Kerala Lottery: `வயநாட்டுல சொந்தகாரங்க வீட்டுக்கு போனப்போ..!’ – ரூ.25 கோடி வென்ற மெக்கானிக்

கேரள மாநிலத்தில் அரசு லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருகிறது. அம்மாநில அரசின் லாட்டரித்துறை சார்பில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 25 கோடி ரூபாய் பம்பர் பரிசுக்கான லாட்டரிச்சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. ஒரு லாட்டரிச்சீட்டு 500 ரூபாய் விலையில், மொத்தம் 80 லட்சம் லாட்டரி சீட்டுகள் அச்சிடப்பட்டன. அதில் சுமார் 70 லட்சம் லாட்டரிச் சீட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரித்துறை அலுவலகத்தில் நிதித்துறை அமைச்சர் பாலகோபால் முன்னிலையில் குலுக்கல் நடைபெற்றது. அதில் TG 434222 என்ற லாட்டரிச் சீட்டுக்கு 25 கோடி ரூபாய் பரிசு விழுந்தது.

ரூ.25 கோடி பம்பர் பரிசு வென்ற அல்தாப்

அந்த லாட்டரிச் சீட்டு வயநாடு மாவட்டத்தில் பத்தேரி பகுதியில் உள்ள நாகராஜ் என்ற ஏஜெண்ட் மூலம் விற்பனையாகி இருந்தது. நேற்று இரவு வரை அந்த லாட்டரிச் சீட்டை வாங்கியது யார் என தெரியாமலே இருந்தது. ஒரு மாதம் முன்பு அந்த டிக்கெட் விற்பனை ஆனதாகவும். தான் விற்பனை செய்த லாட்டரிச் சீட்டுக்கு பம்பர் பரிசு விழுந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளதாகவும் நாகராஜ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் பாண்டியபுரா பகுதியைச் சேர்ந்த மெக்கானிக்கல் வேலை செய்யும் அல்தாப் என்பவருக்கு 25 கோடி ரூபாய் ஓணம் பம்பர் பரிசு விழுந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அல்தாப் கூறுகையில், “வயநாட்டில் உறவினர் வீட்டுக்குச் சென்றபோது நான் இந்த லாட்டரிச் சீட்டை வாங்கினேன். கடந்த 15 ஆண்டுகளாக லாட்டரிச் சீட்டு வாங்கி வருகிறேன். நான் வாங்கிய லாட்டரிச் சீட்டுக்கு பரிசு விழுந்திருப்பதை நேற்றே அறிந்துகொண்டேன். இப்போது நான் ஃபுல் ஹேப்பி. மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்பதுதான் எனது மிகப்பெரிய ஆசை. வாடகை வீட்டில் இருந்து சொந்தமாக வீடுகட்டி குடியேற வேண்டும்” என்றார். இரண்டாம் பரிசாக 20 பேருக்கு தலா ஒரு கோடி ரூபாய் வீதமும், மூன்றாம் பரிசாக 50 லட்சம் ரூபாய் என படிப்படியாக குறைந்து 5000, 2000, 1000, 500 ரூபாய்களிலும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல்

கேரள லாட்டரித் துறையில் ஓணம் பம்பர் பரிசுத்தொகையான 25 கோடி ரூபாய்தான் பெரிய பரிசுத்தொகையாக உள்ளது. 25 கோடி ரூபாய் பரிசில் லாட்டரிச்சீட்டு விற்பனை செய்த நாகராஜிக்கு கமிஷனாக 10 சதவிகிதம் தொகையான இரண்டரை கோடி ரூபாய் வழங்கப்படும். 30 சதவிகிதம் தொகையான 6.75 கோடி ரூபாய் வருமான வரியாக பிடித்தம் செய்யப்படும். மீதமுள்ள 15.75 கோடி ரூபாய் பரிசு விழுந்தவரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். அதன் பின்னர் சுகாதாரம், கல்வி வரிகள் என சுமார் 2.85 கோடி ரூபாய் வங்கிக்கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும். இறுதியாக சுமார் 12.8 கோடி ரூபாய் (ரூ.12,88,26,000) பரிசு விழுந்தவருக்கு மிஞ்சும்.