திமுக அரசை கண்டித்து மதுரை பழங்காநத்தத்தில் அதிமுக அம்மா பேரவை சார்பில் சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்தை தொடங்கி வைத்து, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, “1972-ல் எம்.ஜி.ஆர் இந்த இயக்கத்தை ஆரம்பித்து திருமங்கலம் பகுதிக்கு வாக்கு சேகரிக்க வந்தபோது, ஒரு லட்சம் பேர் திரண்டு வந்து அவரை வரவேற்றார்கள். அதேபோல் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க அம்மா பேரவையின் சார்பில் நடைபெறும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டு வந்து மீண்டும் வரலாறு படைத்துள்ளனர். .

அதிமுக மீண்டும் 2026 தேர்தலில் வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்யும். கிரேக்க பழமொழி ஒன்றில் அனைத்து சாலைகளும் ரோமாபுரி நோக்கி செல்கிறது என்று சொல்வார்கள். ஆனால், இன்றைக்கு அனைவரும் எடப்பாடி இல்லம் நோக்கி செல்கின்றனர் என்ற நிலை உருவாகிறது.
ஐம்பெரும் தலைவர்களில் கருணாநிதி இல்லை என்பது ஸ்டாலின், உதயநிதிக்குத் தெரியுமா? அதேபோல் 1967-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் குண்டடிப்பட்டு இருந்தபோது அவருடைய புகைப்படத்தை வைத்து உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்று 234 தொகுதியிலும் போஸ்டர் ஒட்டப்பட்டதன் மூலம் அண்ணா வெற்றி பெற்றார். அதற்கு காரணமானவர் எம்.ஜி.ஆர் என்பது உதயநிதிக்கு தெரியுமா?
தம்பி வா, தலைமை ஏற்க வா என்று நாவலரை பார்த்து அண்ணா கூறினார். கருணாநிதியை பார்த்து கூறவில்லை. அண்ணாவின் மறைவிற்கு பின்பு குறுக்கு வழியில் எம்.ஜி.ஆரை கெஞ்சி கூத்தாடி ஆட்சிக்கு வந்தவர் தான் கருணாநிதி. அன்றைக்கு சைக்கிளில் வந்தவர்கள் காரில் சென்றார்கள். இதன் மூலம் திமுக-வினரின் சொத்து உயர்ந்தது, இதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் சொத்துக் கணக்கு கேட்டார், அதனைத் தொடர்ந்து அதிமுக உருவானது.
இன்றைக்கு திமுக-வில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதவியை ஸ்டாலினும், உதயநிதியும் தங்கள் சொத்துபோல அனுபவித்து வருகிறார்கள். அண்ணாவின் மறைவிற்கு பின்பு நயவஞ்சகத்துடன் கருணாநிதி திமுக-வை கைப்பற்றி குடும்ப சொத்து ஆக்கிவிட்டார்.

திமுக-வில் தகுதி உள்ள மூத்த தலைவர்கள் உள்ளார்கள். அவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கியுள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதில் என்ன தவறு உள்ளது? .
தீயசக்தி திமுக-வை அழிக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் எங்களுக்கு சொல்லிக் கொடுத்த வழியை நாங்கள் பின்பற்றி வருகிறோம், திமுக-வை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்து விட வேண்டும்… அதுவரை நாங்கள் ஓய மாட்டோம்.
இன்றைக்கு டி.டி.வி.தினகரனையும், ஓ.பி.எஸ்சை-யும் வைத்துக்கொண்டு அதிமுக-வை அசைத்து விடலாம் என்று ஸ்டாலின் நினைத்து வருகிறார். .
அதிமுக சுக்குநூறாகி விட்டது, யாரும் கூட்டணிக்கு நம்பி வரமாட்டார்கள் என்று ஸ்டாலின் ஊடகங்களின் மூலமாக திறமையாக செய்து வருகிறார், ஓபிஎஸ் சக்தி என்ன என்று தேர்தலில் தெரிந்து விட்டது. ராம்நாடு நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலைக்கு எதிராக நின்று தோற்றுப் போனார், அதேபோல் டி.டி.வி.தினகரன் தேனியில் நின்று தோல்வி அடைந்தார். அதிமுக-வுக்கு எதிராக நின்ற இருவரும் தோல்வி அடைந்தார்கள்.
ஓபிஎஸ், டி.டி.வி.தினகரனும் இரட்டை இலைக்கு எதிராக நின்று மண்ணை கவ்வி, செல்லாக்காசாகிவிட்டார்கள், 2026 தேர்தலில் அதிமுக-விற்கு எடப்பாடி பழனிசாமி முடிவுரை எழுதுவார் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார், இதைச் சொல்ல அவருக்கு என்ன தகுதி உள்ளது?

ஜெயலலிதா வீட்டில் வேலை பார்த்த குடும்பத்தைச் சேர்ந்த டி.டி.வி.தினகரன், அம்மா பெயரில் கட்சி ஆரம்பித்தார். ஓபிஎஸ் அதிமுக-வை எதிர்த்து நின்று தோற்கடிக்க பெரிய சூழ்ச்சி செய்தார். தற்போது சேர்க்க வேண்டும் என்கிறார், அவருக்கு வெட்கம், மானம், சூடு சொரணை இல்லையா? இவர்கள் புலி, சிங்கம் என்று நீங்கள் நினைத்திட வேண்டாம். எடப்பாடி பழனிசாமியின் சக்திக்கு முன்பு அனைவரும் பூஜ்ஜியம்தான். நமக்கு போட்டி திமுக-தான் என்பதை உறுதியாக கூறுகிறேன்.
ஜெயலலிதா எதிர்க்கட்சியாக இருக்கும்போது 62 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள், தற்போது எடப்பாடி பழனிசாமி 75 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தலில் 43 தொகுதிகளில் ஒரு லட்சத்து 92 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தால் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அமர்ந்திருப்பார்.
அதிமுக-வின் வாக்கு வங்கி குறைந்து விட்டதாக சிலர் கூறிவருகிறார்கள். 1996 ஆம் ஆண்டு அதிமுக தோல்வி அடைந்தபோது திமுக பெற்ற வாக்கு 53 சதவிகிதம், அதிமுக பெற்றது 27 சதவிகிதம். அதனை தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு அதிமுக பெற்ற வாக்கு 50 சதவிகிதம், திமுக பெற்ற வாக்கு 36 சதவிகிதம் ஆகும். அதனால் வாக்கு சதவிகிதம் கூடும், குறையும். இதை நாம் கணக்கில் கொள்ளக் கூடாது. இன்றைக்கு அதிமுக-வில் தொய்வு ஏற்பட்டதாக திமுக-வினர் தொடர்ந்து பொய்யான விளம்பரத்தை பரப்புகிறார்கள்… இதில் மக்கள் ஏமாற மாட்டார்கள்.
மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுக வரலாம் என்று திருமாவளவன் கூறினார். அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்த ஸ்டாலின், திருமாவளவனிடம் அந்த மாநாட்டில் ஆர்.எஸ்.பாரதியும் , இளங்கோவனும் கலந்து கொள்வார்கள் என்று கூறினார், இந்த மது ஒழிப்பு மாநாடிற்கு அமைச்சர்கள் நேரு, வேலு ஆகியோர் செலவு செய்தனர். மேடை, சேர் உட்பட அனைத்தும் திமுக செலவில் போடப்பட்டது. அதிமுக-வை அழைக்கிறேன் என்று ஒரு கல்லை மட்டும் ஏறிந்த திருமாவளவன், அதன் மூலம் பல கோடி ஆதாயத்தை பெற்றுவிட்டார், அந்த மது ஒழிப்பு மாநாட்டில் மத்திய அரசு அனைத்து மாநிலங்களிலும் மது விலக்கை கொண்டு வர வேண்டும் என தீர்மானத்தை போட்டனர். தமிழ்நாடு நினைத்தால் சட்டம் இயற்ற முடியாதா? மக்களே இதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அதேபோல் வைகோவும் திமுக-வை எதிர்த்துதான் வெளியே சென்றார். தற்போது அவருக்கு ராஜ்ய சபா பதவி, மகனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கொடுத்ததால் வாய் திறக்கவில்லை. அதேபோல் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்து உண்டியல் குலுக்குவார்கள். தற்பொழுது எந்த போராட்டமும் செய்யவில்லை, உண்டியல் குலுக்கவில்லை. அவர்களுக்கு தேவையானது வந்து சேர்ந்து விட்டது.

தினகரன், லண்டன் வழக்கிலிருந்து தப்பிக்க மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளார். அதேபோல் மூன்று முறை முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் மீது சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளது. அதில் தப்பிக்க பா.ஜ.க பின்னால் உள்ளார்.
ஆனால், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, அன்பழகன் ஆகியோர் மீது வழக்கு தொடுத்துள்ளார்கள், ஆனால் நாங்கள் பயப்படப் போவதில்லை.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் நாங்கள் நாணயத்தை நாங்களே வெளியிட்டோம், ஆனால் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் மத்திய அமைச்சரை அழைத்து நாணயத்தை வெளியிட்டார் ஸ்டாலின். அதனைத் தொடர்ந்து ஸ்டாலின் அமெரிக்கா சென்று வந்த பிறகு மோடியை சந்தித்து மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் கேட்டார்.
இன்றைக்கு முதலமைச்சர் தனக்கு உடம்பு சரியில்லை என்று தன் மகனை வைத்து ஆய்வு கூட்டத்தை நடத்துகிறார், இதையெல்லாம் 2026 வரை பொறுத்துக் கொள்ளுங்கள். எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சிக்கு வருவார் ஸ்டாலின் வீட்டுக்குப் போவார்” என்று பேசினார்.