‘லைட்ஸ் எல்லாம் ஆஃப் ஆகி, ஆன் ஆகி… ஆனா எந்த பிரச்னையும் இல்லை’ – திக் திக் நொடிகளை விவரித்த பயணி

திருச்சியில் உள்ள விமான நிலையத்தில் இருந்து சார்ஜாவுக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் ஆறு குழந்தைகள் உள்ளிட்ட 144 பயணிகள் பயணம் மேற்கொண்டனர். அதோடு, 6 விமான ஊழியர்களும் அந்த விமானத்தில் பயணித்தனர். இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் உள்ள ஓடுதளத்தில் இருந்து டேக்ஆஃப் ஆன அந்த விமானத்தில் இருந்து சக்கரங்கள் உள்ளே செல்லாததால், விமானி அதிர்ச்சியடைந்தார். இதனால், விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகளோடு தொடர்புகொண்டு, விமானத்தில் உள்ள பிரச்னையை விவரித்துள்ளார். தொடர்ந்து விமானத்தை மேற்கொண்டு இயக்காமல், வானிலேயே வட்டமடிக்க முடிவு செய்தனர்.

தயார் நிலையில் ஆம்புலன்ஸ்கள்

அதன்படி, அந்த விமானத்தில் உள்ள எரிபொருள் குறைந்தபிறகு விமானத்தை தரையிறக்க முயற்சிகள் மேற்கொள்ள இருப்பதாக விமான நிலைய தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. அதோடு, பயணிகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாத வகையில் விமானத்தை தரையிறக்க தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளும், ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. போலீஸாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். அதோடு, மருத்துவர்களும், செவிலியர்களும் விமான நிலையத்துக்குள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில், இந்த விமானத்தில் இப்படி ஒரு பிரச்னை இருப்பது மீடியாவிலும், சமூகவலைதளங்களிலும் பரவ, அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் அதிர்ச்சியோடு விமான நிலையத்தில் குவிந்தனர். அதோடு, ‘அவர்கள் யாருக்கும் எதுவும் ஆககூடாது. அவர்களை பத்திரமாக தரையிறங்க வைக்க வேண்டும்’ என்று இந்த செய்தியை அறிந்த திருச்சி மக்கள் அனைவரும் மனதளவில் பிரார்த்தித்துக் கொண்டனர். அந்த விமானம் மாலை 5.40 க்கு புறப்பட்டதில் இருந்து தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல், கீரனூர் என்று பல பகுதிகளைச் சுற்றி நடுவானில் வட்டமடித்தது.

விமானத்துக்குள்

இந்நிலையில், ஒருவழியாக இந்த விமானத்தை இயக்கிய விமானி பெலிசா டேனியல் திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்த தொழில்நுட்ப வல்லுநர்களோடு ஆலோசித்து, இரவு 8.15 மணியளவில் பத்திரமாக விமானத்தை தரையிறக்கினார். அதை அறிந்த விமான நிலையத்துக்கு வெளியே திரண்டிருந்த பயணிகளின் உறவினர்களும், பொதுமக்களும் ஆனந்த கண்ணீர் வடித்தனர். இந்நிலையில், அந்த விமானத்தில் பயணம் செய்த புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியைச் சேர்ந்த ரப்ஃபானி என்பவர், வாட்ஸ்ஆப் மூலம் வாய்ஸ் நோட்ஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், “நான் நல்லா இருக்கிறேன். எங்களுக்கு எந்த நியூஸூம் தெரியவில்லை. நாங்க லேன்டிங் ஆனபிறகு, நீங்க கேட்டபிறகு தான் விஷயமே தெரிய வந்துச்சு. விமானம் கிளம்பியபிறகு, ‘தரையிறக்க முடியவில்லை என்று சொன்னார்கள். ஏதோ தொழில்நுட்ப கோளாறு, தரையிறக்க முடியவில்லை..அதான் கொஞ்சம் இஷ்ஷூவாக இருக்கு என்று சொன்னாங்க. மேலே விமானம் பறந்தபோது சில இன்ஸ்ட்ரக்ஷன்களை கொடுத்தாங்க. ‘சீட் பெல்ட்டை யாரும் ரிமூவ் பண்ணாதீங்க. கொஞ்சம் நேரம் எல்லோரும் அமைதியா இருங்க’ என்று சொன்னாங்க. அதன்பிறகு, லைட்ஸ் எல்லாம் அதுவே ஃஆஃப் ஆகி, பிறகு ஆன் ஆகி என்று மாறி மாறி செயல்பட்டுச்சு.

ரப்ஃபானி

அதுக்கு பிறகு எந்த பிரச்னையும் இல்லை. இப்போ சேஃபாக லேன்டிங் பண்ணிட்டாங்க. இதே ஃபிளைட்டில் தான் உட்கார வைத்திருக்கிறார்கள். இதே ஃப்ளைட்டில் அனுப்புகிறார்களா என்பதும் தெரியவில்லை. அதைபற்றி முதலில் எதுவும் சொல்லவில்லை. அதன்பிறகு என்ன சொல்கிறார்கள் என்றால், சிங்கப்பூருக்கு ஒரு ஃப்ளைட் போயிருக்காம். அது, காலை மூன்றரை மணிக்கு திருச்சிக்கு ரிட்டர்ன் வருமாம். அந்த ஃப்ளைட்டை ரெடிபண்ணி தருகிறோம் என்று சொல்றாங்க. ஆனால், சக பயணிகள் பலர், ‘எங்களுக்கு மனபத்தட்டமா இருக்கு. எங்களுக்கு ஒருநாள் டைம் கொடுங்க. நாங்க ஊருக்கு போய்விட்டு ரிட்டர்ன் வருகிறோம்’ என்று சொல்றாங்க.

எங்களோட உறவினர்கள் அனைவரும் வெளியில் நின்று எங்களுக்கு வீடியோ கால் செய்து, அதிர்ச்சி விலகாமல் நலம் விசாரிக்குறாங்க. அதனால், எங்களை வெளியில் அனுப்புங்க என்று நாங்க கேட்பதற்கு, ‘கொஞ்சம் பொறுங்க. எங்களுக்கு உயரதிகாரிகளிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்று சொல்றாங்க. அதோடு, எங்களின் பெயர், போர்டிங் பாஸ் நம்பர்களை கேட்டு எழுதிக்கொண்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

விமானி

ஆனால், அவர்களின் உறவினர்கள் தான் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட செய்தியை கேள்விப்பட்டதில் இருந்து, ‘யாருக்கும் எதுவும் ஆக கூடாது’ என்று திக் திக் மனதோடு நொடிகளை நகர்த்திக்கொண்டிருந்தனர். இந்நிலையில், விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானி பெலிசா டேனியலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.