“ஆட்சிக்கு வந்தால் தாராவி குடிசை மேம்பாட்டுத் திட்டத்தை ரத்து செய்வோம்” உத்தவ் தாக்கரே காட்டம்..!

ஒவ்வொரு ஆண்டும் மும்பையில் தசரா அன்று சிவசேனாக்கள் பொதுக்கூட்டம் நடத்துவது வழக்கம். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தாதர் சிவாஜி பார்க்கில் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக இப்பொதுக்கூட்டத்தை நடத்தி வருகிறது. தசரா விழாவான நேற்று மும்பை தாதரில் உத்தவ் தாக்கரேயும், ஆசாத் மைதானத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும் பொதுக்கூட்டங்களை நடத்தினர்.

சிவாஜி பார்க் பொதுக்கூட்டத்தில் தாக்கரே…

சிவாஜி பார்க் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உத்தவ் தாக்கரே, ”மகாராஷ்டிராவில் மகாவிகாஷ் ஆகாடி ஆட்சிக்கு வந்தவுடன் தாராவி குடிசை மேம்பாட்டுத்திட்டம் ரத்து செய்யப்படும். திட்டங்கள் மூலம் மும்பையை கொள்ளையடிக்க அனுமதிக்கமாட்டோம். காங்கிரஸ் பெண்களின் தாலியை பிடுங்கி அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்குக் கொடுக்கும் என்று மோடிஜி சொன்னீர்கள். என் மக்களின் தாலியை அதானிக்கு கொடுக்கவோ, அதானி தனது தாலியை மகாராஷ்டிராவில் கட்டவோ விடமாட்டேன்.

“அரசாணைகளை ரத்து செய்வோம்…”

நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் சத்ரபதி சிவாஜிக்கு கோயில் கட்டுவோம். ஆனால் அவர்கள் வாக்குக்காக சிவாஜி சிலையை கட்டினார்கள். 2029-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் பா.ஜ.க 100 சதவீதம் வெற்றி பெறவேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி இருக்கிறார்.

இதன் மூலம் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித்பவாரின் கடைசி காலத்திற்கு நேரம் குறித்துவிட்டார். 11 நாள்களில் ஏக்நாத் ஷிண்டே அரசு 1600 அரசாணைகளை பிறப்பித்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த அரசாணைகளை ரத்து செய்வோம். தவறு செய்யும் அதிகாரிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள். தாராவி மூலம் ஒட்டுமொத்த மும்பையும் கொள்ளையடிக்கப்படுகிறது. டாடா நிறுவனம் உப்பு கொடுத்தது. ஆனால் மும்பையில் சில தொழிலதிபர்கள் உப்பள நிலத்தை எடுத்துக்கொள்கிறார்கள்” என்றார். இக்கூட்டத்தில் முதல் முறையாக ஆதித்ய தாக்கரேயும் பேசினார்.

ஆசாத் மைதான பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே..

ஆசாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே,” என்னை விமர்சிப்பவர்கள் என்னை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டாம். எங்களது அரசு 2.5 ஆண்டில் என்ன திட்டங்களை நிறைவேற்றியது என்று பட்டியலிட தயாராக இருக்கிறோம். மகாவிகாஷ் அகாடி கூட்டணி இது போன்று பட்டியலிட தயாராக இருக்கிறதா?. சிவசேனா(உத்தவ்)வுக்கும், ஒவைசியின் எம்.ஐ.எம்.கட்சிக்கும் எந்த வித வித்தியாசமும் கிடையாது. ஹரியானாவில் ஏற்பட்ட வெற்றி மகாராஷ்டிராவிலும் ஏற்படும். நான் உறுதியான சிவசேனா தொண்டன். நான் ஓட மாட்டேன். மற்றவர்களை ஓட வைப்பேன். மகாராஷ்டிராவை 6 மாதத்தில் முதலிடத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம். மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்காகத்தான் சிவசேனாவை உடைத்தோம். பாலாசாகேப் தாக்கரேவின் கொள்கைகளுக்கு துரோகம் செய்தவர்களின் பிடியில் இருந்து உண்மையான சிவசேனாவை விடுவித்து இருக்கிறோம்.

ஏக்நாத் ஷிண்டே

பாலாசாஹேப் தாக்கரே எப்போதும் அநீதிக்கு துணைபோகக்கூடாது என்று சொல்வார். போராடவேண்டும் என்று சொல்வார். நாங்கள் சிவசேனாவை உடைக்காமல் இருந்திருந்தால் சிவசேனா தொண்டர்கள் அவமதிக்கப்பட்டு இருப்பார்கள். பெண்களுக்கு நிதி வழங்கும் திட்டமும் வந்திருக்காது. மகாவிகாஷ் அகாடி அரசு அனைத்து திட்டங்களையும் நிறுத்தியது. வளர்ச்சித்திட்டங்களுக்கு மகாவிகாஷ் அகாடி அரசு வேகத்தடை போல் இருந்தது. சிவசேனா (உத்தவ்) மும்பையில் 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது.

ஆனால் சாலைகளில் ஊழல்தான் செய்தனர். தாராவி குடிசை மேம்பாட்டுத்திட்டம் ஆசியாவிலேயே மிகப்பெரியது. இத்திட்டத்தை நிறைவேற்ற மக்கள் தொடர்ந்து இடையூறு செய்து கொண்டே இருக்கிறார்கள். நீங்கள் பங்களாக்கள் கட்டிக்கொண்டே இருப்பீர்கள். ஆனால் தாராவி மக்களை தொடர்ந்து குடிசையில் இருக்கச்செய்வீர்கள். தாராவியில் உள்ள 2.1 லட்சம் பேருக்கு வீடு கொடுக்க முடிவு செய்துள்ளோம். உத்தவ் தாக்கரே பேஸ்புக் லைவ் மூலம் ஆட்சி நடத்தினார். நாங்கள் மக்களை நேருக்கு நேர் பார்த்து ஆட்சி செய்கிறோம்”என்றார்.