மதுரை எஸ்.டி.பி.ஐ கட்சியின் தொழிற்சங்கம் சார்பில் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உழைப்பாளர் உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது, “எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக துணிவுடன் எதிர்க்கும் தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ளார்.
தி.மு.க மற்றும் பா.ஜ.க ஆகிய இரு பெரும் கட்சியை எதிர்த்து எஸ்.டி.பி.ஐ கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டார் எடப்பாடி பழனிசாமி.
தமிழ்நாட்டில் மன்னர் காலத்திற்கு பிறகு பரம்பரை ஆட்சி நடத்தும் தி.மு.க, ஜனநாயகத்தை படுகுழிக்குள் தள்ளியுள்ளது. எதற்கு மக்களை சந்தித்து வாக்கு கேட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றியுள்ளது.
தி.மு.க, தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க-வை எதிர்ப்பது, தேர்தலுக்கு பிறகு ஆதரிப்பதாக உள்ளனர். தி.மு.க-வினருக்கு மடியில் கணம் இருப்பதால் வழியில் பயம் இருக்கிறது. அதனால் வெளியில் எதிர்த்துக்கொண்டு உள்ளுக்குள் பா.ஜ.க சொல்வதை செய்கிறார்கள்.
தேர்தலுக்கு முன்பு இருந்த பா.ஜ.க-வின் திமிரை விட, தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க-வின் திமிர் வேறாக உள்ளது. தேர்தலுக்கு முன்பு 400 சீட் என்றார்கள், ஆனால் இன்றைக்கு மைனாரிட்டி ஆட்சியாக இருக்கிறார்கள். எனவே சிறுபான்மை மக்களை அடக்கி விடமுடியாது என்பதை எச்சரிக்கும் மாநாடாக எஸ்.டி.பி.ஐ-யின் தொழிற்சங்க மாநாடு திகழ்கிறது. தி.மு.க அரசின் செயல்பாடுகளை கண்டித்து அ.தி.மு.க சார்பில் மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட இருக்கிறது” என்று பேசினார்.