இன்று சென்னை மெரினாவில் நடைபெற்ற ‘விமான சாகச நிகழ்ச்சி’ (Air show) நிகழ்ச்சியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு, கூட்ட நெரிசலிலும் போக்குவரத்து நெருக்கடியிலும் சிக்கித் தவித்துள்ளனர்.
இந்த விமான சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் இரண்டு வாரங்களாக நடைபெற்றது. விமான சாகசப் பயிற்சிகள், அதிகாரிகளுக்குப் பந்தல் அமைப்புகள், மக்களுக்குக் கடற்கரையில் உட்கார்ந்து பார்க்க தடுப்பு ஏற்பாடுகள், பார்க்கிங் வசதிகள் எனப் பல ஏற்படுகள் இந்நிகழ்ச்சிக்காக செய்யப்பட்டது. 1000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் இதற்காக களமிறக்கப்பட்டிருந்தனர். ஆனால், உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே பந்தல் அமைப்பு, பாதுகாப்பு, அவர்களுக்காகப் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு மட்டுமே காவல்துறையினர் அதிகம் பயன்படுத்தப்பட்டு, மக்களுக்கானப் பாதுகாப்பைக் கொடுப்பதில் அலட்சியம் காட்டியதாக மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
லட்சக்கணக்கான பேர் அங்குக் கூடுவது எதிர்பாராமல் நடந்த விஷயமல்ல. இந்த நிகழ்ச்சியில் 15 லட்சம் பேர் பங்கேற்கப் போவதாக ஊடகங்களில் இரண்டு நாள்களாகச் செய்திகள் வலம் வந்தன. அதைப் பார்த்தும்கூட அவ்வளவு பேர் கூடுவதற்காக முன் ஏற்பாடுகள் செய்யாதது கவனக்குறைவையும், அலட்சியத்தையும் மட்டுமே காட்டுகின்றன. குறிப்பாக, மெரினா செல்பவர்களுக்குப் போதுமான போக்குவரத்து ஏற்பாடுகள் இல்லை, சென்றுவிட்டு வீடு திரும்புவர்களுக்கும் போதுமான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. லட்சக்கணக்காண மக்கள் கூடும் இடத்தில் குடிநீர் போன்ற அடிப்படையான வசதிகள்கூட போதுமானதாக வழங்கப்படவில்லை. கொளுத்தும் வெயிலில் மயக்கம் போடும் நிலையில் கூட்ட நெரிசலில் நின்றிருந்தார்கள் அங்கிருந்த மக்கள். இவையெல்லாம் அங்கிருந்த மக்களின் குமுறல்கள்.
பல லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் ஒன்று கூடியதால் சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல், கூட்ட நெரிசல், குழந்தைகளை வைத்துக் கொண்டு எங்கும் நகர முடியாத நிலை என மக்கள் தவித்துப் போய் கடும் வெயிலில் நின்றனர். ரயில், மெட்ரோ, பேருந்துகளில் தொங்கியபடி செல்லும் நிலை ஏற்பட்டிருகிறது. ஒரு ரயிலுக்காக ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. குடிநீர், சரியான திட்டமிடல், லட்சக்கணக்கான மக்கள் திரும்பி செல்வதற்கான ஏற்படுகள், போக்குவரத்து ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகளின் போதாமையால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருக்கின்றனர். கூட்ட நெரிசல் மற்றும் வெயில் தாக்கம் காரணமாக பலர் மயக்கம் போட்டு விழுந்தனர்.
அதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில், மூன்று பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர்.
லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் முறையான அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள், சரியான முன் ஏற்பாடுகள் இல்லாததே காரணம் என்று அங்கிருக்கும் மக்கள் குமுறுகின்றனர். அரசு இதில் கவனக்குறைவுடன் அலட்சியமாக செயல்பட்டிருக்கக் கூடாது என்பதே அங்கிருக்கும் மக்களின் வேதனைக் குரலாக இருக்கிறது.