அ.தி.மு.க அமைப்பு செயலாளரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கடந்த நவம்பர் 8-ம் தேதி கட்சியில் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். குமரியில் நடந்த ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை தொடங்கி வைத்ததால்தான் கட்சி பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளரான சுகுமார் சமீபத்தில் அவர் ஊரில் நடைபெற்ற இந்து முன்னணி ஊர்வலத்தில் பங்கேற்று இருக்கிறார். ஆனால், அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுதான் அதிமுக முழுக்க பேச்சாக இருக்கிறது.
இதுதொடர்பாக அ.தி.மு.க சீனியர்கள் சிலரிடம் பேசும்போது, “ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை தொடங்கி வைத்த காரணத்தால் தளவாய் சுந்தரம் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலும், அதன் பின்னணியில் அவரின் செயல்பாடும் இருக்கிறது. பாஜக-வுக்கு ஆதரவான மனநிலை கொண்ட தளவாய், அதுதொடர்பாக கட்சி கூட்டங்களிலேயே வெளிப்படையாக பேசி இருக்கிறார். குறிப்பாக தலைமை குறித்தும் அவதூறாக பேசியிருக்கிறார். இதற்கு சமயம் பார்த்து காத்திருந்த தலைமை, ஊர்வல விவகாரத்தை வைத்து அவரது கட்சி பொறுப்பை பறித்து இருக்கிறது.
இருப்பினும், பிற அமைப்புகளின் ஊர்வலத்தில் பங்கேற்பது என்பது அதிமுகவின் அடிப்படை கொள்கைக்கு எதிரானது. எனவேதான், அதை மையமாக வைத்து தளவாய் சுந்தரத்தின் பொறுப்பு பறிக்கப்பட்டது.
அதேநேரத்தில், சமீபத்தில் நடந்த இந்து முன்னணி ஊர்வலத்தில் பங்கேற்ற ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சுகுமாரின் பதவியை பறிக்காமல் தலைமை வேடிக்கை பார்ப்பது விசித்திரமாக இருக்கிறது. ஒரே மாதிரியான தவறு செய்த இருவருக்கும் ஒரே மாதிரி தண்டனை கொடுப்பதுதான் நல்ல தலைமைக்கு அழகு. ஆனால், தளவாயை மட்டும் நீக்கிவிட்டு, சுகுமாரை தலைமை விட்டுவைக்கிறது. இதன்மூலம், தளவாய் தலைமையின் செயல்பாடுகளை விமர்சனம் செய்ததற்கு அவரின் பொறுப்பு பறிக்கப்பட்டு இருக்கிறது என்பதை தலைமை சொல்கிறதா? அப்படியென்றால் இந்து முன்னணி ஊர்வலத்தில் பங்கேற்றது தவறு இல்லை என்பதுதானே பொருளாகிறது.
சுகுமார் மீது ஏற்கனவே பல பஞ்சாயத்துக்கள் இருக்கிறது. இறந்து மூன்று ஆண்டுகள் ஆனவருக்கெல்லம் பதவியை கொடுத்தார். அதேபோல, அ.தி.மு.க-வில் இருக்கும் யாரும் பிற சாதிய அமைப்புகளில் இருக்கக்கூடாது என்பது கட்சியின் அடிப்படை விதி. ஆனால், மா.செ சுகுமார் முதலியார் சங்கம் ஒன்றையும் லோக்கலில் நடத்துகிறார். தற்போது இந்து முன்னணி ஊர்வலத்திலும் பங்கேற்று இருக்கிறார். ஆனாலும், அவர்மீது தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை.” என்றனர் விரிவாக.