AR Rahman: அமெரிக்க அதிபர் தேர்தல் களத்தில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கச்சேரி

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடைபெறவிருக்கிறது. கமலா ஹாரிஸ் vs டொனால்டு ட்ரம்ப் என்ற போட்டியில் இந்தத் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கின்றன.

ஒருபக்கம் டொனால்டு ட்ரம்ப் மீதான துப்பாக்கி சூடு முயற்சிகள், எலான் மஸ்க்கின் ஆதரவு பேச்சு என டொனால்டு ட்ரம்ப் கவனம் ஈர்த்து வருகிறார். மற்றொரு பக்கம் துணை அதிபரான முதல் கருப்பின மற்றும் தெற்காசிய பெண்ணான இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ், இசைக் கலைஞர்களை பிரசாரத்திற்குப் பயன்படுத்தி கவனம் ஈர்த்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் 283 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற பாப் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட், கமலா ஹாரிஸிக்கு ஆதரவு வெளிப்படையானத் தனது ஆதரவைத் தெரிவித்திருந்தது அதிபர் தேர்தலில் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

கமலா ஹாரிஸ் vs டொனால்டு டிரம்ப்

பொதுவாகவே அமெரிக்க அதிபர் தேர்தலில் பாடல்கள், இசைக் கச்சேரிகள் மக்களின் கவனத்தை ஈர்த்து, அது தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்துவது வழக்கம். அவ்வகையில், முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்தத் தேர்தலில் பாடல்கள் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. கடந்த மாதம் சிகாகோவில் நடந்த ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில், வேட்பாளர் தேர்வு கிட்டத்தட்ட இசை நிகழ்ச்சியாகவே மாறியிருந்தது. ஒவ்வொரு மாகாணத்தின் பிரதிநிதிகளும் வாக்களிக்க அழைக்கப்பட்டபோது, அதற்கேற்ற பிரபலமான பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டன. உதாரணமாக, அலபாமாவுக்கு பிரபலமான ‘ஸ்வீட் ஹோம் அலபாமா’ பாடலும், மிச்சிகனின் முறை வரும்போது, எமினெம் பாடிய ‘Lose Yourself’ பாடலும் ஒலிக்கவிடப்பட்டது சமூக வலைதளங்களில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

அம்மாநாட்டில் இந்தப் பாடல்கள் பயன்படுத்தப்பட்டபோது இசைக் கலைஞர்கள் யாருமே அதற்கு எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம். இது ஜனநாயகக் கட்சிக்கும் மிகப் பெரிய சாதகமாக பார்க்கப்பட்டது. ஆனால், ட்ரம்பின் கூட்டங்களில் தங்களின் பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டதற்கு எதிராக சில இசைக் கலைஞர்கள் போர்க் கொடி உயர்த்தினர். அதில் செலின் டியான், ABBA, Adele, Foo Fighters உள்ளிட்ட புகழ்பெற்ற கலைஞர்களும் அடக்கம்.

இரண்டு கட்சிகளுமே தங்களுடைய கொள்கைகளுக்கு ஏற்ற பாடல்களை தங்களுடைய பிரச்சாரங்களில் பயன்படுத்தி வருகின்றனர். இளம் தலைமுறையினரை கவரும் வகையிலான பாடல்களையும், பெண்கள் மற்றும் வெள்ளையர் அல்லாத இசைக் கலைஞர்களின் பாடல்களையும் கமலா தொடர்ந்து பயன்படுத்தினார். உதாரணமாக, அவர் பயன்படுத்திய “Femininomenon” என்ற பாடல், பெண் தலைமையையும், பாலின வேறுபாடுகளை களைவது குறித்தும் வலியுறுத்துகிறது.

இன்னொரு பக்கம், டொனால்ட் ட்ரம்ப் தன்னுடைய மேடைகளில் அடிக்கடி பயன்படுத்திய பாடல், 1966-ல் வெளியான ஜேம்ஸ் பிரவுனின், “It’s a Man’s Man’s Man’s World”. இப்படியாக இரண்டு தரப்பும் பாடல்கள் வழியே தங்களுடைய தேர்தல் பிரசாரங்களுக்கு வலு சேர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘AAPI Victory Fund’ என்ற அமைப்பு கமலா ஹாரிஸிக்கு ஆதரவாக இசைக் கச்சேரி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது. அதில் இந்தியாவின் பெருமை மிகுந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நேரடி இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இந்த இசைக் கச்சேரி இந்திய நேரப்படி நாளை (திங்கள் கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு ‘AAPI Victory Fund’ யூடியுப் சேனலில் ஒலிபரப்பாகவிருக்கிறது.

கமலா ஹாரிஸ் vs டொனால்டு டிரம்ப்

இதுகுறித்து பேசியிருக்கும் அந்நிறுவனத்தின் தலைவர் சேகர் நரசிம்ஹன், “அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது குரலின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இது வெறும் இசைக் கச்சேரி அல்ல, அமெரிக்க தேர்தல் களத்தில் இளம் வாக்காளர்களை ஈர்க்கும் பெரும் இசைக் கச்சேரியாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார். ஜனநாயகக் கட்சி சார்பாகப் போட்டியிடும் கமலா ஹாரிஸ், தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்டவர் என்பதால் தமிழ் பாடல்கள் அதிகம் இடம்பெறவுள்ளது இக்கச்சேரியில். ஏற்கனவே உலகப் புகழ்பெற்ற பாப் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட் கமலா ஹாரிஸுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் இந்த இசைக் கச்சேரி கமலா ஹாரிஸிக்கும் இன்னும் பலம் சேர்க்கும் என்று ஜனநாயகக் கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.