இஸ்ரேல் – ஈரான் நாடுகள் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரான், லெபனான், பாலஸ்தீனம், ஏமன் ஆகிய நாடுகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
இந்த நிலையில் போர் குறித்து எந்த ஒரு நிலைப்பாடும் எடுக்காத அமெரிக்கா சார்பு கொண்ட அரபு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
“இஸ்ரேல் தாக்குதல் நடத்த உங்களது பிராந்தியங்களையோ அல்லது வான் வழியையோ பயன்படுத்தினால் அதற்கான பின்விளைவுகளை அனுபவிப்பீர்கள்” என்று சௌதி அரேபியா, யு.ஏ.இ, கத்தார், ஜோர்தான் ஆகிய நாடுகளை எச்சரித்துள்ளது ஈரான்.
அமெரிக்க ராணுவப்படைகளை, தங்கள் நிலப்பரப்பில் இருக்க அனுமதித்துள்ள எண்ணெய் வளமிக்க நாடுகளுக்கு ரகசிய ராஜதந்திர தொடர்புகள் வழியாக இந்த எச்சரிக்கைத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறது ‘வால்ட் ஸ்ட்ரீட் ஜர்னல்’ செய்தி தளம்.

இந்த மாத தொடக்கத்தில் இஸ்ரேல் மீது பெரிய அளவிலான ஏவுகணை தாக்குதலை நடத்தியது ஈரான். இதற்கு நிச்சயம் பதிலடி வழங்குவோம் எனக் கொதித்துள்ளனர் இஸ்ரேல் தலைவர்கள்.
ஈரானின் அணு ஆயுத ஆராய்ச்சி அல்லது எண்ணெய் வளங்களைச் சிதைக்கத் திட்டமிடுகிறது இஸ்ரேல். ஆனால் ஈரானின் இராணுவ கட்டமைப்பைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என எச்சரிக்கையாக இருக்கிறது என்கின்றனர் உலக அரசியல் நிபுணர்கள்.
இந்த நிலையில் சக இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
தங்கள் நிலப்பரப்பு அல்லது வான்வெளியிலிருந்து தாக்குதல் நடத்த இஸ்ரேலை அனுமதிப்பதன் மூலமாக, ஈரானைப் பகைத்துக்கொள்ள அரபு நாடுகள் தயாராக இல்லை என்பதை ஜோ பைடன் நிர்வாகத்திடம் அரபு நாடுகள் தெரிவித்ததாக ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ தெரிவித்திருக்கிறது.

அமெரிக்காவின் பாதுகாப்பின் கீழ் இருப்பதாகக் கருதப்படும் இந்த வளைகுடா நாடுகள் ஒவ்வொன்றிலும் அமெரிக்க ராணுவ தளம் இருக்கிறது. இருந்தாலும் இங்கிருந்து ஈரானுக்கு எதிராகச் சண்டையிடுவதை அரபு நாடுகள் உறுதியாக மறுப்பதற்குக் காரணங்கள் இருக்கின்றன.
ஈரானுடன் எல்லைப்புறத் தாக்குதல் நடந்தால், அது ஹோர்முஸ் ஜல சந்தி வழியாகச் செல்லும் எண்ணெய் ஏற்றுமதியைச் சீர்குலைக்கும். இதனால் சர்வதேச எண்ணெய் சந்தை மோசமான பாதிப்பைச் சந்திக்கும். மேலும் போர் நடப்பது அவர்களின் எண்ணெய் வள உள் கட்டமைப்பில் பாதிப்புகளை ஏற்படுத்தினால், அதற்கு மிகப் பெரிய விலையை அரபு நாடுகள் கொடுக்க வேண்டியிருக்கும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb