‘இந்தியாவில் 6 நாட்களுக்கு ஒரு ரயில் விபத்து’ – குற்றம்சாட்டும் சு.வெங்கடேசன் எம்.பி.

மேற்குவங்க மாநிலத்தின் தொழில் வளர்ச்சி நிறுவன அரசு செயலாளர் முதன்மை செயல் அதிகாரியும், எழுத்தாளருமான முருகன் ஐ.ஏ.எஸ், பூத்த கரிசல் எனும் பெயரில் சிறுகதை தொகுப்பு எழுதியுள்ளார். இந்த சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா சாத்தூரில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், மதுரை மத்திய தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், ‘பூத்த கரிசல்’ சிறுகதைகள் தொகுப்பு நூலினை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பெற்றுக்கொண்டார்.

நூல்

நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் சாம்சங் தொழிலாளர்களின் பிரச்னைக்கு உடனடியாக மாநில அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தோழமை கட்சியாகவும், தமிழக முதல்வராகவும் உள்ள மு.க.ஸ்டாலின் இந்த பிரச்னையில் கவனம் செலுத்தி பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க வரும்போது இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஏற்று மதிப்புடன் நடந்து கொள்ள வேண்டும். அது இல்லாதப்பட்சத்தில் மாநில அரசு சரி செய்து நடத்த வேண்டும், இங்கு பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய அரசியலமைப்பு சாசனத்திற்குட்பட்டதாக இருக்க வேண்டும்.

விழா

இந்தியாவில் 6 நாட்களுக்கு ஒரு முறை ரயில் விபத்துக்கள் நடக்கிறது. இந்திய ரயில் பாதுகாப்பில் கவச் கருவி பொருத்துவதில் மத்திய அரசு அக்கறை இல்லாமல் செயல்பட்டு கொண்டிருக்கிறது. ரயில் பாதுகாப்பிற்கு என்று கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். ரயில்வேத் துறையில் அடிப்படை மாறுதல்கள் தேவை. மேலும் கவச் பொருத்துவதில் கூடுதல் நிதியினை ஒதுக்க வேண்டும். இங்கு ஏற்கனவே நடந்த ரயில் விபத்துகளுக்கு ஆய்வு நடத்துகிறோம் என்று கூறினார்கள், ஆனால் இதுவரையிலும் ஆய்வு நடந்ததாக தெரியவில்லை” என கூறினார்.

பெயர் வைத்தல்

நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியின்போது இளம் தம்பதிகள் தங்கள் ஆண் குழந்தைக்கு பெயர் வைக்கும்படி கேட்டு மேடைக்கு வந்தனர். அப்போது குழந்தையை பெற்றுக்கொண்ட அவர், குழந்தைக்கு ‘ஆதன்’ என பெயர் சூட்டினார்.