Gold Price: தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.560 குறைவு!

‘பண்டிகை காலம் வருது…தங்கம் விலை குறையுமா?’ என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ். இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்துள்ளது.

கடந்த மாதக் கடைசியில், அதாவது செப்டம்பர் மாதம் 24-ம் தேதி, கிராமுக்கு ரூ.7,000 ஆகவும், பவுனுக்கு ரூ.56,000 ஆகவும் விற்பனை ஆனது. தங்கம் விலை ரூ.56,000-த்தை தொடுவது அதுவே முதல் முறையாகும். அன்றிலிருந்து தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டே வந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை, தங்கம் விலை கிட்டதட்ட ரூ.57,000-த்தை நெருங்கிவிட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,120-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.56,960-க்கும் விற்பனை ஆனது.

Gold Price: இனியும் குறையுமா?

இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,100-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.56,800-க்கும் விற்பனை ஆனது. இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.7,030-க்கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.56,240-க்கும் விற்பனை ஆனது.

‘நான் மட்டும் சும்மாவா’ என்பது மாதிரி வெள்ளி விலையும் தங்கம் விலை மாதிரி அதிகரித்துக்கொண்டே தான் வந்தது. இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.100 ஆகும்.

தீபாவளி வந்துவிட்டது…அலுவலகத்தில் போனஸ் தர ஆரம்பித்திருப்பார்கள். இந்த நிலையில், தங்கம் விலை குறைந்துள்ளது மக்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சிகரமான செய்தி தான்.

தற்போது சர்வதேச அளவில் போர் பதற்றம், பணவீக்கம், பொருளாதார நிலையின்மை, தங்கம் மீதான அதிக முதலீடு ஆகிய காரணங்களால், தங்கம் விலை தொடர்ந்து குறையும் என்பதை எதிர்பார்க்க முடியாது.