Hurricane Milton: 100 ஆண்டுகளில் அமெரிக்கா சந்திக்காத பயங்கர புயல்; மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மில்டன் என்னும் பயங்கர புயல் அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தை தற்போது தாக்கியுள்ளது.

அமெரிக்காவின் 27-வது மாகணம் ஃப்ளோரிடா. அமெரிக்காவின் தெற்கில் இருக்கும் மாகணத்திலேயே இரண்டாவது பெரிய மக்கள் தொகையை கொண்டுள்ளது இந்த மாகாணம்.

அமெரிக்க நேரப்படி, புதன்கிழமை இரவு 8:30 மணிக்கு ஃப்ளோரிடா மாகாணத்தை மில்டன் புயல் தாக்க தொடங்கியிருக்கிறது. இந்தக் காற்றின் வேகம் ஒரு மணி நேரத்திற்கு 120 மைலாக இருக்கும் என புயலுக்கு முன்பு, அமெரிக்க தேசிய சூறாவளி மையம் அறிவித்துள்ளது.

Milton புயல் பாதிப்புகள்…

இந்த மில்டன் புயல் மிகப்பெரியதாக இருக்கும் என்று ஏற்கெனவே கணித்ததையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இருந்தும், இந்தப் புயல் அந்த மாகாணத்தில் மிகப்பெரிய சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.

இந்த புயலினால், நிலச்சரிவு, பெரு வெள்ளம், 193 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று, மின்சார தடை, கட்டட சேதம் ஆகியவை ஏற்பட்டுள்ளது. இந்த புயல் மிகப்பெரிய சேதங்களை ஏற்படுத்தும் என மூன்றாம் வகை புயலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புயல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “மில்டன் – கடந்த 100 ஆண்டுகளில் ஃப்ளோரிடா பார்க்காத பயங்கரமான சூறாவளியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், யாரும் பதற்றப்பட வேண்டாம்.

மில்டன் சூறாவளி கடக்கும் பகுதிகளில் இருக்கும் அனைவரும் அதிகாரிகள் சொல்வதை பின்பற்றுங்கள்” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தற்போது, இந்த புயல் மிகவும் மோசமடைந்ததையடுத்து ஃப்ளோரிடா மாகாணத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஃப்ளோரிடா மாகாண மக்களுக்கு உதவ ஆயிரக்கணக்கான பெடரல் அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். மேலும் 20 மில்லியன் உணவுகளும், 40 மில்லியன் லிட்டர் தண்ணீரும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.