்புகள், எச்சரிக்கைகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

Rain Alert

நான்கு நிற எச்சரிக்கை அறிவிப்புகள்

* இந்திய வானிலை ஆய்வுத்துறை வெளியிடும் எச்சரிக்கை அறிவிப்புகள் அனைத்தும் இந்த பச்சை, மஞ்சள், ஆரஞ்ச், ரெட் ஆகிய நிறங்களை அடையாளமாகக் கொண்டு வெளியாகின்றன. இந்த நிறங்களைக் கொண்டு எச்சரிக்கை அறிவிப்பின் தன்மையினை நாம் அறிந்து கொள்ள முடியும். நாள் முழுவதும் தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் மழையினை அடை மழை என்றும், பெரிய அளவிலான துளிகளைக் கொண்ட மழையினைக் கனமழை (Heavy Rain Fall) என்றும் குறிப்பிடுகின்றனர். இந்திய வானிலை ஆய்வுத் துறை, அடைமழை / கனமழை மற்றும் பனிப்பொழிவினை பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, ரெட் என்று நான்கு நிறங்களில் அடையாளப்படுத்துகிறது.

அலர்ட்களும் அதன் அர்த்தங்களும்

பச்சை அலர்ட்

* ஒரு மணி நேரத்திற்கு 70 மில்லி மீட்டர் எனும் அளவில் பெய்யும் மழை / பனிப்பொழிவு பச்சை நிறத்தில் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த மழை சாதாரணமானதாக (No Heavy Rainfall) எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் எவ்விதப் பாதிப்புமில்லை என்று அறிந்து கொள்ளலாம். இதனை எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

Rain Alert

மஞ்சள் அலர்ட்

* இருபத்து நான்கு மணி நேரத்திற்கு 64.5 மில்லி மீட்டரிலிருந்து 115.5 மில்லி மீட்டர் வரை பெய்யும் மழை / பனிப்பொழிவு மஞ்சள் நிறத்தில் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த மழையினை அடைமழை அல்லது கனமழை (Heavy Rainfall) என்கின்றனர். இம்மழையினால் ஒரு சில பாதிப்புகள் ஏற்பட்டாலும், பெருமளவிலான பாதிப்புகள் இருக்காது. இதனை எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆரஞ்சு அலர்ட்

* இருபத்து நான்கு மணி நேரத்திற்கு 115.6 மில்லி மீட்டரிலிருந்து 204.4 மில்லி மீட்டர் வரை பெய்யும் மழை / பனிப்பொழிவு ஆரஞ்சு நிறத்தில் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த மழையினை பெரு மழை அல்லது மிகக் கனமழை (Very Heavy Rainfall) என்கின்றனர். இப்பெரு மழையினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். எனவே, எச்சரிக்கையுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

Rain Alert

ரெட் அலர்ட்

* 24 மணி நேரத்திற்கு 204.5 மில்லி மீட்டர் அல்லது அதற்கு அதிகமான அளவில் பெய்யும் மழை / பனிப்பொழிவு சிவப்பு நிறத்தில் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த மழையினை மிகமிகக் கனமழை (Exceptionally Heavy Rainfall) என்கின்றனர். இம்மழையினால் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். எனவே, எச்சரிக்கையுடன் முன்கூட்டியே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும்.

எந்தெந்த மாவட்டங்களுக்கு என்னென்ன அலர்ட்

* தற்போது வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின் படி, “நாளை (அக்டோபர் 16) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

orange, red alert

தவிர புதுச்சேரிக்கும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb