கோவை விமான நிலையத்தில் இருந்து, சென்னை விமான நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு இண்டிகோ விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் சுமார் 169 பயணிகள் இருந்தனர்.
விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அதன் ஊழியர்கள் விமானத்துக்குள் கிடந்த ஒரு துண்டு சீட்டைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அதில் விமானத்தை கடத்தப் போவதாக எழுதப்பட்டிருந்தது.
பதறிய இண்டிகோ ஊழியர்கள், இதுகுறித்து விமான நிலைய ஊழியர்கள் மத்திய தொழில் பாதுகாப்புப் படைக்குத் தகவல் அளித்தனர். பாதுகாப்பு நடவடிக்கைக்காக விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டனர்.
அந்த விமானத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் அவசர அவசரமாக வெளியில் அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து அனைத்து பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன.
மேலும் விமானம் முழுவதும் தீவிரமாக சோதனை செய்தனர். அதில் அந்த மிரட்டல் துண்டுச் சீட்டு புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பயணிகளும், இண்டிகோ ஊழியர்களும் நிம்மதியடைந்தனர். இதையடுத்து விமானம் ஒன்றரை மணி நேரம் தாமதமாக 5.30 மணியளவில் சென்னை புறப்பட்டுச் சென்றது.
இந்த சம்பவத்தால் கோவை விமான நிலையத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.