“வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தயார்”
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த பெருமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
இந்தாண்டு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதுக்கோட்டையில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்து பருவமழையை எதிர்கொள்ள என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, எந்தெந்த பணிகள் தாமதமாகியுள்ளன, தாமதத்திற்கு காரணம் என்ன?, நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளதா? வேலையில் தொய்வு உள்ளதா? என்பது குறித்து கேட்டு தெரிந்துகொண்டு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தமிழக முழுவதும் உள்ள அத்தனை நகரப் பகுதிகளிலும் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன. எந்த நிலையையும் எதிர்கொள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.
அனைத்து வகை மக்களையும் தங்க வைப்பதற்கும், மரம் விழுந்தால் அகற்றுவதற்கும், பல இடங்களில் உணவு தயாரித்து வழங்குவதற்கும், பால் போன்ற அத்தியாவசிய பொருள்கள் கொண்டு செல்வதற்கும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் முடிவெடுப்பார். எதிர்க்கட்சியினர் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம் என்று என்றாவது சொல்வார்களா? நாங்கள் செயல்பட்டுள்ளோமா இல்லையா என்பதை கண்காணிக்க ஆடிட் உள்ளது. எல்லாம் திட்டமிட்டபடி தமிழ்நாடு முதலமைச்சர் மூலம் இயக்கப்படும். அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
“அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது..”
வடகிழக்கு பருவமழை சராசரியாக இருந்தால் அப்போது என்ன தேவை என்று பார்த்து அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக எடுக்கப்பட்டுள்ளது.
இயற்கையின் சீற்றம் அதிகமாக இருக்கும் போது ஒரே நேரத்தில் குறுகிய நேரத்தில் அதிகமான மழை பெய்யும் பொழுது சில நேரம் பணிகள் தாமதமாகும். அந்த நேரத்தில் தான் பம்பு போன்றவற்றை வைத்து நீரை எடுப்பதற்கும் பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“ஏழை மக்களை வரி உயர்வு பாதிக்காது..”
வரி உயர்வுக்கு ஏற்கெனவே சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 20 ஆண்டுகாலம், 15 ஆண்டு காலம் வரி உயர்வு இல்லாமல் ஒரே நேரத்தில் வரியை ஏற்றி சுமையை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக ஆண்டுதோறும் குறைவாக வகுக்கப்படுகிறது.
ஏழை மக்களை வரி உயர்வு பாதிக்காது. 1,200 சதுர அடிக்கு மேல் கட்டம் கட்டியவர்களுக்கு மட்டுமே 30, 40 சதவிகிதம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. கீழ்த்தட்டு மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தேர்தல் வரப்போவதால் அதிமுக-வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு என்று 2,600 பணியிடங்களை நிரப்பப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கூறினார். அதன்படி, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேர்வில் 85% மதிப்பெண் பெற்றவர்கள் 7,272 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 2,600 பேர்களை தேர்வு செய்து பணியமத்தப்பட உள்ளனர்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group… இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…