Kerala: ‘மாதப்படி’ வாங்கிய விவகாரம்; பினராயி விஜயனின் மகளிடம் விசாரணை; ஆளும் சிபிஎம் சொல்வதென்ன?

கேரள மாநிலத்தில் கொச்சி மினரல்ஸ் அண்ட் ரூட்டெயில் லிமிட்டெட் கம்பெனி (சி.எம்.ஆர்.எல்) அலுவலகத்திலும், அதன் நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்த்தா என்பவரின் வீட்டிலும் வருமான வரித்துறை இன்வெஸ்டிகேசன் பிரிவு கடந்த 2019 ஜனவரி 25-ம் தேதி சோதனை நடத்தியது.

அதில் சிக்கிய ஒரு டயரியில் ‘மாதப்படி’ என்ற கணக்கில் முக்கிய அரசியல் பிரமுகர்கள், காவல்துறை அதிகாரிகளுக்குப் பணம் கொடுக்கப்பட்டது குறித்த விபரங்கள் இருந்துள்ளன. அதில், கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனின் ‘எக்ஸாலாஜிக்’ நிறுவனத்தின் பெயரும் இருந்துள்ளது.

வீணா விஜயனின் நிறுவனத்துக்கு 2017-ம் ஆண்டு தொடங்கி மூன்று ஆண்டுகள் பணம் கொடுத்ததற்கான கணக்குகள் இருந்துள்ளன. அது குறித்து விசாரித்ததில், கேரள கடற்கரையில் கருமணல் தோண்டி எடுக்க பத்து ஆண்டுகளுக்கு மேலாக முயன்றுவரும் சி.எம்.ஆர்.எல் நிறுவனத்தின் மென்பொருள் அப்டேட் செய்வதற்காகப் பல தவணையாக ஒரு கோடியே எழுபத்தி இரண்டு லட்சம் ரூபாய் வீணா விஜயனின் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

வீணா விஜயன், முஹம்மது ரியாஸ்

அதே சமயம் அதுபோன்ற ஒரு மென்பொருள் அப்டேட் அந்த நிறுவனத்தில் செய்யப்படவில்லை என வருமானவரித்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மாதப்படி குறித்த டயரி அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. கொச்சி அமலாக்கத்துறையில் வீணா விஜயன் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் கணவர் முகமது ரியாஸ் கேரளா பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ளார். இதையடுத்து இந்த விவகாரம் அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வீணா விஜயன் சென்னை சீரியஸ் ஃபிராட் இன்வெஸ்டிகேஷன் ஆபீஸில் (எஸ்.எஃப்.ஐ.ஓ) ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

வீணா விஜயனிடம் சென்னையைச் சேர்ந்த அதிகாரி அருண் பிரசாத் வாக்குமூலம் பெற்றுள்ளார். இந்த வழக்கில் தன்னிடம் விசாரணை நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்றும், மாதப்படி விவகாரத்துக்கும் தனக்குச் சம்பந்தம் இல்லை எனவும், தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த தனக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை எனவும் வீணா விஜயன் ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில்தான், வீணா விஜயனிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயன்

இதுகுறித்து பினராயி விஜயனின் மருமகனும் அமைச்சருமான முஹம்மது ரியாஸ் கூறுகையில், “இந்த வழக்கு வந்தபோது இதன் அரசியல் பின்னணிகள் குறித்து ஏற்கனவே சி.பி.எம் கட்சி கூறியிருந்தது. ஆனால், இந்த வழக்கை மையமாக வைத்து பா.ஜ.க-வுடன் சில காம்பரமைஸ் நடந்ததாகப் பொய் பிரச்சாரம் மேற்கொண்டனர். அது மட்டுமல்லாது பா.ஜ.க-வும் ஆர்.எஸ்.எஸும் திருச்சூர் தொகுதிக்காக முதல்வர் பினராயி விஜயனிடம் பல காம்பர்மைஸ்கள் நடந்தன எனவும், வேறு சில விஷயங்களிலும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் முதல்வர் உள்ளிட்டவர்கள் பல காம்பரமைஸ்கள் செய்து கொண்டுள்ளனர் எனப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இப்போது இந்த விசாரணை நடந்த பிறகு அந்த காம்ப்ரமைஸ் குறித்துக் கூறியவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள். இது பற்றி மக்கள் சிந்திப்பார்கள். 

வீணா விஜயன்

கேரளாவில் சி.பி.எம் தொடர்ந்து ஆட்சியிலிருந்து வருகிறது. பா.ஜ.க அரசு எடுக்கும் மக்கள் விரோத முடிவுகளுக்கும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான முடிவுகளுக்கும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிப்பது கேரள மாநில அரசாகும். அதிலும் முதல்வர் தலைமையில் முதல் எதிர்ப்புக் குரல் கேரளாவிலிருந்து ஒலிக்கும். அப்படி இருக்கும்போது பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் உடன் காம்பரமைஸ் செய்ததாகப் பிரசாரங்கள் செய்தனர். கேரளாவில் மத சிறுபான்மையினர் மற்றும் பா.ஜ.க-வுக்கு எதிரான எண்ணம் கொண்டவர்கள் சி.பி.எம் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகின்றனர். அவர்கள் கேரள முதல்வரை நம்புகின்றனர். அந்த நம்பிக்கையைத் தகர்க்கும் விதமாக காம்பர்மைஸ் எனப் பிரசாரம் மேற்கொள்கின்றனர். அப்படி பிரச்சாரம் செய்கிறவர்கள் இப்போது நடந்த விசாரணை குறித்து என்ன பதில் சொல்லுகிறார்கள்? இதற்கு மேல் எனக்கு எதுவும் கூறுவதற்கில்லை.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs