திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை பெரும் அரசியல் புயலாக மாற்றியதில், ஆந்திராவின் துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு முக்கியப் பங்குண்டு. லட்டு தொடர்பாக வெவ்வேறு வகையில் அரசியல் பேசிய பவன் கல்யாண் திருப்பதியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், “சனாதனம் என்பது வைரஸ் போன்றது. அதை அழிக்க வேண்டும் என்று தமிழகத்தில் ஒருவர் பேசி உள்ளார். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், இதை யார் சொன்னார்களோ.. அவர்களுக்குச் சொல்கிறேன்.
உங்களால் சனாதனத்தை அழிக்க முடியாது. அதை அழிக்க நினைத்தால் நீங்கள்தான் அழிந்து போவீர்கள். உங்களை போன்று பலர் வந்து சென்றுவிட்டனர். சனாதனம் அப்படியே தான் இருக்கிறது” எனப் பேசினார். இது குறித்து, தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, “ wait and see” என்று மட்டுமே பதிலளித்தார்.
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினின் புகைப்படத்தை கால்மிதியில் பொறித்து அதை மிதிப்பது போன்ற ஒரு வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது!
கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக பின்பற்றுகிறேன் என்பதற்கான சான்றிதழாகவே இதனைப் பார்க்கிறேன். தந்தை பெரியார் மீது செருப்புகளை வீசினர். அண்ணல் அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். பேரறிஞர் அண்ணாவை வசைபாடி மகிழ்ந்தனர். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் மீது ஏச்சுக்களையும் – பேச்சுக்களையும் தொடுத்தனர். நம் கழகத் தலைவர் மீது வீசப்படாத கடுஞ்சொற்கள் இல்லை.
அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. பிறப்பாலும் – மதத்தாலும் பிரித்தாளும் கொள்கையைப் பேசி மக்களை வெல்ல முடியாத அவர்களின் விரக்தி தான் நம்முடைய வெற்றி. என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும்.
கழக உடன்பிறப்புகள் இதைக்கண்டு கோபமுற வேண்டாம். இதற்கு எதிர்வினையாற்றுவதை – உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்து, தந்தை பெரியார் – அண்ணல் அம்பேத்கர் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் – கழகத்தலைவர் அவர்கள் வழியில் பகுத்தறிவு – சமத்துவப் பாதையில் என்றும் அயராது நடை போடுவோம்!” எனப் பதிவிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…