கழுகார்: `விரட்டிவிட்ட அதிமுக மாஜி; `நிலவு’ பிரமுகர்?’ டு `கோரிக்கைவைத்த உதவி… உஷாரான மந்திரி’

அ.தி.மு.க-வில் மணியான மாஜிக்கும், அவருடைய நிழலான `நிலவு’ பிரமுகருக்கும் இடையே பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் மான்செஸ்டர் மாவட்ட ரத்தத்தின் ரத்தங்கள். இப்போது தன்னைச் சுற்றிவளைத்திருக்கும் வழக்குகளுக்கெல்லாம் காரணம் `நிலவு’ பிரமுகர்தான் என மணியானவர் நினைக்கிறாராம். “டெண்டர் விவகாரங்களில் கவனமாக இருக்கச் சொல்லி நான் அப்போதே சொன்னேன். ஆனால், அது எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் என்னைச் சிக்கலில் தள்ளிவிட்டார்கள்” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கொதித்த மணியானவர், கொஞ்ச காலத்துக்கு தான் இருக்கும் பக்கமே வர வேண்டாம் என `நிலவு’ பிரமுகமரிடமும் முகத்தில் அடித்ததுபோல் சொல்லிவிட்டாராம். இதில் கடுப்பான `நிலவு’ பிரமுகர், கரைவேட்டியை மாற்றிவிடலாமா எனத் தனக்கு நெருக்கமானவர்களுடன் ஆலோசனையில் இறங்கியிருக்கிறாராம்.

அமைச்சரவை மாற்றத்தில் பதவியை இழந்த மந்திரி ஒருவரின் உதவியாளராக இருந்தவர், அதே இலாகாவுக்கு மீண்டும் மந்திரியாகியிருப்பவரைச் சந்தித்து, “உங்க கூடவே உதவியாளராக இருக்கட்டுமா?” என்று கேட்டாராம். அடுத்த நொடியே, “உதவியாளர் வேலை கேட்டு என்னுடைய அலுவலகம் பக்கமே வரக் கூடாது” எனச் சொல்லி விரட்டிவிட்டாராம் புதிய மந்திரி. என்ன நடந்தது என விசாரித்தால், “ஏற்கெனவே இவர் உதவியாளராக இருந்த மந்திரியின் பதவி பறிக்கப்பட்டதற்கு குடும்ப உறவுகள் மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட பி.ஏ-வின் வசூல் வேட்டையும் ஒரு காரணம். நீங்க வேற கஷ்டப்பட்டு மறுபடியும் மந்திரியாகியிருக்கீங்க… ஜாக்கிரதை” என புதிய மந்திரியின் ஆதரவாளர்கள் எச்சரித்தார்களாம். அதனால்தான் அவர் ஆரம்பத்திலேயே உஷாராகிவிட்டார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

வருகிற 14-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரையும் அதில் பங்கெடுக்க வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்துவருகிறார். “ `இந்தியா’ கூட்டணியின் ஒற்றுமையை உறுதி செய்வதற்கும், பா.ஜ.க தலைவர்கள் தொடர்ந்து ராகுல் காந்திக்கு எதிராகப் பேசிவருவதைக் கண்டித்துமே இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படுகிறது” என செல்வப்பெருந்தகை தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால், வேறு சில காரணங்களும் இருப்பதாகக் கிசுகிசுக்கிறார்கள் சீனியர் கதர்கள்.

செல்வப்பெருந்தகை

“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்குத் தொடர்பு இருப்பதாக வெளியான செய்திகள், மாவட்டத் தலைவர்கள் மத்தியில் எழுந்திருக்கும் அதிருப்தி, கட்சி சார்பில் நடத்திய நடைப்பயணம் சொதப்பியது என செல்வப்பெருந்தகை தொட்டதெல்லாம் நெகட்டிவாகவே சென்றுகொண்டிருக்கின்றன. இதையெல்லாம் எதிர்க்கோஷ்டியினர் மேலிடத்துக்குப் போட்டுக்கொடுத்திருப்பதால், டெல்லியைக் குளிர்விக்கவே செல்வப்பெருந்தகை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுகிறார். ஆனால், இதுவும் எடுபடாது” என்கிறார்கள் சீனியர்கள்.

மெரினா விமானப்படை சாகச நிகழ்ச்சிக்கு வந்த மக்கள் அடிப்படை வசதிகளின்றி பரிதவித்ததும், ஐந்து பேர் உயிரிழந்ததும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இதனால் கோபமடைந்த ஆட்சி மேலிடம், கோட்டையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை உயரதிகாரிகளிடம் இது குறித்து விளக்கம் கேட்டிருக்கிறது. “காலை 7 மணியிலிருந்து மதியம் 12 மணி வரை மெரினாவுக்கு வந்த கூட்டம், நிகழ்ச்சி முடிந்ததும் ஒரே நேரத்தில் வெளியேறியதால்தான் இந்த நெரிசல் ஏற்பட்டது.

Chennai Air Show

கூட்டம் எதிர்பார்த்ததைவிடப் பெரிய அளவில் இருக்குமென்பதை, நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து நடைபெற்ற ஆலோசனையின்போது கோட்டை அதிகாரிகளிடம் எடுத்துச்சொல்லியும் அதை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர்கள் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தாலே இந்த அசம்பாவிதங்களைத் தவிர்த்திருக்கலாம்” எனச் சொல்லியிருக்கிறார்கள். இதையடுத்து ஆட்சி மேலிடம் கோட்டை அதிகாரிகளை வறுத்தெடுக்க, விழிபிதுங்கி நின்றிருக்கிறார்கள் அவர்கள்.

அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர் மாற்றத்துக்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டிவருகிறது ஆளுங்கட்சித் தலைமை. “அமைச்சரவை மாற்ற சலசலப்புகள் ஓய்ந்ததும், மாவட்டச் செயலாளர் மாற்றத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யலாம் என ஏற்கெனவே தலைமை முடிவு செய்திருந்தது.

குறிப்பாக கோவை, நாமக்கல், திருப்பூர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களின் மா.செ-க்கள் குறித்து ஏகப்பட்ட புகார்கள் தலைமைக்கு வந்திருப்பதால், அவர்கள் மாற்றப்படலாம்” என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில். இந்த விவகாரம் கட்சிக்குள் தீயாய்ப் பரவ, மா.செ-க்கள் பலரும் தங்களுக்குத் தெரிந்த வழிகளில் பதவிகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்களாம்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb