Ratan Tata : `ஒரே ஒரு மெயில்தான்’ – ரத்தன் டாடாவால் மாறிய கோவை பெண் தொழில்முனைவோரின் வாழ்க்கை!

டாடா குழுமம் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா மறைவுக்கு, நாடு முழுவதும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஒரு தொழிலதிபராக ஏராளமான நிறுவனங்களை வெற்றிகரமாக வழி நடத்தியவர் என்பது மட்டுமே அவரின் அடையாளம் இல்லை. நாடு முழுவதும் கனவு, புதுமையுடன் இருந்த ஏராளமானோர் தொழில்முனைவோராக தடம் பதிக்க கைகொடுத்தவர் ரத்தன் டாடா.

Ratan Tata – ரத்தன் டாடா

அவரால் பயனடைந்தவர்களில் கோவையின் பிரபல பெண் தொழில்முனைவோர் ஹேமலதாவும் ஒருவர். Ampere மின்சார வாகன உற்பத்தி நிறுவனத்தின் நிறுவனர். தற்போது Green Collar Agritech Solutions நிறுவனத்தின் இணை நிறுவனராக உள்ளார்.

ஹேமலதாவின் Ampere நிறுவனத்தில் ரத்தன் டாடா முதலீடு செய்திருந்தார். அது அவரின் வாழ்வில் திருப்புமுனையாக மாறியது. ரத்தன் டாடா உடனான நினைவுகள் குறித்து ஹேமலதா கூறுகையில், “என்னுடைய சொந்த ஊர் சேலம். அப்பா பேராசிரியர், அம்மா  ஆசிரியர். நான் முதல் தலைமுறை தொழில்முனைவோர்.

ஹேமலதா

எனக்கு யாரையும் தெரியாது. கோவை ஜி.சி.டியில் கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங், பிறகு எம்.பி.ஏ முடித்துவிட்டு சில தொழில்களை செய்தோம். மின்சார வாகனம் உற்பத்தி செய்ய முடிவு செய்தோம்.  கிராமத்தில் இருப்பவர்களுக்கு ஸ்கூட்டர் வழங்குவது என் நோக்கம்.

முதலீடுக்காக ரத்தன் டாடா சாரிடம் உதவி கேட்க முயற்சித்தோம். ‘கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு பேருந்து கட்டணத்தை விட குறைவான விலை இருந்தால்தான் மக்கள் வாங்குவார்கள். உதவி செய்ய முடியுமா.’ என்று 2008-ம் ஆண்டு சாருக்கு மெயில் அனுப்பினேன். அப்போது இந்தியாவில் மின்சார வாகனம் பெரியளவுக்கு வரவில்லை.

ரத்தன் டாடா

மக்களுக்கு ஏன் குறைந்த விலையில் மின்சார வாகனம் தயாரிக்க கூடாது, அதை இலங்கை, பாகிஸ்தான், வங்கதேச மாதிரியான நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம், சிறிய டவுன்களில் பேக்டரி அமைக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தேன்.

அவரது உதவியாளரிடம் இருந்து பதில் வந்தது. அப்போது ரத்தன் டாடா கோவை வருவதாக திட்டமிட்டிருந்தார். எனவே அவரை சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்று எதார்த்தமாக கேட்டேன். சார் தரப்பில் இருந்தும் எனக்கு வாழ்த்து தெரிவித்து, நிச்சயம் சந்திப்பதாக கூறியிருந்தார். எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. இருப்பினும் அவரை சந்திக்க முடியவில்லை.

ரத்தன் டாடாவுடன் ஹேமலதா

அத்தனை ஆசைகளும் உடைந்துபோனது. அதற்கு அடுத்த மாதமே அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 10 நிமிடங்கள் தான்  நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. என்னுடைய கண்களை மட்டுமே உற்று நோக்கி, நான் சொல்வதை கவனித்தார். என் திட்டங்களை முழுமையாக விளக்கினேன்.

அவருக்கு இன்னொரு மீட்டிங் இருந்ததால், ‘அதை முடித்துவிட்டு வந்து உங்கள் வாகனத்தை பார்க்கிறேன். காத்திருக்க முடியுமா.’ என கேட்டார். மீட்டிங் முடித்து வந்து என் வாகனத்தை பார்த்தார். பிறகு மும்பையில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் வைத்து சாரை மீண்டும் பார்த்தோம். ரத்தன் சார் அருகில் வந்து கைகுலுக்கி, ‘ப்ளீஸ் வெயிட்’ என்று கூறி சென்றார்.

ரத்தன் டாடா

சிறிது நேரத்தில் அவரே வந்து என்னை உள்ளே அழைத்து சென்று, வாகனம் தொடர்பான அனைத்து விவரங்களையும் கேட்டார். சிரித்துக் கொண்டே அனைத்தையும் ஆழமாக உள் வாங்கிக் கொண்டார். அதன் பிறகு நாங்கள் ஊருக்கு வந்துவிட்டோம்.

திடீரென்று ஆண்டு அரசு மானியத்தை ரத்து செய்ததால், தொழிலில் சவாலான சூழ்நிலை ஏற்பட்டது. மாதம் 300 வாகனங்களை உற்பத்தி செய்து கொண்டிருந்தோம். ஆனால், மானியம் ரத்து செய்த காரணத்தால் அது 60 ஆக குறைந்துவிட்டது. அப்போது சார் தரப்பில் இருந்து சிறிய முதலீடு செய்தனர். அந்த நேரத்தில் அது எனக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது.

ஹேமலதா

அது ஊடகங்களில் வெளியாகி இந்தியா முழுவதும் பரவிவிட்டது. அதன் பிறகு பலர் முதலீடு செய்தனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்புகூட ஒரு நிகழ்ச்சிக்காக அவரை அழைத்திருந்தேன். அப்போது  அவரால் வரமுடியவில்லை என்றாலும் பதில் அனுப்பினார்.

வெற்றி பெற வேண்டும் என்ற உறுதி மட்டும் என்னிடம் இருந்தது. அவரின் சந்திப்பும், உதவியும் மிகவும் ஆத்மார்த்தமாக இருந்தது. அது என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. வங்கியில் சிறிய லோனுக்கே ஏராளமான ஆவணங்களை கேட்பார்கள்.

தொழில்முனைவோர்

அப்போதுகூட ஒரு வங்கியில் லோனுக்கு கியரான்டி கேட்டார்கள். அதற்கு எதுவுமில்லை என்ற நேரத்தில் சார், எந்த ஆவணமும் இல்லாமல் எனக்கு உதவி செய்தார். தரத்தில் மட்டும் கவனம் செலுத்து வேண்டும் என்பதில் தொடங்கி எப்படி மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்பது வரை சார் சில அறிவுரைகளை வழங்கினார்.

தற்போது நான் Ampere நிறுவனத்தில் இருந்து வெளிவந்துவிட்டேன். மும்பையைச் சேர்ந்தவர்கள் அந்த நிறுவனத்தை வாங்கினர். என்னுடைய வெற்றிக்கு சார் கொடுத்த ஊக்கமும் முக்கிய காரணம். ரத்தன் சாருடன் சில நிமிடங்கள் தான் பகிர்ந்து கொண்டேன். இருப்பினும் அதை காலத்துக்கும் மறக்க முடியாது.

ரத்தன் டாடா

சாரின் மறைவை ஏற்க முடியவில்லை. என் தந்தையை இழந்த உணர்வு ஏற்படுகிறது. நம் நாட்டை வல்லரசாக்க வேண்டும் என்பதுதான் அவரின் நோக்கமாக இருந்தது. என்னை போல பல தொழில்முனைவோர்களுக்கு உதவி செய்துள்ளார். அவரின் மறைவு நாட்டுக்கே பேரிழப்பு.” என்றார்.