திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள கொங்கல்நகரத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஜெயராமன். இவர் தனது விவசாய நிலத்துக்கு மின் இணைப்பு பெறவேண்டி தட்கல் முறையில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில், விவசாயி ஜெயராமனை அலுவலகத்துக்கு அழைத்த கொங்கல்நகர மின்சாரத் துறை உதவிப் பொறியாளர் சத்தியவாணிமுத்து, மின் மீட்டர் பொறுத்தி இணைப்பு தர ரூ. 2 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த விவசாயி ஜெயராமன் இது குறித்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய இரண்டாயிரம் ரூபாய்த் தாள்களை லஞ்சமாக உதவி மின் பொறியாளர் சத்தியவாணிமுத்துவிடம் விவசாயி ஜெயராமன் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு காத்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் உதவிப் பொறியாளர் சத்தியவாணிமுத்துவைப் பிடித்தனர். இதைத் தொடர்ந்து, சத்தியவாணிமுத்துவிடம் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.