“திரைப்படத் துறையிலிருந்து வந்து தனி கட்சி, தனி கொடி அமைத்து, வெற்றி பெற்றவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் ஒருவர் மட்டும்தான். ஜெயலலிதாகூட கிடையாது…” என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறியிருக்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு மக்களுக்கு நன்றி தெரிவித்து சிவகங்கையில் முக்கிய வீதிகள் வழியாக காங்கிரஸ் கட்சி சார்பில் நடைப்பயணம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தலைமை வகித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசும்போது, “தேர்தல் சமயத்தில் மட்டும் வாக்கு கேட்டு பொதுமக்களை நாடிச் சென்றால் எந்த பயனும் இருக்காது. தேர்தல் இல்லாத காலங்களிலும் மக்களின் பிரச்னைகளுக்கும் பொது பிரச்னைகளுக்கும் போராட வேண்டும். அப்போதுதான் மக்கள் நமக்கு வாக்களிப்பார்கள்” என்றவர், செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஹரியானாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் முதலமைச்சராவார், அங்கு தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியமைக்கும். காஷ்மீரிலும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்றவரிடம்,
“வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் உங்கள் நிகழ்ச்சிகளுக்கு கூட்டணி கட்சியினர் கலந்துகொள்வதில்லையே?” என்ற கேள்விக்கு,
“தேர்தலில் வெற்றி பெற்றதற்கு கூட்டணி கட்சியினருக்கு நன்றி தெரிவித்த பிறகுதான் எங்கள் கட்சியினருக்கும், பொது மக்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றேன். அந்தந்த ஊர்களில் கூட்டணி கட்சியினர் கலந்துகொள்கிறார்கள்.” என்றவரிடம்,
“தி.மு.க அரசு குறித்து அடிக்கடி விமர்சித்து வருகிறீர்களே” என்ற கேள்விக்கு,
“பொதுப் பிரச்னையை பேசுவது ஒரு மக்கள் பிரதிநிதியின் கடமை. அந்தக் கடமையைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்” என்றவர் தொடர்ந்து பேசும்போது, “சிவகங்கையில் பெண் காவலர் பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தேன், அதனை முதல்வரும் ஏற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தார். ஆனால், தற்போது உள்துறை செயலாளர் சாத்தியமில்லை என தெரிவித்திருப்பது அனைவருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனை முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றவரிடம்,
“நடிகர் விஜய் நடத்தவுள்ள மாநாடு” குறித்த கேள்விக்கு,
“திரை உலகிலிருந்து வந்து தனக்கென்று ஒரு கட்சியை உருவாக்கி, ஒரு கொடியை அமைத்து, வெற்றி பெற்றவர் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ஒருவர்தான். மற்ற எந்த நடிகரும் தனியாக கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்றதில்லை. செல்வி ஜெயலலிதாகூட இருக்கின்ற ஒரு கட்சியில் இணைந்துதான் தலைவரானார். எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாரும் தன்னிச்சையாக தனிக்கட்சி தொடங்கி வெற்றி பெற்றதாக வரலாறு கிடையாது” என்றார்.