Rain Alert: நாளை முதல் கனமழை; எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாடு மற்றும் புதுவையில் நாளை முதல் அடுத்த நான்கு நாள்களுக்கு கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், “நாளை தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். இது தொடர்ந்து வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 15, 16 ஆகிய தேதிகளில் புதுவை, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடற்கரையில் நிலை கொள்ளக்கூடும். இதன் காரணமாக அடுத்து வரும் ஐந்து தினங்களுக்குத் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மழை தொடரக் கூடும்.

வங்கக் கடல்

அடுத்த வரும் 24 மணி நேரத்துக்குள் தஞ்சை, திருவாரூர், மதுரை, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

அக். 14-ம் தேதி

விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அக் .15-ம் தேதி

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

அக் .16-ம் தேதி

திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

கனமழை

அக் 17-ம் தேதி:

ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதியைப் பொறுத்தவரை இன்று முதல் விட்டுவிட்டு மழை துவங்கி, நாளை முதல் படிப்படியாக அதிகரித்து, 15 மற்றும் 16 தேதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். தற்போது, இந்தியாவின் மத்திய பகுதி மற்றும் வடகிழக்கு பகுதிகளிலிருந்து தென்மேற்கு பருவமழையானது விலகிக் கொண்டிருக்கிறது. அடுத்து வரும் இரண்டு நாள்களில் தென்மேற்கு பருவமழை முற்றாக விலகி 15, 16 தேதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது” என்று தெரிவித்தார்.