புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் 4 ஆம் நாள் நவராத்திரி திருவிழாவில் விறகு விற்ற லீலை அலங்காரத்தில் மீனாட்சியம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
மீனாட்சியம்மன் கோயிலில் வருகின்ற 12 ஆம் தேதிவரை நடைபெறவுள்ள நவராத்திரி விழாவில் தினந்தோறும் பல்வேறு அலங்காரத்தில் மீனாட்சியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
விழாவின் 4 ஆம் நாளான நேற்று கோயில் வளாகத்தில் உள்ள சுவாமி சன்னதியின் 2 ஆம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் மீனாட்சியம்மன் விறகு விற்ற லீலை சிறப்பு அலங்காரத்தில் தலையில் விறகும், கையில் யாழை ஏந்தியவாறு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நவராத்திரி உற்சவ விழாவையொட்டி சிவபெருமான் மதுரையில் நிகழ்த்திய திருவிளையாடல்களை எடுத்துக்காட்டும் வகையில் அமைக்கப்பட்ட கொலு மண்டபத்தில் 13 அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு திருவிளையாடல் புராணங்கள் இடம் பெற்றுள்ளன.
கொலுமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகளை காண வந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பார்த்து சென்றனர். விறகு விற்ற லீலை சேவை அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனை மக்கள் மனமுருக தரிசனம் செய்தனர்.