சென்னை, கதீட்ரல் சாலையில் பல ஆண்டுகளாகத் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்துவந்த 6.09 ஏக்கர் நிலத்தை மீட்டு, ரூ.46 கோடி மதிப்பீட்டில் உலகத்தரத்திலான பூங்காவை தமிழ்நாடு அரசு உருவாக்கியது. இசை நீரூற்று, விளையாட்டுத்திடல், ஜிப்லைன் பயணம், கண்ணாடி மாளிகை என அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்பட்ட இந்த பூங்காவுக்கு `கலைஞர் நூற்றாண்டு பூங்கா’ எனப் பெயரிடப்பட்டது. இந்தநிலையில், கடந்த அக்டோபர் 7-ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் இந்தப் பூங்காவைத் திறந்து வைத்து பார்வையிட்டார். ஆனால், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்துவைக்கப்பட்ட இந்தப் பூங்காவின் கட்டண முறைகள் பணவசதி படைத்த எலைட் மக்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் மிக அதிகமாக இருப்பதாக பொதுமக்களும் சில அரசியல் தலைவர்களும் குற்றம்சாட்டிவருகின்றனர்.
கலைஞர் நூற்றாண்டு பூங்கா – சிறப்பம்சங்கள்!
இந்த கலைஞர் நூற்றாண்டு பூங்கா தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் பல்வேறு சிறப்பம்சங்கள், கட்டண விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. அதில் குறிப்பாக, கடந்த 2023 ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று, தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், `சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள செங்காந்தள் பூங்காவுக்கு அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா ஒன்று அமைக்கப்படும்’ என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, நீண்ட நெடிய சட்டப் போராட்டத்துக்கு பிறகு அரசால் மீட்கப்பட்டு தோட்டக்கலை துறைக்கு மாற்றப்பட்ட நிலத்தில், பூங்கா அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கடந்த பிப்.27-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.
அதன்படி, பரந்து விரிந்த பசுமைச் சூழலில் பொழுதுப்போக்கு அம்சங்களுடன் பல்வேறு வகையான அழகிய, அரியவகை தாவரங்கள் மற்றும் மரங்களைக் கொண்டதாக உலகத் தரத்துடன் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டது. இந்தப் பூங்காவில், நுழைவாயில் அருகில் உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், 500 மீட்டர் நீளமுடைய ஜிப்லைன், பார்வையாளர்களை படம் பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடம், தொடர் கொடி வளைவுப்பாதை, 120 அடி நீளமுடைய பனிமூட்டப் பாதை, 2,600 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள ஆர்க்கிட் குடில், அரிய வகை மற்றும் கண்கவர் பூச்செடிகளால் காட்சிப்படுத்தப்பட்ட 16 மீட்டர் உயரமுடைய 10,000 சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகை, அயல்நாட்டு பறவைகளை கொண்ட பறவையகம் உள்ளது. மேலும் 23 அலங்கார வளைவுபசுமை குகை, சிற்றுண்டியகம், சூரியகாந்தி கூழாங்கல் பாதை, மர வீடு, அருவி, இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பசுமை நிழற்கூடாரம் பாரம்பரிய காய்கறித் தோட்டம் ஆகிய சிறப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பூங்காவின் சுவர்களில் தீட்டப்பட்டிருக்கும் சுவரோவியங்கள் பூங்காவை மேலும் அழகுபடுத்துகின்றன.
ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கட்டணங்கள்!
இந்தப் பூங்காவை பார்வையிட நுழைவுக்கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.100-ம், சிறியவர்களுக்கு ரூ.50-ம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர சிறப்பு அம்சங்களை பார்வையிட தனியே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜிப்லைன் சாகச பயணம் செல்ல பெரியவர்களுக்கு ரூ.250, சிறியவர்களுக்கு ரூ.200, குழந்தைகள் மடியில் அமர்ந்து செல்ல ரூ.150. பறவையகத்தை பார்வையிட, உணவு அளிக்க பெரியவர்களுக்கு ரூ.150, சிறியவர்களுக்கு ரூ.75. மாலை நேரத்தில் இசை நீரூற்று நடனம் காண ரூ.50, கண்ணாடி மாளிகையை பார்வையிட பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.40. குழந்தைகள் பங்கு பெறும் ஒரு சவாரி விளையாட்டுக்கு ரூ.50, புகைப்பட கருவிகளுக்கு ரூ.100, வீடியோ கேமராக்களுக்கு ரூ.5,000 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நுழைவு கட்டணம் 3 மணி நேரம் மட்டுமே செல்லுபடியாகும். மேலும், https://tnhorticulture.in/kcpetickets என்ற இணையதளம் மூலம் நுழைவு கட்டண விவரங்கள் மற்றும் நுழைவு சீட்டை பெறலாம். க்யூஆர் குறியீடு மூலமாகவும் நுழைவு சீட்டை பெற்றுக் கொள்ளலாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
`கட்டணத்தை குறைக்க வேண்டும்!’ – வலுக்கும் கோரிக்கை:
இந்த நிலையில், புதிய கலைஞர் நூற்றாண்டு பூங்காவின் கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும் அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். அதேபோல, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், “சென்னை கதீட்ரல் சாலையில் தனியாரிடமிருந்து மீட்கப்பட்ட அரசுக்கு சொந்தமான நிலத்தில் வெளிநாடுகளுக்கு இணையான அம்சங்களுடம் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அதற்கான கட்டணம் ஏழை மக்களால் செலுத்த முடியாத அளவுக்கு அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது சரியல்ல.
நுழைவுக் கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது 3 மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பூங்காவில் உள்ள பிற வசதிகளை பார்வையிட தனித்தனிக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜிப்லைனில் ஏறி சாகச பயணம் மேற்கொள்ள ரூ.250, பறவையகத்தில் பல்வேறு வெளிநாட்டு பறவைகளை பார்வையிட மற்றும் உணவளித்து மகிழ்ந்திட ரூ.150, இசை நீருற்றின் கண்கவர் நடனத்தை காண ரூ.50, கண்ணாடி மாளிகையில் அரிய வகை செடிகளை பார்வையிட ரூ.50, குழந்தைகள் சவாரி விளையாட்டுக்கு ரூ.50 என ஒருவர் பூங்காவின் அனைத்து அம்சங்களையும் அனுபவிக்க ரூ.650 செலுத்த வேண்டும். இது மிக அதிகம்.
செம்மொழிப் பூங்காவுக்கு இணையாக கலைஞர் நூற்றாண்டுப் பூங்காவின் நுழைவுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். பூங்காவில் உள்ள அனைத்து அம்சங்களையும் அனுபவிக்க மொத்தமாக குறைந்த கட்டணத்தை நிர்ணயிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். அப்போது தான் பூங்கா உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும். இல்லாவிட்டால் இது பணக்காரர்களுக்கான பூங்காவாகவே பார்க்கப்படும்!” என தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
அதேபோல பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்த தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின், கலைஞர் நூற்றாண்டு பூங்காவிற்கு சாதாரண அடித்தட்டு மக்கள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. கணவன், மனைவி, இரு குழந்தைகள் உள்ள ஒரு குடும்பம் சென்று முழுமையாக அனைத்தையும் பார்வையிட வேண்டுமென்றால் ஒருவருக்கு குறைந்தது ரூபாய். 800 கட்டணம் (நான்கு பேருக்கு மொத்தம் ரூபாய் 3200) செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது நியாயமல்ல. மேலும் போக்குவரத்து, சாப்பாடு உள்ளிட்ட செலவுகளை கணக்கிட்டால் குறைந்தது ரூபாய் 5,000 இருந்தால்தான் ஒரு குடும்பம் அங்கே செல்ல முடியும் என்பது முதல்வருக்கு தெரியுமா? சம்பந்தப்பட்ட துறையிலிருந்து குழந்தைகள், சிறுவர்களுக்கு இலவசமாக அனுமதியளிக்கப்பட வேண்டும். வசதியானவர்களுக்கு மட்டும் இந்த பூங்கா அமைக்கப்பட வேண்டிய காரணம் என்ன? அரசு வியாபாரம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக 18 வயதுக்குட்பட்டோருக்கு இலவசம் என உத்தரவிட வேண்டும்!” என கோரிக்கை விடுத்திருக்கிறார்.