பாலிவுட் மற்றும் தென்னிந்திய மொழிப்படங்களில் வில்லன், காவல்துறை அதிகாரி எனப் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் மராத்தி நடிகர் சாயாஜி ஷிண்டே. இவர் தமிழில் அதிகமான படங்களில் நடித்துள்ளார். பாரதியார் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.
சாயாஜி ஷிண்டே மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். துணை முதல்வர் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்ட சாயாஜி, அடுத்த மாதம் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நடிப்பு மட்டுமல்லாது சமூக சேவை, மரங்களை நடுவது போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வரும் சாயாஜி ஷிண்டே, தான் அரசியலில் இணைந்தது குறித்துக் கூறுகையில், “எனது வேலையில் பல சவால்களைச் சந்தித்து இருக்கிறேன். அப்போது அஜித்பவாரைச் சந்தித்து உதவி கேட்டபோது, உடனே அதனைத் தீர்த்து வைத்திருக்கிறார்” என்றார். சட்டமன்றத் தேர்தலில் பிரதான பிரசாரப் பீரங்கியாக சாயாஜி இருப்பார் என்று தெரிகிறது.
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் சட்டமன்றத் தேர்தலுக்காக பா.ஜ.கவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு அமைச்சரவைக் கூட்டம் நடந்த போது பாதியிலேயே அஜித்பவார் கூட்டத்திலிருந்து கிளம்பிவிட்டார். அவர் சென்ற பிறகும் தொடர்ந்து அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுடனான கருத்து வேறுபாடு காரணமாகவே அவர் அவசரமாகப் புறப்பட்டுச் சென்றதாகச் செய்தி வெளியானது. அதோடு அஜித்பவாரை ஓரங்கட்ட முயற்சி நடப்பதாகக் காங்கிரஸ் தெரிவித்து இருந்தது.
இதற்குப் பதிலளித்துள்ள அஜித்பவார், “முதல்வருக்கும், தனக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. லாத்தூரில் விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகத்தான் அவசரமாகப் புறப்பட்டுச் சென்றேன். முதல்வர் மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரிடம் சொல்லிவிட்டுத்தான் புறப்பட்டுச் சென்றேன்” என்றார்.
தசரா அன்று தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்படும் என்று பா.ஜ.க கூட்டணிக் கட்சிகள் தெரிவித்திருந்தன. ஆனால் இப்போது மேலும் சில தினங்கள் பிடிக்கும் என்று அதே கட்சிகள் தெரிவித்துள்ளன. சிவசேனா (உத்தவ்) கட்சித் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியும் இன்று (அக்டோபர் 12) தொகுதிப் பங்கீட்டை அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88